• Mon. May 19th, 2025

24×7 Live News

Apdin News

பருவமழை முன்னேற்பாடுகள்: அமைச்சர்கள், அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! | Monsoon preparations CM Stalin holds meeting with ministers officials

Byadmin

May 19, 2025


சென்னை: தென்மேற்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (திங்கள்கிழமை) காலை முக்கிய ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் கோடை மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், விரைவில் தொடங்கவுள்ள தென்மேற்கு பருவமழைக்கான முன்னேற்பாடுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்தக் கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், “தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் தயார் நிலையில் இருக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கூடுதல் கவனம் தேவை. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலச்சரிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் கடலோர மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. பருவமழை காலத்தில் பேரிடர் முகாம்கள் தயார் நிலையில் இருப்பதுடன், உணவுப்பொருட்கள் போதுமான அளவு கையிருப்பு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். அதேபோல மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரமும் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். 4 ஆண்டுகளில் பல பேரிடர்களைத் திறம்பட எதிர்கொண்டோம். அதேபோல இப்போதும் செயல்பட வேண்டும்.” என்று கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி, வருவாய் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், வருவாய்த் துறை அமைச்சர் பெரியசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும், தலைமைச் செயலாளர் முருகானந்தம் மற்றும் துறை அதிகாரிகளும், வானிலை ஆய்வு மைய அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.



By admin