1
தீபாவளி பண்டிகை தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதிலும் ஏன் உலக நாடுகளிலும் கூட வழக்கமான உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதாவது வாழ்வில் மன இருள் அகன்று இறையருள் பெருக கொண்டாடும் திருநாளாக இந்த தீப ஒளி திருநாள் தீபாவளி கொண்டாடப்படுகின்றது. நரகாசுரனை மகாவிஷ்ணு வதம் செய்து வெற்றி கொண்ட நாள் இது என்பதாகும். தான் சாகும் முன் தான் மறைந்த நாளை உலகில் உள்ள அனைவரும் மகிழ்ச்சி திருநாளாக இனிப்புகள் உண்டு தீபமேற்றி கொண்டாட வேண்டும் என்ற வரத்தினை நரகாசுரன் கேட்டதாகவும் அதனை மகாவிஷ்ணுவும் கொடுத்ததாகவும் ஐதீகம் அதன்படி தீபாவளி பண்டிகை என்பது காலங்காலமாக வெகு விமர்சையாக உலகம் முழுவதும் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை தான் இந்த தீபாவளி. பண்டிகைகள் இந்திய கலாச்சாரத்தின் குறிப்பிடத்தக்க ஒரு பகுதியாகும். மக்கள் தங்கள் கவலைகளை மறந்து குடும்பத்துடன் உற்றார் உறவினருடன் இருப்பதற்காகவே பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. பண்டிகையில் சமூக வாழ்வில் கட்டமைப்புகளையும் சேர்ப்பதோடு குடும்ப உறவுகளை இணைக்கும் பாலமாக இவை விளங்குகின்றன. இந்நிலையில் கால மாற்றத்துக்கு தகுந்த போல் பண்டிகை ஒரு சில மாற்றங்கள் பெற்றுள்ளன.
தீபாவளி கொண்டாட்டம்:
இந்தியா அதன் கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய விழாவிற்காக உலகம் முழுவதிலும் அறியப்படுகின்றது. பண்டிகைகள் இந்தியாவின் கலாச்சாரத்தை சிறப்பாக படம் பிடித்துக் காட்டுகின்றன. தமிழகத்தில் தீபாவளி ஒரு நாள் மட்டுமே ஆனால் வட இந்தியாவில் இது ஐந்து நாட்கள் கொண்டாடப்படுகின்றது. தீப ஒளி திருநாள் என அழைக்கப்படும் இத்திரு நாளை விளக்குகள், மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் திருவிழாவாக இது ஒவ்வொரு மாநிலத்திற்கும் கொண்டாட்டங்கள் வேறுபடுகின்றன. அதன்படி சீக்கியர்களின் புனித தளமான பொற்கோவிலில் கட்டிடப் பணிகள் தீபாவளி அன்று தொடங்கப்பட்டதால் ஒவ்வொரு தீபாவளி அன்றும் வீடுகள் மற்றும் ஆலயங்களில் தீபமேற்றி மக்கள் கொண்டாடுகின்றனர். குஜராத் மாநிலத்தில் தீபாவளியானது புத்தாண்டாக கொண்டாடப்படுகின்றது ஆம் புதிய கணக்கு துவங்குவது,புதிய தொழில் துவங்குவது, திருமணத்துக்கு நாள் குறிப்பது போன்ற நல்ல காரியங்களை இவர்கள் செய்வார்கள்.மழை வரும் என்ற என்ற நம்பிக்கையில் மக்கள் தீபங்களை ஏற்றி வழிபடுகின்றார்கள். மகாராஷ்டிராவில் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜி போரில் எதிரியை வென்ற நாளாக தீபாவளி கொண்டாடப்படுகின்றது.
மேற்கு வங்காளத்தில் தீபாவளி ஆண்டு காளி பூஜை கொண்டாடப்படுகின்றது, வீதிகள் தோறும் காளி சிலைகள் அமைத்து அதனை வழிபாடு செய்து கொண்டாடுகின்றனர் மேலும் மேற்கு வங்காளம் ஒடிசா போன்ற மாநிலங்களில் தங்கள் முன்னோர்களை சொர்க்கத்துக்கு வழி அனுப்பும் நாளாக இந்த நாளை கருதி வெகு விமர்சையாக கொண்டாடுகின்றனர். புத்த மதத்தினர் மாமன்னர் அசோகர் அனைத்தையும் துறந்து விட்டு தீபாவளி தினத்தன்று புத்த மதத்திற்கு மாறியதால் அந்நாளை பௌத்தர்கள் “அசோக விஜயதசமி” ஆக கொண்டாடுகின்றனர். சமணர்கள் மகாவீரர் முக்தி அடைந்த நாளாக தீபாவளி தினத்தை அனுசரிக்கின்றனர். இவ்வாறு பல மாநிலங்களிலும்ஏன் பல உலக நாடுகளிலும் தீபாவளி பண்டிகை என்பது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்திய சீன எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் பிரச்சனைக்குரிய பகுதிகளில் இருநாட்டு படைகளும் விளக்கிக் கொள்ளப்பட்டு சீன வீரர்களுக்கு இந்திய ராணுவ வீரர்கள் இனிப்புகளை வழங்கி பண்டிகை கொண்டாடியுள்ளனர்.
கொடி கட்டி பறந்த பொருட்களின் விற்பனை:
இந்தியாவில் பல்வேறு மதங்கள் பல்வேறு சமூகங்களை சார்ந்த மக்கள் வாழ்ந்தாலும் அந்த மத வகையிலான பண்டிகைகள் கொண்டாடப்பட்டு தான் வருகின்றன அந்த வகையில் தீபாவளி பண்டிகையினை உற்சாகமாகக் கொண்டாட புத்தாடைகள், இனிப்பு வகைகள்,வீட்டு உபயோக பொருட்கள்,பட்டாசு, தங்க நகைகள் போன்றவற்றை கடந்த ஒரு வாரமாக மக்கள் கூட்டம் கடைகளில் அதிகரித்தது. இது தவிர ஆன்லைன் வாயிலாக மக்கள் விரும்பி வாங்கினார்கள் பண்டிகை காலங்களை ஒட்டி சிறப்பு தள்ளுபடி (special discount) அறிவிக்கப்பட்டதாலும், வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு கடன் அட்டைகள்(credit card) மற்றும் லோன்(Loan), மாதத் தவணை திட்டம்(monthly installment) மூலம் பொருட்களை வழங்கி விற்பனையை அதிகரித்துள்ளது.மேலும் மத்திய மாநில அரசு ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு இரண்டு வாரங்களுக்கு முன்பே போனஸ் தொகை வழங்கப்பட்டதால் மக்கள் பொருட்களை வாங்குவதற்கு மிக ஆர்வம் காட்டினார்கள். இதனால் நேரடி விற்பனை மூலம் ரூபாய் 50,000 கோடி அளவிற்கு விற்பனையும் ஆன்லைன் மூலமாக ரூபாய் 10000 கோடி அளவிற்கு விற்பனை நடைபெற்றுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் சிவகாசியில் 1,150 பட்டாசு ஆலைகளில் 4 லட்சம் தொழிலாளர்களால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் ஏற்றுமதி செய்யப்பட்டன.
மழை உள்ளிட்ட காரணங்களால் 75 சதவீத அளவுக்கு மட்டுமே பட்டாசு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்தியா முழுவதும் விற்பனைக்காக அனுப்பப்பட்ட 95 சதவீத பட்டாசுகள் ரூ.6 ஆயிரம் கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக பட்டாசு வணிகர்கள் தெரிவித்துள்ளனர். தமிழக அரசின் நிறுவனமான ஆவின் நிறுவனம் தான் தயாரித்து உள்ள இனிப்பு மட்டும் கார வகைகளை தமிழகம் முழுவதும் விற்பனை செய்து ரூபாய் 115 கோடி அளவிற்கு வருவாய் கிடைத்துள்ளது இது கடந்தாண்டே காட்டிலும் 10 கோடி ரூபாய் அதிகமாகும். அதேபோல தீபாவளி பண்டிகை ஒட்டி ஆடுகளின் விற்பனையும் அதிகரித்துள்ளது ஆம் பிரசித்தி பெற்ற எட்டயபுரம் மற்றும் மதுரை மாவட்டம் திருமங்கலம் ஆட்டுச் சந்தையில் ரூபாய் 4 கோடி அளவிற்கு ஆடுகள் விற்று தீர்ந்துள்ளன.
பண்டிகை கால திண்டாட்டங்கள்:
நகர்புறங்களில் வழக்கமாக காலை மாலை வேலைகளில் மக்கள் கூட்டம் அலைமோதும். அதுவும் பண்டிகை காலம் என்று வந்து விட்டால் கேட்கவே வேண்டாம். பொருட்களை வாங்குவதற்கு கடைகளுக்கு செல்வதும், சொந்த ஊர் செல்வதற்கு தயாராகவதற்கும் மக்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் ஆம் பணியின் காரணமாக புலம்பெயர்ந்து வாழும் பலரும் பண்டிகை காலம் என்பது சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய கட்டாயத்தை உண்டாக்கி விடுகின்றது. நகரங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளை காட்டிலும் தங்களது சொந்த ஊரில் அதுவும் கிராம பகுதியில் கொண்டாடும் பண்டிகைகளுக்கு எப்பவுமே தனி சிறப்பு உண்டு அதனாலே பலர் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல திட்டமிடுகின்றனர். கிராமப்புறங்களில் உள்ளவர்கள் தான் பெரும்பாலும் கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிலுக்காக நகரங்களில் குடியேறி இருக்கின்றார்கள்.குறிப்பாக சென்னையில் இருந்து மட்டும் 7 லட்சம் பேர் ரயில் பஸ் கார் போன்றவற்றில் சொந்த ஊருக்கு சென்றனர். சென்னையில் வழக்கமாக வெளியூர்களுக்கு இயக்கப்படும் ரயில்களோடு 48 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. இந்த ரயில்களில் 4 லட்சம் பேர் பயணம் செய்ததாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது. சிறப்பு ரயிலில் கூட்டம் அலைமோதியதால் முன்பதிவில்லாத பெட்டிகளில் நின்றுபடியும் கழிவறைகள் மற்றும் படிக்கட்டுகளில் தொங்கிய படியும் பயணம் செய்தது மனதை பதற செய்தது.தமிழக போக்குவரத்து துறை சார்பில் வழக்கமாக சென்னையிலிருந்து இயக்கப்படும் 2092 பேருந்துகளோடு2125 பேருந்துகள் இயக்கப்பட்டன.
எந்த ஆண்டும் இல்லாமல் இந்த ஆண்டு தமிழக அரசின் சார்பில் தனியார் பேருந்துகளை ஒப்பந்த அடிப்படையில் இயக்கியது பயணிகளிடம் வரவேற்பை பெற்றது.மேலும் மற்ற நகரங்களில்1130 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது இந்த சிறப்பு பேருந்துகளில்1.50 லட்சத்துக்கு மேற்பட்டோர் முன்பதிவு செய்து இருந்தனர் மேலும் 3.20 லட்சத்துக்கு மேற்பட்டோர் பயணம் செய்துள்ளனர்.வழக்கம் போல எரிகின்ற வீட்டில் பிடுங்குனது லாபம் என்ற கதையாக இந்த ஆண்டும் தனியார் ஆம்னி பேருந்துகள் கட்டணக் கொள்ளையில் ஈடுபட்டன சாதாரணமாக ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் டிக்கெட்டை 3000 முதல் 4000 ரூபாய்க்கு வரை விற்பனை செய்தார்கள்.இதில் கொடுமை என்னவென்றால் ஆன்லைன் மூலமும் அடிக்கப்பட்டது இதனால் பொதுமக்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகினர் பிழைப்பிற்காக சென்னை போன்ற பெறுநகரில் உள்ள மக்கள் ஏற்கனவே தீபாவளி பண்டிகைக்காக பல ஆயிரம்க்களை செலவு செய்துள்ளனர். நான்கு பேர் கொண்ட குடும்பத்தினர் சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு ஆம்னி பேருந்துகளில் செல்ல அதிக தொகை செலவிட வேண்டி உள்ளது.குறைவான ஊதியத்தில் பணியில் இருக்கும் ஒரு நபர் இவ்வளவு செலவு செய்து அப்படி ஊருக்கு செல்ல வேண்டுமா பண்டிகை கொண்டாட வேண்டுமா என நொந்து போகும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த கட்டண கொள்ளையை அரசு கண்டும் காணாமல் இருப்பது வேதனை அளிக்கிறது.
அதிகரித்த காற்றின் மாசு:
தீபாவளியன்று வெடிக்கப்படும் பட்டாசுகள் PM10 மற்றும் PM2.5, சல்ஃபர் டை ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைட்ஸ், கார்பன் மோனாக்சைடு மற்றும் மெட்டல் துகள்களை வெளியிடுவதன் மூலம் காற்று மாசுபாட்டை ஏற்படுத்துகின்றன. பட்டாசுகளில் இருந்து வெளிவரும் இதுபோன்ற உமிழ்வுகள் தீபாவளி கொண்டாட்டங்களுக்கு பிறகும் கூட வளிமண்டலத்தில் நீண்ட நாட்கள் தேங்கி காற்றின் தரத்தையும் மற்றும் நம்முடைய ஆரோக்கியத்தையும் பாதிக்கும் என்ற அதிர்ச்சி தகவல் பலருக்கும் தெரியாத ஒன்று.அதிக ஒலி மற்றும் வண்ண நிறங்கள் வேண்டும் என்பதற்காக பட்டாசுகளில் ரசாயனங்கள் அதிக அளவில் கலக்கப்படுகின்றன இது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டும். இது நமக்கு மட்டுமல்ல விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் இதனால் பெரும் ஆபத்துகள் விளைகின்றன.பல்வேறு நகரங்களிலும் காற்று மாசு அதிகரித்துள்ளது. முன்பெல்லாம் பட்டாசுகள் குறைவாக தான் வெடிப்பார்கள் குறைவான தொகைக்கு தான் பட்டாசுகள் வாங்குவார்கள் ஆனால் தற்போது அவ்வாறு இல்லை ஒவ்வொருவருக்கொருவர் போட்டி போட்டுக் கொண்டு பட்டாசுகளை வெடிக்கின்றார்கள். புதுடெல்லியில் ஏற்பட்ட காற்று மாசு போன்று தமிழகம் உட்பட உள்பட பல மாநிலங்கள் இதனால் பாதிக்கப்படக் கூடாது.இந்த நிலையில், தீபாவளி பண்டிகை காரணமாக சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளதாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. தீபாவளி பண்டிகையை ஒட்டி பட்டாசு வெடிக்கப்படும் நிலையில், சென்னையில் காற்றின் தரம் மோசமடைந்துள்ளது.
உடனடி தேவைகளும் தீர்வுகளும்:
அரசு பெருகிவரும் மக்கள் தொகைக்கு ஏற்ப திட்டமிடாமல் ஏனோ தானோ என்று இருந்து விடுகின்றது இதனால் யானை பசிக்கு சோளப்பொறி போல ஆகிவிடுகிறது.ரயில்கள் மற்றும் பேருந்துகள் என்பது எளிய மக்கள் பயன்படுத்துகின்றனர். பண்டிகை மற்றும் விசேஷ காலங்களில் தங்களின் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தனியார் பேருந்துகளில் அதிகளவு கட்டணம் கொடுத்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.மேலும் வட இந்தியாவுக்கு செல்லும் ரயில்களில் கூட கூட்டம் அலை மோதுவதால் பயணிகள் செய்வது அறியாது தவிர்த்து வருகின்றனர் தினக்கூலிகளாக சென்னை போன்ற பெரு நகரங்களில் வந்து வேலை செய்யும் எளிய மக்கள் மிக கஷ்டத்திற்கு உள்ளாகின்றனர் அவர்களுக்கு தகுந்த வசதிகளை அரசு செய்து கொடுக்க வேண்டும்.மேலும் பொதுமக்களும் ஒழுங்கு முறைகளை கடைபிடிப்பதில்லை முண்டியடித்துக் கொண்டு பேருந்துகள் மற்றும் ரயில்களில் ஏறுவது போன்றவற்றால் மிகப்பெரிய பிரச்சனைகள் ஏற்படுகின்றன. பண்டிகை காலங்களில் அதிகரிக்கும் வாகன பெருக்கங்களால் நெடுஞ்சாலைகளில் காலதாமதமும் விபத்துகளும் ஏற்படுவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன.இதில் பெரும்பாலான மக்கள் வேலைக்காக மட்டுமே நகரங்களில் தங்கி இருக்கும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர் அவர்களுக்கு அவர்கள் சொந்த பகுதியிலேயே வேலைவாய்ப்புக்கு உறுதி அளிக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் அவ்வாறு செய்தால்தான் நகரங்களில் உள்ள நெருக்கடிகள் குறையும் இல்லை என்றால் நகரங்கள் வீக்கம் அடைந்து கொண்டே தான் செல்லும்.
நூறு ஆண்டுகளுக்கு முன்பு சென்னை 72 சதுர கிலோமீட்டர் மட்டுமே மக்கள் தொகை 5 லட்சம் மட்டும் தான் ஆனால் தற்பொழுது 2023 கணக்கின்படி 426 சதுர கிலோமீட்டர் சுமார் ஒரு கோடி மக்கள் வாழ்கின்றனர் இவர்கள் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் தேடி மற்ற பகுதிகளில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் தான் அவர்கள் பகுதியிலேயே வேலைவாய்ப்பை உறுதி செய்து விட்டால் இந்தப் பிரச்சினையை எளிதில் தீர்க்கலாம். தீபாவளியை முன்னிட்டு ஆண்டுதோறும் அத்தியாவசிய பொருட்கள் விலை மிக மிக அதிகரித்துள்ளது இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். இந்த நிலை மாற வேண்டும். அரசு இதனை தடுக்க வேண்டும்.கடன் வாங்கி வரவுக்கு மீறி செலவு செய்து கொண்டாடுபவர்கள் பலர் உள்ளார்கள். இதனால் அவர்கள் கடனை கட்ட முடியாமல் தவித்து வருகின்றனர் இந்த நிலை மாற வேண்டும் இருப்பதை வைத்து செலவு செய்து வாழும் முறைக்கு நாம் கண்டிப்பாக மாற வேண்டும். சுற்றுப்புற சூழலை பாதுகாக்கும் நோக்கில் அரசின் வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.எனவே அரசும் பொதுமக்களும் இணைந்து தான் இவற்றை கையாள வேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே வருங்காலம் சிறப்பாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
மனோஜ் சித்தாார்த்தன்