0
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் (Julie Chung), இலங்கையில் தனது தசாப்த கால இராஜதந்திரப் பணிகளை நிறைவு செய்து புறப்படுவதை முன்னிட்டு, வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தைச் சந்தித்து விடைபெற்றார்.
இதன்போது, 2022 ஆம் ஆண்டு முதல் 2026 ஆம் ஆண்டு வரையிலான தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா மற்றும் இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துவதற்கும், மேம்படுத்துவதற்கும் அவர் மேற்கொண்ட தொடர்ச்சியான முயற்சிகளுக்காக அமைச்சர் விஜித ஹேரத் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொண்டார்.
குறிப்பாக, அண்மையில் இலங்கையைப் பாதித்த ‘டித்வா’ சூறாவளி அனர்த்தத்தின் போது, பாதிக்கப்பட்ட மக்களுக்கான அமெரிக்காவின் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்வதற்காக உரிய அரச அதிகாரிகளுடன் இணைந்து அவர் மேற்கொண்ட துரிதமான ஒருங்கிணைப்புப் பணிகள் மற்றும் வழங்கிய ஒத்துழைப்புகளை அமைச்சர் இதன்போது விசேடமாக நினைவு கூர்ந்தார். தூதுவர் ஜூலி சங் அவர்களின் அடுத்தகட்டப் பணிகள் மற்றும் எதிர்கால இராஜதந்திர முன்னெடுப்புகள் அனைத்தும் வெற்றியடைய அமைச்சர் தனது மனமார்ந்த வாழ்த்துகளையும் இதன்போது தெரிவித்துக் கொண்டார்.



