• Sun. Jan 25th, 2026

24×7 Live News

Apdin News

பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்கான இழுத்தடிப்பு உத்தியா? | சுமந்திரன்

Byadmin

Jan 25, 2026


முன்னைய அரசாங்கங்களினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பன அவற்றுக்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்ட போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையிலேயே இருப்பதாக சுட்டிக்காட்டிய இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்டவரைவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்கான ஒரு இழுத்தடிப்பு உத்தியோ என சந்தேகிக்க தோன்றுவதாக தெரிவித்தார்.

தற்போது நடைமுறையில் உள்ள 1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்டம் எனும் புதிய சட்டத்தைக் கொண்டு வருவதற்கு அவசியமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

அதனை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ள சட்டவரைவு நீதியமைச்சின் உத்தியோகபூர்வ இணையத்தளப்பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளதுடன். அதுப்பற்றிய கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை எதிர்வரும் பெப்ரவரி  மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் தமக்கு அனுப்பி வைக்குமாறு  நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவித்துள்ளார்.

அவ்வ இவ்வாறானதொரு பின்னணியில் இச்சட்ட வரைவு தொடர்பில் ஏற்கெனவே தீவிர கரிசணையையும், அதிருப்தியையும் வெளிப்படுத்தியிருந்த எம். ஏ. சுமந்திரன், இச்சட்ட வரைவின் பிரகாரம் குறித்த ஒரு நபர் மீது பொலிஸார் சந்தேகம் கொள்ளும்பட்சத்தில் அவரது  சகல இலத்திரனியல் உபகரணங்களையும் பரிசீலிக்க முடியும் எனவும் இது மிகவும் ஆபத்தானதொரு போக்கு எனவும் சுட்டிக்காட்டினார்.

‘பொலிஸாரின் விசாரணைக்கு இது உதவியாக அமைந்தாலும் ஒருவரது சகல இலத்திரனியல் உபகரணங்களையும் ஆராய்வதற்கு இடமளிப்பது என்பது மிகவும் ஆபத்தானதாகும். ஏனெனில் அரசியல்வாதிகள், சட்டத்தரணிகள் என பல்வேறு தொழில்புரிவோரின் தொலைபேசி,கணினி உள்ளிட்ட இலத்திரனியல் உபகரணங்களில் பல இரகசியத் தகவல்கள் இருக்கக்கூடும்.

அவ்வாறிருக்கையில் நீதிமன்றத்தின் ஊடாக  கட்டளை ஒன்றைப் பெற்று அவற்றை ஆராய்வது வேறு விடயம். ஆனால் அவ்வாறு அனுமதியின்றி தன்னிச்சையாக ஆராய்வது என்பது தனிமனித சுதந்திரத்தையும், சமூகத்தின் சுதந்திரத்தையும் பாதிப்பதாகவே அமையும்.’என அவர் கரிசணை வெளியிட்டார்.

அதேபோன்று முன்னைய அரசாங்கங்களினால் கொண்டுவரப்பட்ட பயங்கரவாத ஒழிப்புச் சட்டமூலம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் என்பன அவற்றுக்கு எதிராக எழுந்த கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து கைவிடப்பட்ட போதிலும் பயங்கரவாத தடைச்சட்டம் இன்னமும் நடைமுறையிலேயே இருக்கிறது எனத் தெரிவித்த சுமந்திரன், எனவே தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் புதிய சட்டவரைவும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறையில் வைத்திருப்பதற்கான ஒரு இழுத்தடிப்பு உத்தியோ என சந்தேகிக்க தோன்றுவதாக குறிப்பிட்டார்.

By admin