8
நேபாளத்தில் அரசாங்கத்திற்கு எதிரான வன்முறைமிக்க போராட்டங்களுக்கு மத்தியில், நாட்டின் பல்வேறு சிறைச்சாலைகளில் இருந்து 7,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
இந்த ஆர்ப்பாட்டங்கள் ஊடாக பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை செவ்வாயன்று இராஜினாமா செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டன.
இது மாவட்டங்கள் முழுவதும் கடுமையான சட்டம் ஒழுங்கு நிலைமையை ஏற்படுத்தியது.
இதன் விளைவாக, நேபாள இராணுவம், நேற்றுப் புதன்கிழமை நாடு தழுவிய கட்டுப்பாட்டு உத்தரவுகளையும் அதைத் தொடர்ந்து ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்தது.
சிறார் கைதிகள் மரணம் மற்றும் மோதல்கள்
மேற்கு நேபாளத்தில் உள்ள ஒரு சிறைச்சாலையில் பாதுகாப்புப் படையினருடன் ஏற்பட்ட மோதலில் குறைந்தது ஐந்து சிறார் கைதிகள் உயிரிழந்தனர்.
பங்கே மாவட்டத்தில் உள்ள பைஜ்நாத் கிராமப்புற நகராட்சி-3 இல் உள்ள நௌபஸ்தா மண்டலச் சிறையில் உள்ள நௌபஸ்தா சீர்திருத்த இல்லத்தில் செவ்வாய்க்கிழமை இரவு இந்தச் சம்பவம் நிகழ்ந்ததாக ‘தி ரைசிங் நேபாள’ நாளிதழ் தெரிவித்துள்ளது.
கைதிகள் பாதுகாப்புப் படையினரின் ஆயுதங்களைக் கைப்பற்ற முயன்றபோது மோதல் வெடித்ததாகவும், அப்போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் நாளிதழ் கூறியது.
இந்த மோதலில் ஐந்து சிறார் கைதிகள் கொல்லப்பட்டனர் மற்றும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.
இச்சம்பவத்தின் போது, சிறைச்சாலையில் இருந்த 585 கைதிகளில் 149 பேரும், சிறார் இல்லத்தில் இருந்த 176 பேரில் 76 பேரும் தப்பியோடினர்.
கைதிகளின் தப்பியோட்டம்
போராட்டங்களைப் பயன்படுத்தி, கைதிகள் சிறைகளில் இருந்து தப்பிக்க முயன்றனர். இதன் விளைவாக செவ்வாய்க்கிழமை முதல் பல சிறைச்சாலைகளில் மோதல்கள் ஏற்பட்டன. மோதல்களை அடுத்து 7,000க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பி ஓடியுள்ளனர்.
நேப்பாள பாதுகாப்பு அமைச்சக வட்டாரங்களை மேற்கோள் காட்டி, நாட்டில் கைதிகளின் தப்பியோட்டங்கள் பதிவாகியுள்ளதாக ‘மைரிபப்லிகா’ நாளிதழ் கூறியது. அதன்படி:
• தில்லிபஜார் சிறை: 1,100
• சித்வான்: 700
• நக்கூ: 1,200
• சுன்சாரியில் உள்ள ஜுப்கா: 1,575
• கஞ்சன்பூர்: 450
• கைலாலி: 612
• ஜலேஷ்வர்: 576
• காஸ்கி: 773
• டாங்: 124
• தும்லா: 36
• சோலுகும்பு: 86
• கவுர்: 260
• பஜாங்: 65
பொதுமக்கள் மத்தியில் அச்சம்
தப்பியோடிய கைதிகள் பாதுகாப்புப் படையினரை அச்சுறுத்தியதாகவும். பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவித்து வந்த குற்றவாளிகள் இப்போது சுதந்திரமாக நடமாடுவதால், பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
இந்த குற்றங்களால் பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பழிவாங்கும் பயத்தில் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மீட்பு முயற்சிகள்
காத்மண்டுவில், தில்லிபஜார் சிறையில் இருந்து தப்பிக்க முயன்ற ஒரு கைதி உள்ளூர் இளைஞர்களால் பிடிக்கப்பட்டு, நேபாள இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டார்.
தும்லாவில் தப்பி ஓடிய கைதிகளைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும், சிறையைப் பாதுகாக்க நேபாள இராணுவக் கட்டளையின் கீழ், 15 வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தும்லா பொலிஸ் தலைமை அதிகாரி டி.எஸ்.பி. ராபின் பாபு ரெக்மி தெரிவித்தார்.
படங்கள் – இணையம் / சமூக வலைத்தளங்கள்