பட மூலாதாரம், Getty Images
இந்தியாவின் பிரிவினைக்கு பிறகு, கலாத் பிராந்தியம்- அதாவது பலுசிஸ்தான் சுமார் 227 நாட்களுக்கு ஒரு சுதந்திர, இறையாண்மை பெற்ற நாடாக இருந்தது.
பலுசிஸ்தான் பாகிஸ்தானுடன் சேர விரும்பவில்லை, பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னாவும் இத்துடன் ஒத்துப் போயிருந்தார். ஆனால் ஆங்கிலேயர்கள் சென்ற பிறகு இந்தியாவிலும் சரி, பாகிஸ்தானிலும் சரி சமஸ்தானங்கள் சுதந்திர நாடுகளாக இருக்க முடியவில்லை.
இரானிய பீடபூமியின் கிழக்கு ஓரத்தில் அமைந்துள்ள பலுசிஸ்தானின் பெரும்பகுதி கடும் குளிர் நிறைந்த பாலைவனம். பலுசிஸ்தான் தற்போது மூன்று நாடுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம், இரானின் சிஸ்டன் பலுசிஸ்தான் மாகாணம் மற்றும் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு சிறு பகுதி இதில் அடக்கம்.
ஆப்கானிஸ்தானில் உள்ள நிம்ரூஸ், ஹெல்மண்ட் மற்றும் கந்தஹார் ஆகியவை பலுசிஸ்தானின் ஒரு அங்கமாக இருந்தவை. பலுச்கள் சுன்னி முஸ்லிம்களாக உள்ளனர். ஷியா முஸ்லிம்கள் ஆதிக்கமுள்ள இரானின் பலுசிஸ்தானிலும், பலுச்கள் சுன்னி முஸ்லிம்களாக உள்ளனர்.
பாகிஸ்தான் உருவானது முதலே, பலுசிஸ்தானில் கலகக் குரல்கள் எழுந்துகொண்டேதான் இருந்திருக்கின்றன. ஆனால் பலுசிஸ்தானில் சீனா நுழைந்ததிலிருந்து நிலைமை மேலும் சிக்கலாக மாறியுள்ளது. பலுசிஸ்தானின் குவாதர் துறைமுகத்தை பாகிஸ்தான் சீனாவிடம் கொடுத்திருக்கிறது. உள்ளூர் பலுச்கள் இதற்கு எதிராக போராடி வந்திருக்கின்றனர்.
கிழக்கு முதல் மேற்கு வரை பலுசிஸ்தான் எப்போதுமே பெர்சிய மற்றும் இந்திய பேரரசுகள் இடையில் இருந்திருக்கிறது.
பலுசிஸ்தானின் வடக்கு பகுதி அண்டை நாடான ஆப்கானிஸ்தானும் இந்த பேரரசுகளின் யுத்தங்களின் தாக்கத்தை உணர்ந்திருக்கிறது. ஆனால் அவர்களுக்கு இருப்பதைப் போன்று பலுச்களை பாதுகாக்க மலைகள் இல்லை.
கலாத் சமஸ்தானம் பலரால் பாகிஸ்தானின் ஹைதராபாத்தாக அழைக்கப்பட்டது. கலாத் பாகிஸ்தானுடன் சேர மறுத்த சுதந்திர சமஸ்தானம். ஹைதராபாத்தும் இந்தியாவுடன் சேர மறுத்தது.
தனி பலுசிஸ்தானை ஆதரித்த ஜின்னா
பட மூலாதாரம், Getty Images
கலாத்தும், ஹைதராபாத்தும் ஆங்கிலேயர் ஆட்சி 15 ஆகஸ்ட் 1947இல் முடிவடைந்த பின்னரும் சுதந்திரமும், இறையாண்மையும் உள்ள நாடுகளாக தொடரலாம் என சட்ட ஆலோசனை வழங்கியவர் முகமது அலி ஜின்னா. இந்த இரண்டு சமஸ்தானங்களுடனும் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. ராணுவ நடவடிக்கைக்கு பின்னர் ஹைதராபாத் இறுதியாக 1948ஆம் ஆண்டு செப்டம்பர் 13ஆம் தேதி இந்தியாவுடன் இணைந்தது.
பலுச் தேசியம் மற்றும் அதன் வரலாறு குறித்து ஜெர்மனிய அரசியல் அறிஞர் மார்டின் ஏக்ஸ்மேன் ஒரு முக்கிய புத்தகத்தை எழுதியுள்ளார். அந்த புத்தகம் – ‘பேக் டூ தி ஃப்யூச்சர்: தி கானேட் ஆஃப் கலாத் அண்டு தி ஜெனசிஸ் ஆஃப் பலுச் நேஷனலிசம் 1915-1955.’ கலாத் குறித்து ஜின்னாவின் ஆலோசனையை கேட்டு ஆங்கிலேய ஆட்சியாளர்கள் ஆச்சரியமடைந்ததாக மார்டின் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
“கலாத் ஹைதராபாத்தை போன்றது அல்ல. 1948 மார்ச் 20ஆம் தேதி கலாத்தின் கான், பாகிஸ்தானுடன் இணைய ஒப்புக்கொண்டார். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஏமாற்றமளித்த பின்னரே அவர் அவ்விதம் செய்தார். சுதந்திர நாடாக தொடர கலாத்தின் மன்னர் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானின் உதவியை எதிர்பார்த்தார்.”
பாகிஸ்தானை சேர்ந்த வரலாற்றாசிரியர் யாகூப் கான் பங்காஷ் ‘எ பிரின்ஸ்லி அஃபேர்’ என்ற தனது புத்தகத்தில், “கலாத் பாகிஸ்தானுடன் சேர்வதற்கு முன்பே ஒரு ஜனநாயக தேசியவாத இயக்கம் இங்கே செயல்பட்டுக் கொண்டிருந்தது. 1945-ல் ஜவஹர்லால் நேரு அகில இந்திய மாநில மக்களின் மாநாட்டிற்கு தலைமை தாங்கிய போது, கலாத் மாகாண தேசிய கட்சியும் (கேஎஸ்என்பி) அதில் பங்கேற்றது. மறுபுறம், முஸ்லிம் லீக்கிற்கு பலுசிஸ்தானில் எப்போதும் ஆதரவு கிடைக்கவில்லை,” என எழுதியுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
கலாத் மாகாணம் கேட்டது என்ன?
“கலாத்தின் கானும், கேஎஸ்என்பியும் ஜனநாயக கொள்கை கொண்டவர்கள். தேசியவாதத்தை பின்பற்றியவர்கள் என்ற முறையில் முஸ்லிம் லீக் தலைமையிலான பாகிஸ்தானுடன் இணைய கேஎஸ்என்பி விரும்பவில்லை. இந்தியாவுடன் நெருக்கத்தை அதிகரிக்கவோ, கலாத்தின் கானுடன் சேர்ந்து சுதந்திர நாட்டை உருவாக்கவோ கேஎஸ்என்பி விரும்பியது,” என யாக்கூப் கான் பங்காஷ் எழுதியுள்ளார்.
“கலாத்தின் கான் ஜனநாயக இயக்கத்தை ஆதரித்து, அதன் அடிப்படையில் இரு அவைகள் கொண்ட நாடாளுமன்ற அமைப்பு இங்கு உருவாக்கப்பட்டது. பலுச்கள் இஸ்லாமியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் பாகிஸ்தானுடன் இணையக் கூடாது என கலாத்தின் நாடாளுமன்றம் நம்பியது. ஆனால் இந்த எதிர்ப்பு பாகிஸ்தான் அரசால் நசுக்கப்பட்டு கலாத் கட்டாயப்படுத்தி இணைக்கப்பட்டது.”
அரசு அவற்றின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது என்ற நிபந்தனையுடன்தான் பிரிட்டிஷ் இந்தியாவின் சமஸ்தானங்கள் பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டன என நன்கு அறியப்பட்ட பாகிஸ்தான் வரலாற்றாசிரியர் முபாரக் அலி சொல்கிறார்.
முபாரக் அலியின் கூற்றுப்படி, “இந்த சமஸ்தானங்களின் சுயாட்சி படிப்படியாக முழுமையாக அழிக்கப்பட்டது. இதனால் பல மாநிலங்களின் அடிப்படை அடையாளம் முடியத் தொடங்கியது. அந்த சமஸ்தானங்களில் பலுசிஸ்தானும் ஒன்று. பலுசிஸ்தான் பாகிஸ்தானுடன் இணைவதற்கு துளியும் ஆதரவாக இருக்கவில்லை. பாகிஸ்தான் கட்டாயப்படுத்தி அதை இணைத்தது. கலாத்தின் கான் ஒரு சுதந்திர கலாத் வேண்டும் என விரும்பினார், ஆனால் பாகிஸ்தான் அதை விரும்பவில்லை. சிறிய சமஸ்தானங்கள், சுதந்திர நாடுகளாக நீடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கவில்லை.”
முதலில் சுதந்திரமான இறையாண்மையுள்ள கலாத்திற்கு ஆதரவாக இருந்த ஜின்னா தனது மனதை மாற்றிக்கொண்டது ஏன் என முபாரக் அலியிடம் கேட்கப்பட்டது.
“அரசியலில் ஒன்றேதான் என எதுவும் இல்லை. காலம் செல்லசெல்ல அவை மாறுகின்றன. எனவே தலைவர்களின் கூற்றுகளை வைத்து ஒருவர் முடிவு செய்யக்கூடாது. பாகிஸ்தான் உருவாக்கப்பட்ட போது, பலுசிஸ்தான் குறித்த ஜின்னாவின் பார்வை முற்றிலும் வேறாக இருந்தது. ஜின்னா கலாத் மாகாணத்தை கட்டாயப்படுத்தி பாகிஸ்தானுடன் இணைத்தார்.”
“பலுசிஸ்தான் புவியியல் ரீதியாக பாகிஸ்தானுடன் இணைக்கப்பட்டாலும். மக்களின் இதயம் இன்னமும் அதில் இணையவில்லை. சிறு சமஸ்தானங்களுக்கு தனியாக அந்தஸ்து ஏதும் இருக்கவில்லை. ஜுனாகாத்தின் நவாப் பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார், ஆனால் ஜுனாகாத் அமைந்துள்ள பகுதியிலிருந்து பாகிஸ்தானுடன் தொடர்ந்து இணைந்திருப்பது எளிதாக இருக்கவில்லை. அதே போல் கலாத் இருக்கும் இடத்தில் இருந்துகொண்டு இந்தியாவுடன் இணைந்திருப்பது சாத்தியமில்லாதது.” என்றார் முபாரக் அலி.
பட மூலாதாரம், Getty Images
ஜின்னா தனது மனதை மாற்றிக்கொண்டது ஏன்?
இதே கேள்வியை பாகிஸ்தானுக்கான முன்னாள் இந்திய தூதரும் வரலாற்றாசிரியருமான டிசிஏ ராகவனிடம் கேட்டபோது, “ஜின்னா மனதில் என்ன இருந்தது என்பது குறித்து ஏதும் சொல்வதும் கடினம். ஆனால் கலாத் சுதந்திரமாக இருக்க ஜின்னா ஆதரவளித்தார் என்பது முற்றிலும் உண்மை. பக்டி நவாப் மற்றும் கலாத்தின் கானுடன் 1947-ல் ஜின்னா கொண்டிருந்த உறவு 1947-க்கு பிறகு மிகவும் மாறியது. அவரது மனம் பின்னர் மாறியிருக்கிறது எனபது தெளிவாக தெரிகிறது. அதனால்தான் பலுசிஸ்தான் பாகிஸ்தானுடன் கட்டாயப்படுத்தி இணைக்கப்பட்டது.” என கூறினார்.
பலுசிஸ்தானில் ஏதேனும் நடைபெறும் போதெல்லாம், கலாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய விரும்பியதாகவும் ஆனால் நேரு அதை ஏற்றுக்கொள்ளவில்லை என்றும் இந்திய ஊடகங்களில் ஒரு பிரிவு சொல்ல ஆரம்பிக்கும்.
இதே கேள்வியை டிசிஏ ராகவனிடம் கேட்டபோது, “இவையெல்லாம் வாட்ஸ்அப் வரலாறுகள். அந்த காலகட்டத்தில் அதிகம் மதிக்கப்பட்ட தலைவர் நேரு, கலாத்தின் கானுக்கும் அவர் மீது மரியாதை இருந்தது. கலாத்தின் கான் தனது அரசின் அந்தஸ்து மற்றவற்றிலிருந்து முற்றிலும் வேறாக இருக்க வேண்டும் என விரும்பினார். ஆங்கில பேரரசின் கீழ் கலாத்தின் அந்தஸ்து மற்ற சமஸ்தானங்களிலிருந்து வேறுபட்டிருந்தது.” என்றார்.
டிசிஏ ராகவனின் கூற்றுப்படி, “கலாத் சமஸ்தானம் இந்தியாவுடன் இணைய விரும்பியதற்கு வரலாற்று ஆதாரம் ஏதும் இல்லை. உண்மை என்னவென்றால் கலாத்தின் கான் தனக்கு தனி அந்தஸ்து வேண்டும் என விரும்பினார். அதற்காக அவர் இரான், ஆங்கிலேய பேரரசு, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். கலாத்திற்கு ஒரு தனி பிரிவை உருவாக்குவதுதான் அவரது நோக்கமாக இருந்தது. கலாத் தன்னை ஒரு பகவல்பூராக (பாகிஸ்தானின் ஒரு பகுதி) பார்க்கவில்லை. நாம் அந்த சூழ்நிலையை புரிந்து கொண்டிருக்க வேண்டும். அதனால் எதுவும் சொல்லாமல் இருந்திருக்கவேண்டும்.”
கலாத் சமஸ்தானம் எப்போதும் இந்தியாவுடன் இணைய முன்வரவில்லை என்று முபாரக் அலியும் கூறுகிறார்.
“கலாத் சமஸ்தானம் சுதந்திரமான இறையாண்மையுள்ள நாடாக வேண்டும் என விரும்பியது. கலாத் சுதந்திரமாக தொடர நேருவின் உதவி அவர்களுக்கு தேவைப்பட்டது. ஆனால் கலாத்தின் கான் தான் இந்தியாவுடன் இணைய விரும்புவதாக எப்போதும் சொல்லவில்லை.
நேரு ஒரு பெரிய தலைவர், எனவே கலாத்தின் கான் அவர் மீது மரியாதை வைத்திருந்தார். ஆனால் கலாத்தை இந்தியாவுடன் இணைக்கும் திட்டத்தை நேரு நிராகரித்தார் எனக் கூறுவது முற்றிலும் தவறானது.” என்கிறார் முபாரக் அலி.
பட மூலாதாரம், Getty Images
‘முஸ்லிமாக இருப்பது மட்டும் போதாது’
ஆனால் பாகிஸ்தானுடன் இணையாதது குறித்து பலுசிஸ்தானுக்குள் சூடான விவாதங்கள் இருந்தன.
“1947-ல் மிர் காஸ் பக்ஸ் பிஜென்ஜோ, கலாத் மாகாண தேசிய கட்சியின் உறுப்பினராக இருந்தார். இரான் மற்றும் ஆப்கானிஸ்தானைப் போல் நமது பண்பாடு வேறுபட்டது. நாம் முஸ்லிம்கள் என்பதால் பாகிஸ்தானுடன் இணையவேண்டும் என்றால் இரானும், ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானுடன் சேரவேண்டும் என 1947ஆம் ஆண்டு டிசம்பரில் திவான்- இ -சபையில் பிஜென்ஜோ கூறினார்.” என ‘பலுச் நேஷனலிசம்: இட்ஸ் ஆரிஜின் அண்டு டெவலப்மெண்ட் அப் டு 1980’, என்ற புத்தகத்தில் தாஜ் மொகமது ப்ரெசிக் எழுதியுள்ளார்.
“அணு ஆயுதங்களின் காலத்தில் நம்மால் நம்மை பாதுகாத்துக் கொள்ளமுடியாது என நம்மிடம் சொல்கிறார்கள். ஆனால் எனது கேள்வி, ஆப்கானிஸ்தான், இரான் அல்லது பாகிஸ்தானே கூட வல்லரசுகளிடமிருந்து தங்களை காத்துக் கொள்ளமுடியுமா? நாம் நம்மையே பாதுகாத்துக் கொள்ளமுடியாவிட்டால் மற்றும் பல நாடுகளும் தங்களை பாதுகாத்துக் கொள்ளமுடியாது.”
பலுசிஸ்தான் தலைவரும், வரலாற்றாசிரியருமான குல் கான் நசீர் தனது முக்கியதுவம் வாய்ந்த தரிக்-இ-பலுசிஸ்தான் என்ற புத்தகத்தில், 1948ஆம் ஆண்டு மார்ச் 27ஆம் தேதி, வி.கே. மேனனின் செய்தியாளர் சந்திப்பு பற்றிய செய்தியை அகில இந்திய வானொலி ஒலிபரப்பியதாக எழுதியுள்ளார்.
கலாத்தின் கான் இரண்டு மாதங்களுக்கு முன் புது டெல்லியை தொடர்பு கொண்டு பலுசிஸ்தானை இந்தியாவுடன் இணைத்துக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டதாகவும், ஆனால் அந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டதாகவும் மேனன் தெரிவித்ததாக அகில இந்திய வானொலி குறிப்பிட்டது.
கலாத்தின் கடைசி கான், அகமது யார் கானை மேற்கோள் காட்டி குல் கான் நசீர் தனது புத்தகத்தில், “இது முற்றிலும் பொய். கலாத் மற்றும் பாகிஸ்தான் இடையே பகைமை ஏற்படுத்துவதுதான் அதன் நோக்கம். இந்த போலி செய்தி மூலம் பாகிஸ்தானியர்கள் கோபம் கொண்டு, பொறுமையின்றி இந்தியாவுக்கு ஹைதராபாத்தில் ஒரு வாய்ப்பை தரும்படி ஏதாவது செய்வார்கள் என்பதுதான் இரண்டாவது நோக்கம். ஆனால் கலாத்தின் கான் மற்றும் இந்தியாவின் பெயர்கள் ஒன்றாக பேசப்பட்டது இது முதல் முறையல்ல. கலாத்தின் கான் அகமது யார் கான் மற்றும் பாகிஸ்தான் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, பாகிஸ்தானுடன் பேரம் பேசுவதற்கு இந்தியாவுடன் சேரும் வாய்பை வைத்திருந்தது ஒரு உத்தியாக இருந்தது.” எனக் குறிப்பிட்டுள்ளார்.
பட மூலாதாரம், Getty Images
கலாத் சமஸ்தானம் பாகிஸ்தானுடன் இணைந்து சுமார் ஆறு மாதங்களுக்கு பின்னர் இந்தியா ஹைதராபாத்தை இணைத்தது.
அகமது யார் கான் குறித்து பாகிஸ்தானுக்கான பிரிட்டன் தூதர் (1947) லாரன்ஸ் கிராஃப்டி ஸ்மித் பின்வருமாறு கூறுகிறார், “கலாத் இந்தியாவுடனோ, ஆப்கானிஸ்தானுடனோ இணையும் வதந்திகளை மறுப்பது, இந்த வதந்திகளை கலாத்தின் கான் பாகிஸ்தானுடன் பேரம் பேசுவதற்கு பயன்படுத்திக் கொண்டார் என்பதைத்தான் காட்டுகிறது. அகமது யார் கான் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் எந்த உண்மையான நோக்கமும் இல்லாமல் வெறுமனே பேசிக் கொண்டிருந்தார் என நம்புவதற்கு போதிய காரணங்கள் உள்ளன.”
இதைத் தவிர, 1947 ஆகஸ்ட் 14ஆம் தேதி கவர்னர் ஜெனரல் இந்திய சுதந்திர சட்டம், 1947-ன் கீழ் ஒரு உத்தரவை பிறப்பித்தார். அதன்படி இந்தியா கலாத்தின் அந்தஸ்து குறித்து கேள்வி கேட்க முடியாது. ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் எல்லையை பிரிக்கும் துரண்ட் கோடு பற்றியும் மெக்மோகன் கோடு பற்றியும் பாகிஸ்தான் கேள்வி எழுப்ப முடியாது.”
ஜின்னாவுக்கு பிறகு ஏற்பட்ட மாற்றங்கள்
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானுக்கு ஒரு மத அடையாளம் மட்டுமல்ல, முழுமைக்கும் ஒரே குடியுரிமை வேண்டும் என ஜின்னா விரும்பினார். 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி தனது புகழ்பெற்ற உரையில், “நீங்கள் உங்கள் கோவிலுக்கும், மசூதிக்கும் செல்ல சுதந்திரம் உள்ளது. பாகிஸ்தானுக்குள் எந்த வழிபாட்டு தலதிற்கும் செல்ல உங்களுக்கு சுதந்திரம் உள்ளது. மதம், சாதி, இனம் அடிப்படையில் அரசு யாருக்கு பாரபட்சம் காட்டாது,” எனக் கூறினார்.
ஆனால் ஜின்னாவின் மரணத்திற்கு பின்னர், பாகிஸ்தானில் அனைத்தும் வேகமாக மாறத்தொடங்கின. பாகிஸ்தான் தனது முதல் அரசமைப்பை 1956-இல் அமல்படுத்தியது. அதன் பின்னர், பாகிஸ்தானுடன் இணைந்த சமஸ்தானங்களில் ராணுவம் மற்றும் அதிகாரிகளின் கட்டுப்பாடு அதிகரித்தது.
சமஸ்தானங்கள் புவியியல் ரீதியாக பாகிஸ்தானுடன் இணைந்தன, ஆனால் சமூக ஒருங்கிணைப்பு ஏற்படவில்லை என யாகூப் கான் பங்கேஷ் எழுதியிருந்தார். கலாத்தில் அரசியல் நடவடிக்கைகளுக்கு அதிக இடமிருக்கவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில் பலுச் கிளர்ச்சியாளர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பினர்.
“பாகிஸ்தான் கலாத்தின் தேசிய இறையாண்மையை மட்டுமே பெற்றிருந்தது, ஆனால் தேசிய அடையாளத்தை உருவாக்கமுடியவில்லை. நாட்டிற்கும், சமூகத்திற்கும் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. இந்த விஷயங்கள் இன்று வரை பாகிஸ்தானுக்கு பிரச்னையாக இருக்கின்றன,” என பங்கேஷ் எழுதியுள்ளார்.
பாதுகாப்பு மற்றும் ராணுவம் என்ற கண்ணோட்டத்துடன் மட்டும் பலுசிஸ்தானை பாகிஸ்தான் பார்த்துக் கொண்டிருந்தால் தீர்வு கிடைக்காது என்கிறார் டிசிஏ ராகவன்.
“1947க்கு முந்தைய நிலைக்கும், இன்றைய நிலைக்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன. பாகிஸ்தானில் இதுபோன்ற எல்லா அரசியல் விஷயங்களும் பாதுகாப்பு கோணத்திலிருந்தே பார்க்கப்படுகின்றன, ஆனால் பலுசிஸ்தானுக்கான தீர்வு அதில் இல்லை. பலுசிஸ்தான் மக்களின் கோபத்தை பாகிஸ்தான் புரிந்து கொள்ளவேண்டும்.” என்று கூறுகிறார் டிசிஏ ராகவன்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு