பட மூலாதாரம், Getty Images
ஆந்திராவின் பால்நாடு மாவட்டத்தில் சிக்கன் சாப்பிட்ட குழந்தை ஒன்று பறவைக் காய்ச்சலால் உயிரிழந்த செய்தி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
2 வயதான அந்த குழந்தை பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட கோழியின் சமைக்கப்படாத பச்சை இறைச்சியை சாப்பிட்டதால் மரணமடைந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
சமைக்கப்படாத இறைச்சியில் வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும் என்பதால், இதன் மூலம் பறவைக் காய்ச்சல் எளிதாக பரவும் என நிபுணர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில் சமைக்கப்பட்ட இறைச்சியால் இத்தகைய பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு குறைவு.
மேலும் இறைச்சியை சமைக்க உகந்த வெப்பநிலை எது? உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படாமல் எப்படி சமைப்பது? நிபுணர்கள் கூறுவது என்ன?
ஆந்திராவின் பால்நாடு மாவட்டத்தில் நடந்தது என்ன?
பட மூலாதாரம், MANGALAGIRI AIIMS
மார்ச் 15ம் தேதி நரசராவ்பேட்டை கிராமத்தில் 2 வயது பெண் குழந்தை ஒன்று மரணமடைந்தது. மங்களகிரியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அந்த குழந்தை உயிரிழந்தது.
மருத்துவமனை சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி,” மார்ச் 4ம் தேதியன்று 2 வயது பெண் குழந்தை ஒன்று, காய்ச்சல் மற்றும் மூச்சுத்திணறல் அறிகுறிகளுடன் மருத்துவமனைக்கு பெற்றோரால் அழைத்து வரப்பட்டது. குழந்தைகளுக்கான அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் மார்ச் 15ம் தேதி அந்த குழந்தை உயிரிழந்தது.
அக்குழந்தை H5N1 எனும் பறவைக் காய்ச்சல் வைரசால் பாதிக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது. இதன் பின்னர் வேறு யாரும் இதே போன்ற நோய் அறிகுறிகளுடன் மங்களகிரி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை,” என குறிப்பிடப்பட்டுள்ளது.
H5N1 என்பது பறவைக்காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் வகைகளில் ஒன்றாகும். குழந்தை இந்த நோய் பாதிப்பால் மரணமடைந்த நிலையில், அந்த குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டாருக்கு பல பரிசோதனைகள் நடத்தப்பட்டன.
பால்நாடு மாவட்ட மருத்துவ அலுவலர் ரவி அளித்த தகவலின்படி, பாதிக்கப்பட்ட குழந்தையின் வீட்டினருகில் வசிக்கும் யாருக்குமே பறவைக் காய்ச்சல் அறிகுறிகள் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இறைச்சியை எப்படி கழுவுவது?
பட மூலாதாரம், Getty Images
சமைக்கப்பட்ட இறைச்சியால் பாதிப்பு ஏற்படுவது இல்லை என்றாலும், கடையிலிருந்து வாங்கிய சமைக்கப்படாத இறைச்சியை கையாளுவதில் கவனம் தேவை என உலக சுகாதார நிறுவனம் பரிந்துரைக்கிறது.
உலக சுகாதார நிறுவன (WHO) தரவுகளின்படி கோழியில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு இருந்தாலும், இதன் இறைச்சியை முறையாக சமைத்து உண்ணும் போது மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுவது இல்லை.
ஆனால் இறைச்சியை கழுவும் போது வாஷ்பேசினில் ஓடும் தண்ணீரில் கழுவ வேண்டாம் என இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையம் (FSSAI) பரிந்துரைக்கிறது. இறைச்சியிலிருந்து தெறிக்கும் தண்ணீர் மற்ற உணவுப் பொருட்கள் மற்றும் பாத்திரங்களில் பட்டால் இதிலிருந்து வைரஸ் தாக்கலாம்.
இதே போன்று இறைச்சியை கழுவும் போது மாஸ்க் மற்றும் கையுறை அணிந்து கொள்வது நல்லது. கழுவிய பின்னர் பயன்படுத்திய பாத்திரங்களை நன்றாக கழுவ வேண்டும். இதே போன்று கைகால்களையும் சோப் பயன்படுத்தி முழுமையாக கழுவ வேண்டும் என FSSAI பரிந்துரைக்கிறது.
இறைச்சியை வெட்டுவதற்காக தனியான கத்தி மற்றும் தட்டுகளை பயன்படுத்துவதும் சிறப்பான வழிமுறையாகும்.
கோழி இறைச்சியை சமைப்பது எப்படி?
பட மூலாதாரம், Getty Images
ஆந்திராவின் பால்நாடு சம்பவத்தில், சமைக்கப்படாத இறைச்சியை குழந்தை வாயில் வைத்ததால்தான் பறவைக் காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதாக பரவலாக கூறப்படுகிறது.
ஊட்டச்சத்து நிபுணர்களின் பரிந்துரையின்படி, அனைத்து இறைச்சி உணவுகளும் உயர் வெப்பநிலையில் சமைக்கப்பட்ட பின்னரே உட்கொள்ளப்பட வேண்டும். குறைந்தது 75 டிகிரி செல்சியஸ்-க்கு குறையாத வெப்பநிலையில் இறைச்சியானது சமைக்கப்பட்டிருக்க வேண்டும்.
சாதாரணமாக 70 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் வைரஸ்கள் உயிரிழந்து விடும் என்பதால், சமைக்கப்பட்ட உணவால் எந்த ஆபத்தும் இல்லை என மேற்கு கோதாவரி மாவட்டத்தின் விலங்குகள் நலத்துறை அலுவலர் முரளிகிருஷ்ணா பிபிசி தெலுங்குவிடம் கூறினார்.
“ஒரு வேளை கோழிக்கு பறவைக்காய்ச்சல் இருந்திருந்தாலும், இறைச்சியானது முறையாக சமைக்கப்பட்டால் இந்த வைரஸ் மனிதர்களைத் தாக்குவதில்லை” என்று தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தைச் சேர்ந்த (National Institute of Nutrition) விஞ்ஞானி பிபிசி தெலுங்குவிடம் கூறினார். மேலும்,”அந்த குழந்தையானது சமைக்கப்படாத இறைச்சியை தொட்டிருக்கலாம். அல்லது பச்சை இறைச்சி குழந்தையின் வாயில் பட்டிருக்கலாம்.” என்றும் அவர் கூறுகிறார்.
சூடாக இருக்கும் போதே சாப்பிடுங்கள்
பட மூலாதாரம், Getty Images
இறைச்சியாக இருந்தாலும் மற்ற உணவுகளாக இருந்தாலும் அவை சூடாக இருக்கும் போதே சாப்பிட வேண்டும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் (FSSAI) பரிந்துரைகளின்படி, பச்சை இறைச்சியானது குளிர்பதனப்பெட்டியில் (Fridge) வைக்கும் போது ஃப்ரீசரில் உறைநிலையில் மட்டுமே காற்றுபுகாத நிலையில் வைக்க வேண்டும்.
சமைத்த இறைச்சியை குளிர்பதனப் பெட்டியில் வைத்தால், உணவு உண்ணும் முன்னதாக சூடாக்க வேண்டும். அத்தோடு சூடு ஆறும் முன்னதாக சாப்பிட்டு விட வேண்டும். எந்த அளவு சாப்பிடுவதற்கான தேவை இருக்கிறதோ அதை மட்டும் எடுத்து சூடாக்க வேண்டும். சூடாக்கிய உணவை மீண்டும் ஃப்ரிட்ஜில் வைப்பதைத் தவிர்க்க வேண்டும்.
முட்டையை எப்படி கையாளுவது?
பட மூலாதாரம், Getty Images
இந்திய அரசின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிர்ணய ஆணையத்தின் (FSSAI) பரிந்துரைகளின்படி பறவைக் காய்ச்சல் நேரத்திலும் முட்டை சாப்பிடுவது பாதுகாப்பானதுதான். ஆனால் இதற்கான சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
பறவைக் காய்ச்சல் ஏற்படுத்தும் வைரஸானது சாதாரணமாக சூரிய ஒளியில் சில மணி நேரங்களில் மரணமடைந்து விடும். இதனால் பல மணி நேரங்கள் பயணித்து வாடிக்கையாளரை வந்தடையும் முட்டையால் வைரஸ் பாதிப்பு நேராது.
ஆனாலும் முட்டையை நன்றாக வேக வைத்து சாப்பிட பரிந்துரைக்கப்படுகிறது. பறவைக் காய்ச்சல் உச்சத்தில் இருக்கும் போது ஒரு போதும் ஆஃப் பாயில் எனும் பாதி வெந்த முட்டை உணவுகளை சாப்பிடக் கூடாது. முட்டையின் ஓட்டை சமைப்பதற்காக உடைக்கும் போது, அதன் உள்ளிருக்கும் பகுதி சமைத்த உணவிலோ மற்ற பாத்திரங்களிலோ சிதறாமல் இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும் FSSAI அறிவுறுத்துகிறது.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியுஸ்ரூம் வெளியீடு