0
தமிழின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சிவகார்த்திகேயன்- ரவி மோகன் எதிரும் புதிருமாக நடித்திருக்கும் ‘பராசக்தி’ எனும் திரைப்படம்- ‘ஆபத்தான தீ அல்ல. கடவுள் முன்பு ஏற்றப்படும் அகல் விளக்கு’ என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தேசிய விருது பெற்ற படைப்பை இயக்கிய இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ எனும் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முதன்மையான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
ரவி கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘இசை அசுரன்’ ஜீ. வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார். 1960 காலகட்டத்தில் தமிழகத்தில் நடைபெற்ற அரசியல் போராட்டத்தின் பின்னணியில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார்.
இந்திய மதிப்பில் 250 கோடி ரூபாய் பட்ஜட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படம் எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வில் இந்திய சினிமாவின் தனித்துவமான அடையாளமாக போற்றப்படும் இயக்குநர் மணிரத்னம் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி படத்தின் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
இந்நிகழ்வில் நடிகரும், இயக்குநருமான ரவி மோகன் பேசுகையில், ” பராசக்தி எனும் இந்த தீயை அணைக்க வெளியில் இருந்து பலர் முயற்சி செய்தனர். இந்த தீ ஆபத்தான தீ அல்ல. கடவுள் முன்பு ஏற்றப்படும் அகல் விளக்கு. இந்த படம் சுயமரியாதையை பேசுகின்ற படம்” என்றார்.
இந்த படத்தின் முன்னோட்டம் குறுகிய கால அவகாசத்திற்குள் இரண்டரை கோடிக்கும் மேற்பட்டப் பார்வைகளைப் பெற்று ரசிகர்களை கவர்ந்து வருகிறது.