2
அத்திலாந்திக் சமுத்திரத்தில் உருவான ‘வெதர் பாம்’ (Weather Bomb) என அழைக்கப்படும் அதிதீவிர ‘கொரெட்டி’ (Goretti) புயலின் தாக்கத்தால், இங்கிலாந்தின் இயல்பு வாழ்க்கை முழுமையாக சீர்குலைந்துள்ளது.
ஸ்கில்லி தீவுகள் (Isles of Scilly) பகுதியில் மணிக்கு 99 மைல் வேகத்தில் பலத்த காற்று வீசியதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தென்மேற்கு இங்கிலாந்தில் 44,000-க்கும் அதிகமான வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டு, பல்லாயிரக்கணக்கான மக்கள் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அதிக மின் தடைகள் பதிவான பகுதி தென்மேற்கு இங்கிலாந்தாகும். அங்கு வியாழக்கிழமை ‘உயிருக்கு ஆபத்து’ எனக் குறிக்கும் அரிய சிவப்பு காற்று எச்சரிக்கை வெளியிடப்பட்டது. பின்னர் அந்த சிவப்பு எச்சரிக்கை முடிவுக்கு வந்தாலும், மிட்லண்ட்ஸ் மற்றும் வேல்ஸ் (Midlands, Wales) பகுதிகளில் 30 சென்டிமீட்டர் வரை பனிப்பொழிவு ஏற்படக்கூடும் என்பதால் ‘ஆம்பர் எச்சரிக்கை’ (Amber Warning) தொடர்ந்தும் அமலில் உள்ளது.
இது கடந்த பத்து ஆண்டுகளில் பதிவான மிக மோசமான பனிப்பொழிவாக இருக்கக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து முழுவதும் பயண சேவைகள் கடுமையாக பாதிக்கப்படலாம் என தேசிய ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. பர்மிங்காம் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டாலும், குறைந்த அளவிலான சேவைகளே வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பர்மிங்காம் விமான நிலையத்தின் ஓடுபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதுடன், பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அனர்த்த நிலைமையை கருத்தில் கொண்டு நூற்றுக்கணக்கான பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதோடு, பொதுமக்கள் தேவையற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஸ்காட்லாந்து, இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளின் பெரும்பகுதிகளில் பனிப்பொழிவுக்கான மஞ்சள் எச்சரிக்கைகள் 12:00 GMT வரை அமலில் உள்ளன. அதேபோல், வடக்கு அயர்லாந்தில் 11:00 GMT வரை பனி எச்சரிக்கை நடைமுறையில் உள்ளது.