பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்காக தங்களது விளைநிலங்களை அரசு கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் நடத்தும் போராட்டம் 900 நாட்களைக் கடந்திருக்கிறது. அங்கே கள நிலவரம் என்ன?
சென்னையிலிருந்து 70 கி.மீ. தூரத்தில் காஞ்சிபுரத்துக்கு அருகில் உள்ள பரந்தூர் மற்றும் அதனை ஒட்டியுள்ள கிராமங்களில் புதிய விமான நிலையத்துக்காக விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதை எதிர்த்து நடந்துவரும் போராட்டம் 900 நாட்களைக் கடந்திருக்கிறது.
இந்த நிலையில்தான் திங்கட்கிழமையன்று (ஜன. 20) தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் நடிகருமான விஜய், இந்தப் பகுதிக்கு வருகை தந்து, தங்களைச் சந்தித்து ஆதரவளித்தது புதிய உத்வேகத்தைத் தந்திருப்பதாக போராட்டக்காரர்கள் கருதுகிறார்கள்.
“இந்தப் போராட்டத்துக்கு உறுதியாக துணை நிற்பேன் என்று சொல்லிச் சென்றிருக்கிறார் விஜய். அவர் இங்கே வந்திருப்பது நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். விஜய் இங்கே வருவதாக தகவல் வெளியானதிலிருந்து இந்த விவகாரம் மீண்டும் செய்திகளில் அடிபட ஆரம்பித்தது. விவாதங்கள் நடைபெற்றன. ஆகவே, அவருடைய வருகையும் ஆதரவும் இந்தப் போராட்டத்துக்கு நிச்சயம் வலு சேர்க்கும்” என நம்பிக்கையுடன் பேசுகிறார், ஏகனாபுரம் கிராம குடியிருப்போர் மற்றும் விவசாயிகள் நலக் கூட்டமைப்பின் செயலாளரான க. சுப்பிரமணியன்.
தங்கள் பகுதியில் நிலமெடுப்பதை எதிர்த்து, 2022ஆம் ஆண்டிலிருந்து கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டுகளாக தொடர் போராட்டத்தை இப்பகுதி மக்கள் நடத்திவருகின்றனர். ஏகனாபுரத்தில் உள்ள நாகாத்தம்மன் கோவிலுக்கு முன்பாக, தினமும் மாலையில் அமர்ந்து இந்தப் போராட்டத்தில் இவர்கள் ஈடுபடுகின்றனர். தற்போது 910 நாட்களைக் கடந்திருக்கும் நிலையில்தான் விஜய் இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறார்.
சென்னைக்கு என இன்னொரு விமான நிலையத்தை உருவாக்கும் திட்டம் என்பது சுமார் முப்பது ஆண்டுகளாகவே விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம்தான். 1998ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சென்னைக்கு என புதிதாக ஒரு விமான நிலையத்தைக் கட்டுவது குறித்து ஆலோசித்து வருவதாக, அப்போதைய சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆனந்த் குமார் அறிவித்தார். ஆரம்பத்தில் இந்த விமான நிலையம் மீனம்பாக்கம் விமான நிலையத்துக்கு மேற்கே பத்து கி.மீ. தூரத்தில் போரூருக்கு அருகில் திட்டமிடப்பட்டது. ஆனால், முன்னேற்றமேதும் இல்லை.
பிறகு, 2007ஆம் ஆண்டில் சென்னைக்கென புதியதொரு விமான நிலையத்தை ஸ்ரீ பெரும்புதூருக்கு அருகில் சுமார் 4,820 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக, அப்போதைய முதலமைச்சர் மு. கருணாநிதி அறிவித்தார். 2011வாக்கில் இது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால், இது தொடர்பாக பெரிதாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதற்குள் ஸ்ரீ பெரும்புதூரில் தொழிற்சாலைகள் பெருக ஆரம்பிக்க, புதிய விமான நிலையம் தொடர்பாக பணிகள் ஏதும் நடக்கவில்லை.
இதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு, மீண்டும் இரண்டாவது விமான நிலையம் தொடர்பான பேச்சுகள் அடிபட ஆரம்பித்தன. திருப்போரூர், பண்ணூர், பரந்தூர், படாளம் ஆகிய பகுதிகள் ஆராயப்பட்டு, புதிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படும் என இறுதிசெய்யப்பட்டது. இந்தப் புதிய விமான நிலையம் 4,970 ஏக்கர் நிலத்தில் அமையும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலம், பரந்தூர், வளத்தூர், பொடவூர், நெல்வாய், தண்டலம், மடப்புரம், தொடூர், சிங்கிலிபாடி, குணகரம்பாக்கம், எடையார்பாக்கம், அக்கமாபுரம், ஏகனாபுரம், மகாதேவிமங்கலம் ஆகிய 13 கிராமங்களில் இருந்து கையகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்புக்ப் பிறகுதான், இந்த கிராமங்களைச் சேர்ந்த மக்கள் போராட்டத்தில் இறங்கினர். சென்னை – பெங்களூரு நெடுஞ்சாலையில் காஞ்சிபுரத்துக்கு அருகில் சாலையிலிருந்து உள்ளடங்கி அமைந்துள்ளன இந்த கிராமங்கள் அனைத்தும் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட கிராமங்கள். ஏரி, ஆழ்துளைக் கிணறுகள் ஆகியவற்றின் மூலமும் மழையை ஆதாரமாக வைத்தும் இப்பகுதியில் விவசாயம் நடைபெறுகிறது.
“எனக்கு இந்த ஊரில் 27 சென்ட் நிலம்தான் இருக்கிறது. அதில் விவசாயம் செய்தும் ஆடு, மாடுகளை வைத்தும் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். விவசாயத்தைத் தவிர வேறு எந்த வேலையும் எனக்குத் தெரியாது. என்ன நடந்தாலும் இந்த இடத்தை கொடுப்பதாக இல்லை. இந்த நிலத்தை எடுப்பதற்கு பதிலாக எங்களுக்கு விஷத்தைக் கொடுத்து சாகடித்துவிடலாம். அல்லது ராணுவத்தை வைத்து சுட்டுவிடலாம். எங்களுடைய தந்தை, பாட்டன், முப்பாட்டன் வாழ்ந்த இடம். அதைவிட்டுப் போக முடியாது. எங்களுக்கு இந்த மண்தான் வேண்டும்” என ஆவேசமாகப் பேசுகிறார் ஏகனாபுரத்தைச் சேர்ந்த குமார்.
ஏகனாபுரத்தில்தான் தொடர் போராட்டம் நடக்கிறது என்றாலும், பாதிக்கப்படக்கூடிய மற்ற ஊர்களைச் சேர்ந்தவர்களும் அவ்வப்போது இந்தப் போராட்டத்தில் பங்கேற்கிறார்கள். ஏகனாபுரத்திற்கு அருகில் உள்ள நாகப்பட்டைச் சேர்ந்த கே. முருகன், இதுவரை யாரையும் சாராமல் வாழ்ந்துவிட்ட தங்களை வேறொரு இடத்திற்கு மாற்றினால், இதே போன்ற வாழ்க்கை கிடைக்குமா எனக் கேள்வியெழுப்புகிறார். மேலும், இவரைப் போன்ற நிலமற்ற விவசாயிகளுக்கு வேறு பிரச்னைகள் இருக்கின்றன.
“இந்த ஊரில் 80 குடும்பங்களைச் சேர்ந்த 350 பேர் இருக்கிறோம். விவசாயத்தைத் தவிர வேறு எந்தத் தொழிலும் எங்களுக்குத் தெரியாது. தலைமுறை தலைமுறையாக இதே ஊரில் வாழ்கிறோம். எனக்குச் சொந்தமாக மிகக் குறைவான நிலமே இருந்தாலும், 10 ஏக்கர் நிலத்தை குத்தகைக்கு எடுத்து, அதில் மூன்று போகம் பயிர் செய்து வாழ்கிறேன். இழப்பீடு தருவதாகச் சொல்பவர்கள், என்னைப் போல நிலத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்களின் நிலையை யோசித்துப் பார்த்தார்களா?” எனக் கேள்வியெழுப்புகிறார் கே. முருகன்.
பொதுவாக இதுபோன்ற வளர்ச்சிப் பணிகளுக்காக நிலம் எடுக்கப்படும்போது, நிலத்தின் மதிப்பைப் போல மூன்று மடங்குவரை இழப்பீடு வழங்கப்படுகிறது. ஆனால், எவ்வளவு இழப்பீடு கொடுத்தாலும், தங்கள் நிலத்தைவிட்டுப் போக முடியாது என்கிறார் சுப்பிரமணியன்.
“எவ்வளவு கூடுதல் இழப்பீடு வழங்கிவிட முடியும்? பத்திரப் பதிவு ஏதும் செய்ய முடியாது என்பதால் ஒரு அவசரத்துக்கு நிலத்தை விற்கக்கூட முடியவில்லை. இதனால், 2019ல் இருந்து பொருளாதார நெருக்கடியிலும் மன உளைச்சலில் இருக்கிறோம். இப்போது இங்கே (ஏகனாபுரத்தில்) ஒரு சென்ட் நிலம் சுமார் 13 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. அரசு நாற்பதாயிரம் ரூபாய் தருவதாக வைத்துக்கொள்வோம். சற்று தள்ளியிருக்கும் பரந்தூர் பகுதியில் ஒரு சென்ட் நிலம் மூன்று லட்ச ரூபாய்க்கு விற்கிறது. நாங்கள் இங்கே ஒரு ஏக்கரை அரசுக்குக் கொடுத்துவிட்டு, அங்கே எவ்வளவு நிலத்தை வாங்க முடியும்? இங்கிருந்து பத்து கிலோ மீட்டர் தூரத்தில் ஒரு சதுர அடி நிலம் மூவாயிரத்து ஐநூறு ரூபாய். அங்கே எவ்வளவு நிலத்தை வாங்க முடியும்?” என கேள்வி எழுப்புகிறார்.
பரந்தூர் பகுதி கற்கால கிராமங்கள் இருந்த பகுதியாக தொல்லியல் துறை சொல்கிறது எனக்கூறும் சுப்பிரமணியன், இப்படிப்பட்ட இடத்தில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் தங்களை இங்கிருந்து அகற்றி, தங்களின் அடையாளங்களை அழிப்பது சரியா எனக் கேள்வி எழுப்புகிறார்.
கடந்த ஆண்டு இந்த விமான நிலையத்துக்கு என எந்தெந்த நிலங்கள் கையகப்படுத்தப்படவிருக்கின்றன என்ற அறிவிப்பை வெளியிட்டது அரசு. அதற்குப் பிறகு, ஆகஸட் மாத வாக்கில் அந்த நிலங்களின் உரிமையாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, ஆட்சேபம் இருந்தால் தெரிவிக்கலாம் எனக் கூறப்பட்டது. போராட்டக் குழுவினர் திரண்டு சென்று தங்கள் ஆட்சேபங்களைப் பதிவு செய்தனர். நிலமெடுப்பு முயற்சிகள் அதற்குப் பிறகு நகரவில்லை.
இப்போது விஜய் இப்பகுதிக்கு வந்துசென்ற பிறகு, இந்தத் திட்டம் தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டது தமிழ்நாடு அரசு. பண்ணூருக்குப் பதிலாக பரந்தூர் ஏன் தேர்வு செய்ப்பட்டது என்பது குறித்தும், சென்னைக்கு அருகில் புதிய விமான நிலையத்திற்கான தேவை குறித்தும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
“பண்ணூரில் உள்ள உத்தேசப் பகுதியில் 1,546 குடும்பங்கள் வசிக்கும் நிலையில், பரந்தூரில் 1005 குடும்பங்கள் மட்டுமே வசிக்கின்றன. பண்ணூருடன் ஒப்பிடும்போது இப்பகுதியில் விமானச் செயல்பாடுகளுக்கு மனிதனால் உருவாக்கப்பட்ட தடைகள் குறைவாகவே உள்ளன” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பரந்தூரில் உள்ள உத்தேசத் தளத்தில் போதுமான கட்டமைப்புகள் இல்லை என்றும் பண்ணூர் அருகே உள்ள நிலங்கள், குடியிருப்புகள், தொழிற்சாலைகள் என வளர்ச்சியடைந்துள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
“பரந்தூரைச் சுற்றி காலி இடங்கள் உள்ளதால், எதிர்கால மேம்பாடுகளுக்குத் திட்டமிட முடியும். பண்ணூரில் முன்மொழியப்பட்ட திட்டப்பகுதி, ஸ்ரீபெரும்புதூர் தொழிற்பேட்டைக்கு அருகில் உள்ளது. பண்ணூர் திட்டப் பகுதியின் வளர்ச்சியடைந்த தன்மை, கையகப்படுத்தும் செலவை கணிசமான அளவுக்கு அதிகரிக்கும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடம் 2020ஆம் ஆண்டிலேயே தேர்வுசெய்யப்பட்டுவிட்டது என்றும் டெல்லி விமான நிலையம் 5,106 ஏக்கரிலும் மும்பை விமான நிலையம் 1,105 ஏக்கரிலும் ஹைதராபாத் விமான நிலையம் 5,500 ஏக்கரிலும் பெங்களூரு விமான நிலையம் 4,000 ஏக்கரிலும் அமைந்துள்ளன என்றும் சென்னை விமான நிலையம் 1,000 ஏக்கரில்தான் அமைந்துள்ளது, அளவில் சிறியதாக இருந்தாலும் ஆண்டுக்கு 2 கோடி மக்கள் இந்த விமான நிலையத்தை பயன்படுத்துகிறார்கள் என்கிறது எந்த அறிக்கை. மேலும், அடுத்த பத்தாண்டுகளில் 8 கோடி பேர் சென்னை விமான நிலையத்தைப் பயன்படுத்துவார்கள் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
“அரசியல் கட்சித் தலைவர்கள் யார் வேண்டுமானாலும் பரந்தூர் மக்களைச் சந்தித்து, அவர்களின் குறைகளைக் கேட்டு அரசின் கவனத்துக்குக் கொண்டுவரும் பட்சத்தில் தமிழக அரசு அந்தக் குறைகளை பரிவுடன் ஆராயும்” என அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.
ஆனால், பரந்தூர் பகுதி மக்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக இல்லை. அறவழிப் போராட்டத்தைத் தொடரப் போவதாகவும் தேவைப்பட்டால் நீதிமன்றத்தை நாடப் போவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.