ஜெர்மனியில் ஒரு செவிலியர், 10 நோயாளிகளைக் கொன்றது மற்றும் மேலும் 27 பேரைக் கொலை செய்ய முயன்றது ஆகிய குற்றங்களுக்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பொது வெளியில் பெயர் வெளியிடப்படாத அந்த ஆண் செவிலியர், இரவு பணியின்போது தனது பணிச்சுமையைக் குறைக்கும் முயற்சியில், பெரும்பாலும் வயதான நோயாளிகளுக்கு வலி நிவாரணிகள் அல்லது மயக்க மருந்துகளைச் செலுத்தினார் என்று அரசு வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டினர்.
இந்தக் குற்றங்கள் மேற்கு ஜெர்மனியில் உள்ள வூர்சலென் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் டிசம்பர் 2023 முதல் மே 2024 வரை செய்யப்பட்டுள்ளன.
அவரது தொழில் வாழ்க்கையில் நடந்த மேலும் பல சந்தேகத்திற்கிடமான சம்பவங்களையும் புலனாய்வாளர்கள் விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப்படம்
ஏஎஃப்பி ஊடகத்தின்படி பெயர் வெளியிடப்படாத அந்த நபர் 2007 இல் செவிலியர் பயிற்சியை முடித்துள்ளார். 2020 முதல் வூர்சலென் மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார்.
உயர் மட்ட கவனிப்பு தேவைப்படும் நோயாளிகளிடம் அவர் சலிப்பையும், இரக்கம் இல்லாமையையும் காட்டியதாக நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர். மேலும், அவர் ‘பிறருடைய வாழ்வையும் மரணத்தையும் நிர்ணயிக்கும் நபர் போல’ செயல்பட்டதாகவும் குற்றம் சாட்டினர்.
இரவு பணியின்போது தனது பணிச்சுமையைக் குறைக்கும் முயற்சியில், அவர் நோயாளிகளுக்கு அதிக அளவு மார்பின் மற்றும் ஒரு வகை மயக்க மருந்தான மிடசோலம் ஆகியவற்றைச் செலுத்தினார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
அவர் 2024 இல் கைது செய்யப்பட்டார்.
ஆயுள் தண்டனையை அறிவித்தபோது, அந்த ஆண் செவிலியரின் ‘குற்றங்களின் தீவிரத்தைக் குறிப்பிட்டு’, இவர் 15 ஆண்டுகளை சிறையில் கழித்த பிறகும் கூட முன்கூட்டியே விடுதலை செய்யப்படுவதற்கு அனுமதிக்கப்படக் கூடாது என்று நீதிமன்றம் கூறியது.
இந்தத் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்யலாம்.
பாதிக்கப்பட்டவர்களை அடையாளம் காண சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வருவதாகவும், இது அந்த நபரை மீண்டும் விசாரணைக்கு உட்படுத்த வழிவகுக்கும் என்றும் அரசு வழக்கறிஞர்கள் ஏஎஃப்பியிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு, முன்னாள் செவிலியரான நீல்ஸ் ஹேகல் வழக்கை ஒத்திருக்கிறது. அவர் வடக்கு ஜெர்மனியில் உள்ள இரண்டு மருத்துவமனைகளில் 85 நோயாளிகளைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு, 2019-இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
1999 மற்றும் 2005-க்கு இடையில் அவர் கவனிப்பில் இருந்தவர்களுக்கு மரணத்தை விளைவிக்கும் அளவு இதய மருந்துகளை அளவுக்கதிகமாக செலுத்தினார் என்று நீதிமன்றம் கண்டறிந்தது.
நவீன ஜெர்மனியின் வரலாற்றில் அதிகமானோரைக் கொன்றவர் அவர் தான் என்று நம்பப்படுகிறது.