0
பயங்கரவாதக் குற்றங்களுக்காகக் கைது செய்யப்படும் சிறுவர்களின் எண்ணிக்கையில் ஒரு கவலைக்கிடமான அதிகரிப்பை இலண்டன் நகரம் எதிர்கொண்டுள்ளது.
இங்கிலாந்து மண்ணில் பயங்கரவாதத் தாக்குதல்களைத் திட்டமிட்ட குற்றங்களுக்காக வாரத்திற்கு கிட்டத்தட்ட ஒரு சிறுவர் கைது செய்யப்படுவதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டில், பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸாரால் 43 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் சிலர் 11 வயதுடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெடிகுண்டுகள் தயாரிப்பது மற்றும் வெகுஜன துப்பாக்கித் தாக்குதல்களைத் திட்டமிடுவது உள்ளிட்ட குற்றங்களுக்காக இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு நடந்த மொத்த 232 பயங்கரவாத கைதுகளில், ஐந்தில் ஒரு பங்கு, அதாவது 17 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஆவர்.
தீவிரவாதக் குழுக்கள் இளம் சிறுவர்களை ஸ்னாப்சாட் (Snapchat) மற்றும் டிக்டாக் (TikTok) போன்ற சமூக ஊடக தளங்களில் குறிவைத்து, அவர்களை டெலிகிராம் (Telegram) போன்ற என்க்ரிப்ட் செய்யப்பட்ட chat rooms-இல் சேருமாறு தூண்டுவதாக, பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் இரகசிய அதிகாரி ஒருவர் LBCக்கு அளித்த பிரத்யேக நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இந்த chat rooms-இல் “பயங்கரவாத கையேடுகள்” பகிரப்படுகின்றன, இதில் வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான வழிமுறைகளும், 3D அச்சிடப்பட்ட துப்பாக்கிகளை உருவாக்குவதற்கான கையேடுகளும் அடங்கும்.
“இந்த அச்சுறுத்தலை உருவாக்கும் நபர்கள் உண்மையில் குற்றங்களைச் செய்வதில்லை. மற்றவர்களை ஊக்குவிக்கவே அவர்கள் விரும்புகிறார்கள், மற்றவர்களுக்கு ஆதாரங்களை வழங்குகிறார்கள், தனிநபர்களைத் தூண்டுகிறார்கள், அவர்களின் குறைகளை பெரிதாக்குகிறார்கள், அவர்களை வெளியே சென்று தாக்குதல் நடத்த ஊக்குவிக்கிறார்கள். இளைஞர்களுடன் இதைச் செய்கிறார்கள்” என்று அவர் கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலானோர் தீவிர வலதுசாரி பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்கள். இருப்பினும், கடந்த ஆண்டில் இஸ்லாமிய தீவிரவாதத்தால் தூண்டப்பட்ட கைதுகளின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது.