0
ஜெர்மனியில் தற்போது பெருமளவிலான பணியாளர் தட்டுப்பாடு நிலவி வருவதால், வெளிநாட்டு புலம்பெயர் பணியாளர்களின் தேவை கணிசமாக உயர்ந்துள்ளது. செவிலியர்கள், ஆசிரியர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள் உள்ளிட்ட பல முக்கிய துறைகளில் மனிதவள பற்றாக்குறை தீவிரமாக உள்ளது. இதற்கு முக்கிய காரணங்களாக, ‘பேபி–பூமர்’ தலைமுறை என அழைக்கப்படும் வயதான பணியாளர் குழு ஓய்வு பெறத் தயாராக இருப்பதும், நாட்டின் பிறப்பு வீதம் தொடர்ச்சியாக குறைந்து வருவதும் குறிப்பிடப்படுகின்றன.
ஒருபுறம் ஜெர்மனியில் வெளிநாட்டு பணியாளர்களுக்கான தேவை அதிகரித்துக் கொண்டிருக்க, மறுபுறம் வெளிநாடுகளில் வேலை செய்து கூடுதல் வருமானம் ஈட்ட விரும்பும் பலரும் ஜெர்மனியை விருப்ப நாடாகத் தேர்வு செய்கிறார்கள். இருப்பினும், நடைமுறையில் புலம்பெயர் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள், அவர்களை நீண்ட காலம் ஜேர்மனியில் தங்கி பணியாற்றுவதிலிருந்து விலக்குவதாக கூறப்படுகிறது.
மாணவர் விசாவில் ஜெர்மனிக்கு வருபவர்கள், பின்னர் பணி விசா அல்லது நிரந்தர பணி அனுமதி பெற நீண்ட காலம் காத்திருக்க வேண்டிய நிலை பலருக்கும் உள்ளது. இலங்கை, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பெரும் செலவில் வேலைக்காக வருபவர்களுக்கு, ஜெர்மனி மொழி ஒரு முக்கிய தடையாக மாறுகிறது. அதே நேரத்தில், வெளிநாட்டவர்கள் என்பதன் காரணமாக பாகுபாடு அல்லது இனவெறுப்பு அனுபவங்களை சந்திப்பதாகவும் சிலர் தெரிவிக்கின்றனர்.
இந்தச் சூழலில், ஜெர்மனியில் நிலவும் பணியாளர் தட்டுப்பாட்டை உண்மையாகவே சமாளிக்க வேண்டுமெனில், வெளிநாட்டு பணியாளர்களை பாரபட்சமின்றி அணுகுதல், பணி அனுமதி வழங்கும் நடைமுறைகளை எளிமைப்படுத்துதல், அரசு அதிகாரிகள் தாமதமின்றி உதவுதல் போன்ற நடவடிக்கைகள் அவசியம் என வலியுறுத்தப்படுகிறது. குறிப்பாக, பணியாளர் பற்றாக்குறை கடுமையாக உள்ள ஜெர்மனி மருத்துவமனைகள் மற்றும் சமூக சேவை அமைப்புகளிலிருந்து இந்தக் கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.