• Tue. Aug 12th, 2025

24×7 Live News

Apdin News

பருவதமலையில் இருந்து கீழே இறங்கியபோது வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்த 2 பெண்களின் உடல்கள் மீட்பு | Bodies recovered of 2 women died in flood while descending from Parvathamalai

Byadmin

Aug 12, 2025


திருவண்ணாமலை: சென்​னை​யில் இருந்து ஆன்​மிகச் சுற்​றுலா சென்ற குழு​வினர் பரு​வதமலை​யில் இருந்து கீழே இறங்​கிய​போது, மழை வெள்​ளத்​தில் சிக்கி 2 பெண்​கள் பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். திரு​வண்​ணா​மலை மாவட்​டம் கலசப்​பாக்​கம் அடுத்த தென்​ம​காதேவ மங்​கலம் கிராமத்​தில் உள்ள பிரசித்தி பெற்ற மல்​லி​கார்​ஜுனர் மற்​றும் பிரம்​மாம்​பிகை கோயில் 4,560 அடி உயர​முள்ள பரு​வத மலை​யில் உள்​ளது. இந்​தக் கோ​யிலுக்கு நேற்று முன்​தினம் அதி​காலை சென்னை திரு​வேற்​காடு பகு​தியி​லிருந்து 15 பேர் வாக​னத்​தில் வந்​துள்​ளனர்.

இவர்​கள், மலை​யேறிச் சென்று சுவாமி தரிசனம் முடித்​து​விட்டு நேற்று முன்​தினம் மாலை கீழே இறங்கி வந்​துள்​ளனர். ஓடையை கடக்க முயற்சி இந்​நிலை​யில், அன்​றைய தினம் பெய்த கனமழை​யி​னால் காட்​டாற்று வெள்​ளம் பெருக்​கெடுத்​துள்​ளது. குறிப்​பாக, வனத்​துறை கட்​டுப்​பாட்​டில் உள்ள ஓடை​யில் மழைவெள்​ளம் அதிக அளவில் பெருக்​கெடுத்து ஓடி​யுள்​ளது.

இதைக் கடந்​து​தான் வெளியே வர முடி​யும். எனவே, அனை​வரும் ஒரு​வருக்கு ஒரு​வர் கைகளை கோத்​துக்​கொண்டு ஓடையைக் கடக்க முயன்​றுள்​ளனர். அப்​போது, சென்னை வடபழனியைச் சேர்ந்த ராஜி​யின் மகள்சங்​கத்​தமிழ்​(36), திரு​வேற்​காடு பகு​தி​யைச் சேர்ந்த மனோகரனின் மனைவி இந்​தி​ரா(58) ஆகிய இரு​வரும் மழை வெள்​ளத்​தில் அடித்துச் செல்​லப்​பட்​டனர்.

இதுகுறித்து உடனடி​யாக வனத்​துறை​யினருக்கு தகவல் தெரி​வித்​துள்​ளனர். பின்​னர், தீயணைப்பு வீரர்​கள் வரவழைக்​கப்​பட்டு தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர். இதுகுறித்து தகவலறிந்த மாவட்ட ஆட்​சி​யர் க.தர்ப்​பக​ராஜ், மாவட்​டக் காவல் கண்​காணிப்​பாளர் சுதாகர், வரு​வாய்த் துறை​யினர் மற்​றும் சட்​டப்​பேரவை உறுப்​பினர்​கள் ஆகியோர் சம்பவ இடத்​துக்கு சென்று மீட்பு பணி​களை பார்​வை​யிட்​டனர்.

நேற்று முன்​தினம் இரவு வரை பெண்​களின் உடல்​களைக் கண்​டு​பிடிக்க முடிய​வில்​லை. பின்​னர் நேற்று காலை சம்பவ இடத்​துக்கு வந்த தேசிய பேரிடர் மீட்பு குழு​வினர், மழை வெள்​ளத்​தில் அடித்துச் செல்​லப்​பட்ட பெண்​களின் உடல்​களைத் தேடும் பணி​யில் ஈடு​பட்​டனர். அப்​போது சம்பவ இடத்​தில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலை​வில் மழை வெள்​ளம் சென்ற பாதை​யில் இந்​தி​ரா​வின் உடலை தீயணைப்பு வீரர்​கள் மீட்​டனர்.

அதைத் தொடர்ந்​து, சுமார் 7 கி.மீ. தொலை​வில் உள்ள கோயில்​மா​தி​மங்​கலம் கிராமத்​தில் உள்ள ஏரி அரு​கில் சங்​கத்​தமிழின் உடலை தீயணைப்பு துறை​யினர் மீட்​டனர். இரண்டு உடல்​களை​யும் கைப்​பற்​றிய போலீ​ஸார், பிரேதப் பரிசோதனைக்​காக திரு​வண்​ணா​மலை அரசு மருத்​து​வக்​கல்​லூரி மருத்​து​வ​மனைக்கு அனுப்பி வைத்​தனர்​.



By admin