“பயங்கரவாத ஆபத்தை ஒழிக்க இணைந்து செயல்படுவோம்” – அழைப்பு விடுக்கும் பாகிஸ்தான் அமைச்சர்
பயங்கரவாத ஆபத்தை ஒழிக்க இணைந்து செயல்பட வேண்டும் என பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் இஷாக் தார் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
பிபிசி செய்தியாளர் ஆஸடே மொஷிரிக்கு பேட்டி அளித்த அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இஸ்லாமாபாத்தில் பேட்டி அளித்த அவர், பாகிஸ்தான் மக்கள் குழப்பத்திலும், கோபத்திலும் இருந்தனர் என்றார்.
இந்திய ஊடகங்களில் வெளியான தகவல்களை சுட்டிக்காட்டிய அவர்,” இஸ்லாமாபாத்தை இந்தியா அழித்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. நீங்கள் இஸ்லாமாபாத்தில் அமர்ந்துதான் என்னோடு பேசிக்கொண்டுள்ளீர்கள். கராச்சி துறைமுகம் வரைபடத்தில் இருந்தே மறைந்து விட்டதாக கூறினார்கள். நீங்கள் தாராளமாக அங்கு சென்று பார்க்கலாம்” என்று பேசினார்.
பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகள் அல்லது முன்னாள் தீவிரவாதிகளை கண்காணிக்கும் விவகாரத்தில் பாகிஸ்தான் என்ன சமரசங்களை செய்ய தயாராக உள்ளது? என்ற மொஷிரியின் கேள்விக்கு பதிலளித்த இஷாக்தார், “பயங்கரவாதத்தால் முதலாகவும் மோசமாகவும் பாதிக்கப்பட்டவர்கள் நாங்கள்தான். பயங்கரவாதத்துக்கு எதிரான போரில் 90,000 பேரை இழந்துள்ளோம். ஆனால் இரண்டு தரப்பும் சேர்ந்து ஒன்றாக வேலை செய்தால்தான் பயங்கரவாதத்தின் ஆபத்தை ஒழிக்கமுடியும்.” என்றார்.
எங்களுடன் இணைந்து செயல்பட , இந்தியாவுக்கு விருப்பம் இல்லை எனில், இரண்டு அல்லது மூன்று உலகளாவிய கூட்டாளிகளை எங்களால் பெற முடியும் என இஷாக் தார் கூறினார்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு