• Thu. Nov 6th, 2025

24×7 Live News

Apdin News

பதிவுத்துறை உதவி தலைவர், மாவட்ட பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் : அன்புமணி | anbumani condemns dmk govt over govt employees job promotion

Byadmin

Nov 6, 2025


சென்னை: பதிவுத்துறை உதவித் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பதிவுத்துறை உதவித் தலைவர் பணிக்கான பதவி உயர்வுப் பட்டியல் முறையாக தயாரிக்கப்படவில்லை; இந்த விஷயத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்பு பின்பற்றப்படவில்லை என்று நான் குற்றஞ்சாட்டியிருந்த நிலையில், அதை மறுத்துள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை, அனைத்து நடைமுறைகளும் உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியும், விதிகளை பின்பற்றியும் தான் வெளியிடப்பட்டதாக விளக்கம் அளித்திருக்கிறது. இது அப்பட்டமான பொய் ஆகும். ஓர் அரசே அதன் தவறுகளை மறைக்க பொய் கூறுவது கண்டிக்கத்தக்கது.

பதிவுத்துறை உதவித் தலைவர் பதவி உயர்வு தொடர்பான விஷயத்தில் நான் முன் வைத்திருந்த குற்றச்சாட்டே,’’இந்தக் குழப்பங்கள் அனைத்துக்கும் காரணம், உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படியான பணிமூப்புப் பட்டியல் முறையாக வெளியிடப்படாதது தான். அந்தப் பட்டியல் வெளியிடப்பட்டால் தான், தகுதியானவர்களுக்கு பணிமூப்பு வழங்கப்பட்டிருக்கிறதா? என்பதை சரிபார்க்க முடியும்.

அந்த வாய்ப்பை வழங்காமல் நேரடியாக பதவி உயர்வு ஆணை தயாரிக்கப்பட்டால், தகுதியானவர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதா? என்பது யாருக்கும் தெரியாது. பதவி உயர்வில் முறைகேடுகள் நடப்பதற்கு தான் இது வழி வகுக்கும்” என்பது தான். இது தொடர்பாக விளக்கமளித்துள்ள பதிவுத்துறை.’’உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே 2009-10 முதல் 2019-2020 வரையிலான ஆண்டுகளுக்கான மாவட்டப் பதிவாளர் தேர்ந்தோர் பெயர்பட்டியல் இடஒதுக்கீடு மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தயாரிக்கப்பட்டு ஒருங்கிணைந்த பட்டியலாக 02.02.2024 நாளிட்ட அரசாணையின்படி வெளியிடப்பட்டது” என்று கூறியுள்ளது.

பதிவுத்துறையால் சுட்டிக்காட்டப்படும் அரசாணைகள், வணிகவரி மற்றும் பதிவுத்துறை (எச்.2) 22 முதல் 32 வரையிலான எண்களைக் கொண்டவை. இந்த அரசாணைகள் வெளியிடப்பட்டு, சம்ப்ந்தப்பட்ட பணியாளர்களுக்கு சார்பு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்த முக்கியக் கடமையை பதிவுத்துறை செய்யவில்லை. அரசாணைகளை பொதுவெளியில் வெளியிட்டதையும், சம்பந்தப்பட்ட பணியாளர்களுக்கு சார்பு செய்ததையும் திமுக அரசால் நிரூபிக்க முடியுமா?

G.O.(3D)No.10 Revenue and Disaster Management Department Services wing, Services 3(2) Section Dated.13.01.2023 -இன்படி வருவாய்த்துறையில் தகுதிகாண் பருவத்தை நிறைவு செய்யாத உதவியாளர்களுக்கு பணிவிதி விலக்கு அளித்து துணை வட்டாட்சியர்களாக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதே நடைமுறையை பதிவுத்துறை உதவித் தலைவர் பணிக்கான பதவி உயர்வு வழங்குவதில் பதிவுத்துறை பின்பற்றாதது ஏன்? யாருடைய பதவி உயர்வை தடுப்பதற்காக திமுக அரசு இவ்வாறு செய்தது?

பதவி உயர்வுக்கான தகுதி காண் நாளில், எந்த வித குற்றச்சாட்டுக்கும் ஆளாகாத பல சார்பதிவாளர்களின் பெயர்கள் பதவி உயர்வுக்கான பட்டியலில் விடுபட்டிருக்கிறது. தகுதியின்றி பதவி உயர்வு பெற்ற 7 பேர் மாவட்ட பதிவாளர் பணியியிலிருந்து பதவி இறக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழ்நாடு அரசு அறிவித்த பிறகும், அந்த 7 பேரும் இன்று வரை மாவட்டப் பதிவாளர்களாக பணி செய்வது எப்படி என்பதை பதிவுத்துறை விளக்குமா?

பதிவுத்துறை உதவித் தலைவர் பணி நியமனத்தில் அப்பட்டமாக விதிமீறலை நிகழ்த்தியுள்ள திமுக அரசு, அதை மறைப்பதற்காக பொய்களை கட்டவிழ்த்து விடக் கூடாது. எனவே நான் ஏற்கனவே வலியுறுத்தியதைப் போல, பதிவுத்துறை உதவி ஐஜி பணிக்கான பதவி உயர்வுப் பட்டியல் திரும்பப்பெறப்பட வேண்டும்.

ஒருங்கிணைந்த பணிமூப்புப் பட்டியலை பதிவுத்துறை உடனடியாக வெளியிட வேண்டும்; அது குறித்து சம்பந்தப்பட்டவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்து உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதல்களின் அடிப்படையில் பதிவுத்துறை உதவித் தலைவர், மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பணிகளுக்கும் பதவி உயர்வு வழங்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.



By admin