0
ஈசனின் அருளால் துறவியாக மாறிய பட்டினத்தார், ஆரம்ப காலங்களில் தனது சொந்த ஊரிலேயே இருந்து வந்தார். ஆனால் சொத்துக்களின் மீது பற்றில்லாமல் இருந்தார். அதனால் அந்த சொத்துக்களை அவரது சகோதரியும் அனுபவித்து வந்தார். தன் சகோதரன் மீண்டும் மனம் மாறி வந்துவிட்டால், சொத்துக்கள் பறிபோய் விடுமே என்று அச்சப்பட்ட பட்டினத்தாரின் சகோதரி, அவருக்கு அப்பத்தில் விஷத்தை தடவிக் கொடுத்தார். அனைத்தையும் அறியும் சக்தியைப் பெற்றிருந்த பட்டினத்தார், அந்த அப்பத்தை வாங்கி வீட்டின் கூரையில் சொருகி வைத்து விட்டு, ”தன் வினை தன்னைச் சுடும். ஓட்டு அப்பம் வீட்டைச் சுடும்” என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். மறுநொடியே அந்த வீடு பற்றி எரிந்தது. இதனால் அவரது சக்தியை அனைவரும் அறிந்து கொண்டனர்.
அதேபோல் தன் தாயிடம், ”அம்மா.. நீங்கள் இறந்ததும் உங்களுடைய இறுதிச்சடங்கை செய்ய கண்டிப்பாக வருவேன்” என்று வாக்குறுதி அளித்திருந்தார், பட்டினத்தார். அதன்படி தாய் இறந்த செய்தி கேட்டதும், அங்கு விரைந்துசென்றார், பட்டினத்தார். அவர் வருவதற்குள் இறுதிச்சடங்கை முடித்துவிட வேண்டும் என்று அவரது உறவினர்கள் அனைவரும் சிதையை மூட்டும் வேலையில் அவசரம் அவசரமாக ஈடுபட்டனர். கொள்ளி வைக்கப்போகும் தருணத்தில் அங்கு வந்து விட்ட பட்டினத்தார், சிதை மூட்டுவதற்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த காய்ந்த விறகுகளை அகற்றிவிட்டு, பச்சை வாழை மட்டையை அடுக்கி, அதன்மேல் தாயை படுக்கவைத்து தீ மூட்டினார். அவரது சக்தியின் காரணமாக அந்த பச்சை வாழை மட்டைகள் மளமளவென்று எரிந்தன. ஊராரும் உறவினர்களும் வாயடைத்து போய் நின்றனர். ஆனால் அவை எதைப்பற்றியும் கவலைப்படாமல் அங்கிருந்து அகன்றுவிட்டார், பட்டினத்தார்.