சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் பராசக்தி திரைப்படம் சனிக்கிழமையன்று (ஜனவரி 10) வெளியாகிறது. இந்தப் படம் தணிக்கைச் சான்றிதழுக்காக அனுப்பப்பட்டபோது, அந்தப் படத்திலிருந்து 20க்கும் மேற்பட்ட விஷயங்களை மாற்றவும் நீக்கவும் சொல்லப்பட்டது. அதில் தமிழக முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையுடன் தொடர்புடைய சில பகுதிகளும் உண்டு. ‘தீ பரவட்டும்’, “அண்ணாதுரைதான் ஆள்கிறான்” ஆகிய இந்த வாசகங்களின் பின்னணி என்ன?
விஜய் நடித்து வெளியாகவிருந்த ஜனநாயகன் திரைப்படம் தணிக்கைச் சான்றிதழைப் பெறுவது தொடர்பான சிக்கலால் வெளியாகவில்லை. இந்த நிலையில், பராசக்தி திரைப்படம் தணிக்கைச் சான்றிதழைப் பெறுவதற்காக அனுப்பப்பட்டபோது, அதிலும் பல மாற்றங்களைச் செய்யும்படி தணிக்கை வாரியம் பரிந்துரைத்திருக்கிறது.
அந்தப் பரிந்துரைகள் மேற்கொள்ளப்பட்ட பிறகு, தற்போது பராசக்தி படத்திற்கு U/A சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தப் பரிந்துரைகளில் சில பிறரை திட்டுவதற்கு பயன்படுத்தும் வார்த்தைகள் தொடர்பானவை. பல பரிந்துரைகள் அரசியல் ரீதியான காட்சிகள் வசனங்கள் தொடர்பானவை. அப்படி தணிக்கை வாரியம் ஆட்சேபித்த இரண்டு முக்கியமான மாற்றங்கள், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை தொடர்பானது.
ஒன்று, ‘தீ பரவட்டும்’ என்ற வாசகம். இந்த வாசகம் எங்கெல்லாம் வருகிறதோ அந்த இடத்தில் எல்லாம் அதனை “நீதி பரவட்டும்” என்று மாற்றும்படி வாரியம் பரிந்துரைத்துள்ளது. அதேபோல, “எங்களை நீக்கிவிட்டு” என்று தொடங்கி “இந்த நாட்டை ஆளுகிறான் என்று பொருள்” என்ற வசனத்தையும் நீக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் இந்தி அரக்கி என்ற கொடும்பாவி எரிக்கும் காட்சிகளை நீக்கவும் ‘இந்தி அரக்கி’ என வரும் இடங்களில் வெறும் ‘அரக்கி’ என மாற்றவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
‘தீ பரவட்டும்’ என்ற வரியும் “இந்த நாட்டை அண்ணாதுரைதான் ஆளுகிறான்” என்ற உரையும் இப்போதும் திராவிட இயக்க மேடைகளில் குறிப்பிடப்படும் வாசகங்களாக இருக்கின்றன. உண்மையில் இந்த வாசகங்களின் பின்னணி என்ன? இந்தி அரக்கி என்ற கொடும்பாவி எங்கே எரிக்கப்பட்டது?
“தீ பரவட்டும்”: அண்ணாவின் வரிகளா?
பரசக்தி திரைப்படத்தைப் பொறுத்தவரை தமிழ்நாட்டில் 1965ல் நடந்த இந்தித் திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்ட படமாக உருவாகியிருக்கிறது. இந்தப் படத்தின் பல காட்சிகளில் சுவற்றில் ‘தீ பரவட்டும்’ என எழுதப்பட்டிருப்பதைப் போல காட்டப்படுகிறது.
ஆனால், இந்த வாசகத்திற்கும் இந்தி எதிர்ப்பிற்கும் தொடர்பில்லை. இது அண்ணா பேசிய உரைகளின் தொகுப்புக்கு இடப்பட்ட ஒரு பெயர். 1943ஆம் ஆண்டு பிப்ரவரி 9ஆம் தேதி, செவ்வாய்க்கிழமையன்று மாலை நான்கரை மணியளவில் சென்னைச் சட்டக் கல்லூரி மண்டபத்தில கம்ப ராமாயணம், பெரிய புராணம் குறித்து ஒரு விவாதம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு இந்து மத பரிபாலன சபையின் தலைவர் ராமச்சந்திரன் செட்டியார் தலைமை வகித்தார். இந்த விவாதத்தில் சி.என். அண்ணாதுரை, ஈழத்தடிகள், ஆர்.பி. சேதுப்பிள்ளை, ஸ்ரீநிவாஸன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
அந்தக் காலகட்டத்தில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவர்கள் கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவற்றை ஆரியக் கருத்துகளை வலுவாக்கும் இலக்கியமாகக் கருதி அவற்றை ஒழிக்கவேண்டுமெனப் பேசிவந்தனர். அதன் தொடர்ச்சியாகவே இந்த விவாதம் நடந்தது. இந்த விவாதம் துவங்குவதற்கு முன்பாக, சட்டக் கல்லூரியில் இருந்த தமிழ்க் கழகத்தைச் சேர்ந்த வேணுகோபால் என்பவர், இந்த விவாதம் ஏன் என்பதை விளக்கினார்.
பட மூலாதாரம், Red Giant Movies
“தமிழருக்குச் செல்வம் போன்ற கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகிய நூல்களை கொளுத்தவேண்டும்; அல்லது அழிக்கவேண்டும் என்று பெரியார் ஈ. வே. இராமசாமி அவர்கள் கூறியது கேட்டுத் தமிழ் மக்கள் கோபம் கொள்வது இயற்கை. ஆனால், சுயமரியாதைக்காரர்களின் தீர்மானத்தைப் புறக்கணிப்பதும் கூடாது, ஆகவே, அது பற்றி அவர்களின் கருத்தை ௮றிய, தோழர் அண்ணாத்துரை அவர்களை அழைத்துள்ளோம். அவருரையை மறுத்துப்பேச, திருவாளர் சேதுப்பிள்ளை வந்திருக்கிறார்கள். இதற்கு நடுநிலைமையாளராக இருக்க, ராமச்சந்திரன் செட்டியார் அவர்கள் வந்திருக்கிறார்கள். விவாதம் மிக மேலான முறையினதாக இருக்கவேண்டுமென விழைகிறேன்'” என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு பேசிய சி.என். அண்ணாதுரை, ராமாயணம் போன்ற புராணங்கள் ஆரியக் கருத்துகளை வலியுறுத்தி, திராவிடர்களை இழிவுசெய்வதாலேயே அவற்றை ஏற்க முடியவில்லை என்று குறிப்பிட்டார். “திராவிட இனத்தை அடக்கவும், பண்பை அழிக்கவும் பயன்பட்டு பாமரரின் மனதைப் பாழாக்குகிறது என்ற குற்றச்சாட்டுகளைக் கூறிக் கம்ப ராமாயணத்தையும் பெரிய புராணத்தையும் கண்டிக்கிறோம்; கொளுத்துக என்று கூறுகிறோம்” என்று குறிப்பிட்டார்.
இதற்குப் பிறகு, சேதுப் பிள்ளை, ஈழத்து அடிகள் உள்ளிட்டோர் பேசினர். சேதுப் பிள்ளையின் கருத்துக்கு சி.என். அண்ணாதுரை பதிலுரை அளித்தார். அத்துடன் அந்தக் கூட்டம் முடிவுக்குவந்தது.
இதற்குப் பிறகு, 1943ஆம் ஆண்டு மார்ச் மாதம் 14ஆம் தேதி சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்கர் பாடசாலை மண்டபத்தில் கம்ப ராமாயணம், பெரிய புராணம் ஆகியவை ஒழிக்கப்பட வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றிய விவாதம் நடந்தது. இவற்றை ஒழிக்க வேண்டுமென சி.என். அண்ணாதுரையும் ஒழிக்கக்கூடாது என பேராசிரியர் ச. சோமசுந்தர பாரதியாரும் பேசினர்.
இந்தக் கூட்டத்திலும் கம்ப ராமாயணம் போன்ற புராணங்கள் தமிழர்களை பின்னுக்கிழுப்பதாகவும் மோசமாகச் சித்தரிப்பதாகவும் கூறிய அண்ணாதுரை, அவற்றைத் தீயிலிட வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
இந்த இரு இடங்களிலும் நடந்த விவாதங்களில் அனைவர் பேசியதும் ஒன்றாகத் தொகுக்கப்பட்டு 1943ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலேயே புதுவை ஞாயிறு பதிப்பகம் வெளியிட்டது. அப்போது அந்த நூலுக்கு வைக்கப்பட்ட பெயர்தான் “தீ பரவட்டும்”. தன் உரையின் எந்த இடத்திலும் அண்ணா இந்த வாக்கியத்தைக் குறிப்பிடாவிட்டாலும், பொருத்தமாக இருக்கக்கூடும் எனக் கருதி அந்தப் பெயர் சூட்டப்பட்டிருந்தது. அந்தப் பதிப்பகமே மூன்று பதிப்புகளை வெளியிட்டது. அதற்குப் பிறகு இந்த நூலை முரசொலி வெளியிட்டது. அதற்குப் பிறகு சென்னையிலிருந்த கலை மன்றம் இந்த நூலை வெளியிட்டது.
பட மூலாதாரம், Twitter
“அந்த அச்சம் இருக்கும்வரை அண்ணாதுரை ஆள்கிறான் என்று பொருள்”
கடந்த சில ஆண்டுகளாக, அண்ணா கூறியதாக ஒரு பிரபலமான மேற்கோள் அடிக்கடி அடையாளம் காட்டப்படுகிறது. அந்த மேற்கோள் இதுதான்: “ஓராண்டுக்கு முன் ஆட்சிக்கு வந்தேன். தாய்த் திருநாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் மாற்றம் உட்பட முக்கியமான சில காரியங்களைச் செய்திருக்கிறேன். இதையெல்லாம் பார்த்துவிட்டு சிலருக்குக் கோபமும் ஆத்திரமும் வருகிறது. “இவர்களை விட்டுவைக்கலாமா?”, “ஆட்சியைக் கலைக்க வேண்டும்” என்று நினைக்கிறார்கள். “முடியுமா?” என்று நான் சவால் விட மாட்டேன். உங்களால் முடியும். ஆனால், ஆட்சியைக் கலைத்துவிட்டு வேறொருவர் இங்கு வந்து உட்கார்ந்து அண்ணாதுரை கொண்டுவந்தவற்றையெல்லாம் மாற்ற வேண்டும் எண்ணும்போதே மக்கள் வெகுண்டெழுவார்களே என்ற அச்சமும் கூடவே எழும் இல்லையா, அந்த அச்சம் இருக்கிறவரையில் இங்கே யார் ஆண்டாலும் அண்ணாதுரைதான் இந்த நாட்டை ஆள்கிறான் என்று பொருள்”.
இந்த மேற்கோளே சற்று மாற்றப்பட்டு பராசக்தியில் பயன்படுத்தப்பட்டு, பிறகு தணிக்கை வாரியத்தின் ஆட்சேபத்தால் நீக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் இந்த வடிவத்திலோ, இந்த வரிசையிலோ அண்ணா இதனைப் பேசவில்லை.
1968ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதி சென்னையிலிருந்த பாலர் அரங்கத்தில் சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு எனப் பெயர் சூட்டியது தொடர்பாக ஒரு விழா நடைபெற்றது. அந்த விழாவில் அப்போதைய முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை கலந்துகொண்டு பேசினார். அவர் மரணமடைவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் நடந்த இந்த நிகழ்வில், மிகுந்த உடல் நலக் குறைவுக்கு மத்தியில் சுமார் 15 நிமிடங்களுக்கு தனது உரையை நிகழ்த்தினார் அண்ணா. அந்த உரையின் ஒரு பகுதியின் சாரம்தான், மேற்கோளாகக் காட்டப்படுகிறது.
“இந்த ஈராண்டு காலத்திற்குள் தமிழக அரசை நடத்திக்கொண்டு வருகின்ற நாம், நம்முடைய தோழமைக் கட்சிகளின் துணையோடு சாதித்திருக்கின்ற இரண்டு, மூன்று காரியங்கள் வரலாற்றுச் சிறப்பு மிக்க காரியங்கள். எங்களைக்கூட காங்கிரஸ் நண்பர்கள் பதவியிலிருந்து அகற்றலாம். ஆனால், நாங்கள் செய்துவிட்டுப் போன காரியங்களில் கை வைக்கின்ற துணிவு அவர்களுக்கு வருமா?
சில சட்டங்கள் ஐந்து ஆண்டுகளுக்குத்தான் செல்லும். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றப்படக்கூடும். சில சட்டங்கள் பத்து ஆண்டுகள் வரையில் நிலைக்கும். அதற்குப் பிறகு மாற்றப்படக்கூடும்.
ஆனால், இனி தமிழகத்தை ஆளுவதற்கு எந்தக் கட்சி வருவதானாலும் சரி, என்னுடைய காங்கிரஸ் நண்பர்கள் மிகுந்த அவசரப்படுவதாகக் கேள்விப்படுகிறேன். அவர்களே வருவதாக இருந்தாலும் சரி, “இனி இது சென்னை ராஜ்யம் தான், தமிழ்நாடு என்ற பெயரை மாற்றுகிறோம்” என்று தீர்மானம் போடுவார்களா என்றால், ஒருக்காலும் கிடையாது!
நான் செய்து முடித்திருக்கின்ற காரியம், பெரிய காரியமா என்கிறார்கள். இனி யாராலும் மாற்றப்பட முடியாத ஒரு காரியம், பெரிய காரியமே தவிர, சிறிய காரியம் அல்ல.
யார் இந்த ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வந்தாலும், இதை மாற்ற முடியாது என்பது மட்டுமல்ல, அவர்கள் அமைச்சரவையிலே உட்காருகின்ற நேரத்தில், ஒரு கணம் இல்லாவிட்டால் ஒரு கணம், தலை கவிழ்ந்து கொஞ்சம் யோசித்து, இந்தக் காரியத்தை அவனை செய்ய விடுவதற்குப் பதிலாக நாமே செய்திருக்கலாமே என்று எண்ணுவார்கள் அல்லவா? அந்த எண்ணம் எழுகின்ற பொழுதெல்லாம் தமிழகத்தை திராவிட முன்னேற்றக் கழகம் தான் அரசாளுகின்றது என்று பொருள்.
அதைப்போலவே பன்னெடுங்காலமாக ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நிலைத்துவிட்ட மணமுறை என்று வைக்கப்பட்டிருந்த வைதீக முறையை மாற்றி, சுயமரியாதைத் திருமணங்கள் நாம் செய்து கொண்டிருந்த நேரத்தில், அவை சட்டப்படி செல்லக்கூடியவை அல்ல என்ற நிலையை மாற்றி அது சட்டப்படி செல்லக்கூடியதுதான் என்று செய்திருக்கின்ற நிகழ்ச்சியும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சியாகும்.
இந்தி விருப்பப் பாடமாக வேண்டுமானாலும் இருக்கட்டும், கட்டாயப் பாடமாக வேண்டாம் என்பது நாம் முதன்முதல் இந்தி எதிர்ப்பின் போது மேற்கொண்ட முழக்கமாகும். “இல்லை இல்லை” என்று அன்றைக்கு அவர்கள் வாதாடினார்கள். நாம் இந்த அரசுப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பிறகு, இனி தமிழகத்தில் இந்திக்கு இடமில்லை என்று சட்டம் இயற்றினோம். இந்த மூன்றும் எங்களிலே தனிப்பட்ட முறையிலே ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்கின்ற நேரத்திலும் சரி, எங்களுடைய கட்சிகளைச் சார்ந்து எண்ணிப் பார்க்கின்ற நேரத்திலும் சரி, தமிழகத்தின் வரலாற்றை ஒட்டி எண்ணிப் பார்க்கின்ற நேரத்திலேயும் உள்ளபடி பெருமிதமடையக்கூடிய நிகழ்ச்சிகள்; பெரிய நிகழ்ச்சிகள்; வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்ச்சிகள். இதிலே நமக்கொரு பங்கு கிடைத்தது என்பது நம் ஒவ்வொருவருக்கும் உரிய பெருமதிப்பும் பெருமகிழ்ச்சியும் இயற்கையாகவே இருக்கின்றது”.
ஆனால், இந்த உரையில் அண்ணா தான் செய்ததை மாற்ற முயன்றால் மக்கள் வெகுண்டெழுவார்கள் என பேசவில்லை. மாறாக, இவனை மாற்றவிட்டதற்குப் பதிலாக தாங்களே செய்திருக்கலாமே என காங்கிரஸ்காரர்கள் கருதுவார்கள் என்றே குறிப்பிட்டார். மேலும், “அப்படி அவர்கள் நினைக்கும்போதெல்லாம் அண்ணாதுரைதான் ஆளுகிறான்” என்று பொருள் எனக் குறிப்பிடாமல் “திராவிட முன்னேற்றக் கழகம்தான் அரசாளுகிறது என்று பொருள்” என்றே குறிப்பிட்டார்.
1965ஆம் ஆண்டில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின்போது 1965ஆம் ஆண்டு ஜனவரி 25ஆம் தேதியை துக்கதினமாக இந்தித் திணிப்பிற்கு எதிரான தமிழ்நாடு மாணவர் கவுன்சில் அறிவித்தது. பல இடங்களிலும் இந்திக்கு எதிரான போராட்டங்கள் நடந்தன. இந்தி எதிர்ப்பு வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி மாணவர்கள் ஊர்வலமாகச் சென்றனர். பல இடங்களில் தாரை, தப்பட்டைகளை அடித்தும் சங்கூதியும் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
கோயம்புத்தூரில்தான் மாணவர்கள் ‘இந்தி அரக்கி’ என்று எழுதப்பட்ட கொடும்பாவியை மாணவர்கள் இழுத்துச் சென்றனர். இந்த ஊர்வலங்கள் அனைத்தும் பெரிய வன்முறைகள் ஏதுமின்றி நடந்தன. மதுரையிலும் இந்தி அரக்கியின் கொடும்பாவியை எரித்து “இந்தி ஒழிக”, “Hindi Never, English Ever” என்ற கோஷங்களை இட்டபடி மாசி வீதிகளில் ஊர்வலமாகச் சென்றனர்.