பட மூலாதாரம், Red Giant Movies
ஜனநாயகன் திரைப்படம் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் சான்று கிடைப்பதில் சிக்கலைச் சந்தித்து வரும் நிலையில், தற்போது பராசக்தி படமும் இது தொடர்பான சர்ச்சையில் சிக்கியுள்ளது.
பராசக்தி திரைப்படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்குவதற்கு முன்பு, சுமார் 25 காட்சிகளை நீக்க வேண்டுமென்று மத்திய திரைப்படச் சான்றிதழ் வாரியம் பரிந்துரை செய்துள்ளது.
அவற்றில், படத்தில் இடம்பெற்றுள்ள ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான காட்சிகள் மற்றும் வசனங்கள் சிலவற்றை நீக்குமாறும் மாற்றியமைக்குமாறும் வாரியம் பரிந்துரைத்துள்ளது.
ஹிந்தி எதிர்ப்பு காட்சிகளை நீக்க வலியுறுத்தலா?
திரைப்படத்தில் வரக்கூடிய ஹிந்தி எதிர்ப்பு தொடர்பான பின்னணிக் குரல் வாசகங்களை மாற்றியமைக்குமாறு சான்றிதழ் வாரியத்தால் கோரப்பட்டுள்ளது.
“தீ பரவட்டும், இந்தி என் கனவை அழித்தது” போன்ற சில வார்த்தைகளைப் படத்தில் இருந்து நீக்கவும், மாற்றவும் வாரியம் பரிந்துரைத்துள்ளது. படக்குழுவும் அந்த மாற்றங்களைச் செய்துவிட்டதால் படத்திற்கு யுஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
“தீ பரவட்டும்” என்ற வார்த்தையை “நீதி பரவட்டும்” என்று மாற்றுமாறு வாரியம் பரிந்துரைத்துள்ளது. படத்தில் எந்தெந்த காட்சிகளில், வசனங்களில் எல்லாம் இந்த வாசகம் வருகிறதோ, அனைத்து இடங்களில் இந்த மாற்றத்தைச் செய்ய வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Red Giant Movies
அதேபோல, “ஹிந்தி என் கனவை அழித்தது” என்பது “என் ஒரே கனவை ஹிந்தி திணிப்பு எரித்தது” என்று மாற்றப்பட்டுள்ளது.
மேலும், அதோடு, ‘ஹிந்தி கத்துக்கிட்டு’ என்ற வாசகத்தை மியூட் செய்ய வேண்டுமெனவும், “ஹிந்தி அரக்கி” என்ற வாசகத்தை, அது எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் “அரக்கி” என்பதை வேறு விதமாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, “ஹிந்தி அரக்கி” என்ற வாசகங்களைக் கொண்ட உருவபொம்மை எரிக்கப்படும் காட்சிகள் நீக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
டிரெய்லரில் ரவி மோகன் ஆங்கிலத்தில் கூறுவதாகக் காட்டப்படும், “தேச விரோத……’ என்ற வார்த்தை தணிக்கைக் குழுவின் பரிந்துரையைத் தொடர்ந்து படத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதோடு, தபால் அலுவலக பெயர்ப் பலகையின் மீது மாட்டு சாணத்தைப் பூசும் காட்சிகளும் நீக்கப்பட்டுள்ளன.
அண்ணாவின் வசனம் என்று கூறப்படும், ” எங்களை நீக்கிவிட்டு…” எனத் தொடங்கி “இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என முடியும் ஒரு வசனத்தையும் தணிக்கைக் குழு அறிவுறுத்தியதன் பேரில் படக்குழு நீக்கியுள்ளது.
பட மூலாதாரம், Red Giant Movies
மேலும், திரைப்படத்தில் எங்கெல்லாம் தீக்குளிப்பது தொடர்பான காட்சிகள் காட்டப்பட்டுள்ளனவோ அவற்றை 50% அளவுக்குக் குறைக்க வேண்டுமெனவும் படக்குழுவுக்கு வாரியம் அறிவுறுத்தலை வழங்கியுள்ளது.
யுபிஎஸ்சி தேர்வுகள் ரத்து செய்யப்படுவது, ரயில்வே நேர்காணலுக்கு மொழி வல்லமையின் தேவை ஆகியவற்றைக் காட்டும் இடங்களில் புனைவு என்று குறிப்பிடப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.
‘தனக்கு எதிரான சித்தாந்தங்களை மத்திய அரசு ஒடுக்குகிறது’
பராசக்தி திரைப்படத்தில் வாரியம் அறிவுறுத்தியுள்ள திருத்தங்கள் தொடர்பாகப் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், “மத்திய அரசு தனக்கு எதிரான சித்தாந்தங்களைக் கொண்ட திரைப்படங்களுக்குத் தணிக்கை வாரியத்தின் மூலமாக நெருக்கடி கொடுக்கிறது என்பதை இதன் மூலம் அறியலாம்,” என்று குறிப்பிட்டார்.
“அரசுப் பணித் தேர்வுகளில் ஹிந்தி புலமை அவசியம் என்றெல்லாம் முன்பு இருந்த நிலைமைகளைக் காட்டும் காட்சிகளைப் புனைவு என்று குறிப்பிட வேண்டுமெனக் கூறுவது எந்த விதத்தில் நியாயம்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
பட மூலாதாரம், Red Giant Movies
மேலும் பேசிய அவர், “தமிழ்நாடு ஹிந்தி மொழியை எதிர்க்கவில்லை. ஹிந்தி திணிப்பைத்தான் எதிர்த்தது. ‘ஹிந்தி அரக்கி’ என்ற பதங்கள் பயன்படுத்தப்பட்டு, அவை குறிப்பிடப்பட்ட பதாகைகள் எரிக்கப்பட்டதையெல்லாம் பள்ளிப் பருவத்தில் நான் என் கண் எதிரில் பார்த்துள்ளேன். அப்படி உண்மையில் நடந்தவை. அவற்றைக் காட்டக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளார்கள்.
உண்மையில் ஒரு காலகட்டத்தில் இருந்த நிலைமையை புனைவு என்று கூறுவது கருத்துச் சுதந்திரத்திற்கு எதிரானது. மத்திய அரசின் ஆதரவுடன் வலதுசாரி சித்தாந்தத்தை பேசும் எவ்வளவோ திரைப்படங்கள் எந்தத் தடையுமின்றி வெளியாகியுள்ளன. எந்த ஆதாரமுமின்றி வெளியிடப்பட்ட இந்தப் படங்கள் எவ்வித தடைகளையும் சந்திக்கவில்லை. ஆனால், தமிழ்நாட்டின் வரலாற்றில் முக்கியமான ஓர் அங்கமாக இருக்கும் ஹிந்தி எதிர்ப்பைப் பேசும் திரைப்படம் சித்தாந்த நெருக்கடியைச் சந்திக்கிறது,” என்று கூறினார்.
பட மூலாதாரம், Red Giant Movies
“ஹிந்தி அரக்கி’ என்பதைக் குறிப்பிடுவதால் என்ன தவறு?” என்று கேட்கும் ப்ரியன், “தபால் அலுவலகத்தில் ஹிந்தியில் எழுதப்பட்டிருந்த காரணத்தால் சாணி பூசப்பட்டதும் நடந்த நிகழ்வுதானே, அதை ஏன் நீக்கச் சொல்ல வேண்டும்? மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் வகையிலான படங்களுக்கு ஆதரவளிக்கும் இதே தணிக்கை வாரியம், உண்மை வரலாற்றை மறைக்க ஏன் இவ்வளவு செய்ய வேண்டும்?” என்று விமர்சித்தார்.
“இது கருத்துச் சுதந்திரத்தை ஒழிக்கும் செயல் மட்டுமல்ல, அரசாங்கமே தனது சித்தாந்தத்தை மக்களிடையே திணிக்க முயல்கிறது,” என்றும் அவர் கூறினார்.
‘வரலாற்றை மாற்றி எழுதத் துடிக்கிறார்கள்’
“மத்திய அரசு வரலாற்றை மாற்றி எழுதுவதில் மிகவும் துடிப்பாக இருப்பதே இதன் பின்னணியில் உள்ள காரணம்” என்கிறார் உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்தின் முன்னாள் உறுப்பினருமான வே.பாலு.
“விடுதலைப் போராட்டத்தில் வீர சாவர்க்கர் எழுதிய மன்னிப்புக் கடிதம் அனைவரும் அறிந்த ஒன்று. அப்படி இருந்தும், அவரை முன்னிலைப்படுத்துகிறார்கள். மதம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கவல்ல கேரளா ஸ்டோரி, காஷ்மீர் ஃபைல்ஸ் போன்ற பல திரைப்படங்கள் வெளியாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன. இருப்பினும் அவை மத்திய அரசின் ஆதரவுடன் வெளியாகின.” என்றார் அவர்

”ஆனால், நாட்டின் ஒரு பகுதியில் உள்ள மக்கள், தங்கள் மொழியைப் பாதுகாக்க, பிற மொழித் திணிப்புக்கு எதிராகப் போராடியதை மறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய அரசு, அரசாங்கத்தின் பல துறைகளைத் தன் வசம் வைத்துள்ளதைப் போலவே, தணிக்கை வாரியத்தையும் தன் விருப்பத்திற்கு ஏற்ப செயல்பட வைக்கிறது,” என்று விமர்சித்தார் வே.பாலு.
மேலும் பேசிய அவர், “ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தை தமிழ்நாடு தீவிரமாக எடுத்ததன் காரணம், நூற்றுக்கணக்கான மொழிகளை விழுங்கிக்கொண்ட ஹிந்தி திணிப்பை எதிர்ப்பதுதான். அதற்கான போராட்டங்களை வெற்றிகரமாக நிறைவேற்றிக் காட்டிய மாநிலம் தமிழ்நாடு. இப்படிப்பட்ட வரலாற்றைப் பேசும் ஒரு படத்தில் வரும் அரசியல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்த காட்சிகளை நீக்குவதற்கு முயல்கிறார்கள்” என்கிறார் அவர்.
மேலும், “அண்ணா என்பவர் தமிழ்நாட்டை ஆட்சி செய்த ஒரு தலைவர் என்னும்போது அவரது வசனம் திரைப்படத்தில் வருவதைக்கூட பொறுத்துக்கொள்ள முடியாத நிலையில் மத்திய அரசு இருக்கிறது. இது தமிழ் சார்ந்த எந்த விழுமியங்களையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இல்லை என்பதைக் காட்டுகிறது,” என்றும் குறிப்பிட்டார் வே.பாலு.
பட மூலாதாரம், Narayanan Thirupathy/X
திமுகவும் பாஜகவும் கூறுவது என்ன?
“பராசக்தி படம் மட்டுமல்ல, யார் படமாக இருப்பினும், எந்த விதத்திலும் கருத்துரிமை என்பது எந்தக் காலகட்டத்திலும் தடை செய்யப்படக்கூடாது என்பதே திமுகவின் வாதம்” என்று தெரிவித்தார் திமுக செய்தித் தொடர்பாளர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன்.
மேலும், “தணிக்கை வாரியத்தின் இந்த விளையாட்டை பத்திரிகையிலும் சினிமாவிலும் எனப் பல நேரங்களில் திமுக பார்த்துள்ளது, எதிராகக் குரல் கொடுத்துள்ளது. ஒரு படைப்பாளியின் படைப்புத் திறனில் கை வைப்பதற்கு யாருக்கும் உரிமை இல்லை. நடக்காத விஷயத்தை, வரலாற்றில் இல்லாதவற்றைப் புனைகிறார்கள் என்னும்போது இத்தகைய தடைகளைச் சரியெனக் கூறலாம்.
ஆனால், இங்கு அப்படி நடக்கவில்லை. அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, நீதித்துறை, தணிக்கை வாரியம் என அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் பாஜக தனது விருப்பப்படி செயல்பட வைக்கிறது” என்று கூறினார்.

ஆனால், “இதற்கும் மத்திய அரசுக்கும் என்ன தொடர்பு? பாஜகவுக்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?” என்று கேள்வி எழுப்புகிறார் தமிழக பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி.
“தணிக்கைக் குழு என்பது சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு வேலை செய்கிறது. நான் நான்கு ஆண்டுகள் தணிக்கைக் குழுவில் உறுப்பினராக இருந்துள்ளேன்.
ஒவ்வொரு படத்தையும் பார்க்கும்போது எவ்வித பாரபட்சமும் பார்க்கப்படாது. படத்திற்கென இருக்கும் வரையறைகள் அடிப்படையில், ஆபாசமான காட்சிகளோ, சமுதாயத்திற்கு கேடு விளைவிக்கும் விஷயங்களோ இருந்தால் அவற்றை நீக்குவதற்கு வலியுறுத்தப்படும். இதை ஊடகங்களே அரசியலாக்குகின்றன. மற்றபடி தணிக்கைக் குழுவில் அனைத்தும் விதிப்படியே நடக்கின்றன,” என்று தெரிவித்தார்.
அதோடு, “படத்தையே பார்க்காமல் அதில் எது சரி, எது தவறு, தணிக்கைக் குழு ஏன் நீக்கியது என்று விமர்சித்துக் கொண்டிருக்க முடியாது. அதைப் பார்த்தவர்களுக்குத்தான் அதில் ஏன் சில காட்சிகள் மற்றும் வசனங்களை நீக்க வேண்டிய தேவை எழுந்தது என்பது தெரியும். ஒருவேளை அந்த முடிவில் ஏற்பு இல்லை என்றால் சட்டப்படி அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளும் உரிமையும் இருக்கிறது,” என்று கூறினார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு