பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தின் சிப்பி மாவட்டத்தில் குவெட்டாவிலிருந்து பெஷாவர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலை செவ்வாய்க்கிழமை பிற்பகலில் ஒரு ஆயுதக்குழுவினர் தாக்கி பல பயணிகளை பிணைக் கைதிகளாகப் பிடித்தனர்.
இந்தத் தாக்குதலுக்கு பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட பலூச் விடுதலை ராணுவம் பொறுப்பேற்றுள்ளது.
இதுவரை 104 பயணிகள் பாதுகாப்பாக மீட்கப்ப்பட்டுள்ளதாகவும், 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் ராணுவம் பிபிசி உருதுவிடம் தெரிவித்துள்ளது.
மறுபுறம், பாதுகாப்புப் படையினர் பலரைக் கொன்றதாகவும், 35 பேரை பிணைக் கைதிகளாகப் பிடித்ததாகவும் பலூச் விடுதலை ராணுவம் கூறியுள்ளது. அவர்களின் கூற்றுகளை உறுதிப்படுத்த முடியவில்லை.
முன்னதாக, ஜாஃபர் எக்ஸ்பிரஸில் இருந்து தப்பிய 80 பயணிகள் மச் ரயில் நிலையத்தை அடைந்தனர், அங்கு அவர்களுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
தாக்குதலுக்கு உள்ளான ரயிலில் சுமார் 400 பயணிகள் இருந்ததாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற பலூச் விடுதலை ராணுவத்தின் பின்னணி என்ன? பலூசிஸ்தான் தனி நாடு கோரும் அதன் செயல்பாடுகள் என்ன? என்பதை இக்கட்டுரை விளக்குகிறது.
பலூச் விடுதலை ராணுவம் உருவானது எப்போது?
பட மூலாதாரம், Getty Images
பலுசிஸ்தானில் பலூச் விடுதலை ராணுவம் (BLA) பல ஆண்டுகளாகவே செயல்பட்டு வருகிறது.
ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், இந்த அமைப்பு மற்றும் அதன் துணைக் குழுவான மஜீத் பிரிவின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன.
பாகிஸ்தான், சமீபத்தில் மஜீத் பிரிவை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தடை செய்யுமாறு வலியுறுத்தியது.
பாகிஸ்தானும் அமெரிக்காவும் ஏற்கனவே பலூச் விடுதலை ராணுவம் இயக்கத்தை தடை செய்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.
பலுசிஸ்தானில் பிரிவினைவாதம் வேர் விட்டது எப்போது?
பலுசிஸ்தானை பாகிஸ்தானுடன் இணைத்ததுமே அங்கு பிரிவினை கோரிக்கை எழுந்துவிட்டது. அந்த நேரத்தில், கலாட் மாநிலத்தின் இளவரசர் கரீம் ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
பின்னர் 1960களில், நௌரோஸ் கானும் அவரது மகன்களும் கைது செய்யப்பட்டபோது, மாகாணத்தில் ஒரு சிறிய ஆயுதக்குழுவும் உருவானது.
1970களில் பலுசிஸ்தானின் முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றமும் அரசாங்கமும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட போது, பலுசிஸ்தானில் முறையாக கட்டமைக்கப்பட்ட இயக்கம் தொடங்கியது.
அந்த நேரத்தில் மாகாணத்தின் முதலமைச்சராக சர்தார் அதாவுல்லா மெங்கலும், ஆளுநராக மிர் காஸ் பக்ஷ் பிசென்ஜோவும் இருந்தனர். அவர்கள் இருவரும் தேசிய அவாமி கட்சியைச் சேர்ந்தவர்கள்.
அந்த நேரத்தில், பலுசிஸ்தான் பிரிவினைவாத தலைவர்களில் நவாப் கைர் பக்ஷ் மர்ரி மற்றும் ஷேர் முகமது அல்லது ஷெரோஃப் மர்ரி ஆகியோரின் பெயர்கள் முன்னணியில் இருந்தன.
அந்த சமயத்தில் தான் பலூச் விடுதலை ராணுவம் என்ற பெயரும் உருவாகத் தொடங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
பலுசிஸ்தானின் முதல் சட்டமன்றமும் அரசாங்கமும் வெறும் பத்து மாதங்களில் கலைக்கப்பட்டன.
தேசிய அவாமி கட்சியின் முக்கியத் தலைவர்கள், கவுஸ் பக்ஷ் பிசென்ஜோ, அதாவுல்லா மெங்கல் மற்றும் நவாப் கைர் பக்ஷ் மர்ரி உட்பட பலரும் கைது செய்யப்பட்டனர்.
அரசாங்கத்திற்கு எதிராக சதி செய்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. இது ஹைதராபாத் சதி வழக்கு என்று நினைவுகூரப்படுகிறது.
அரசாங்க வளாகங்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் மீதான பி.எல்.ஏ தாக்குதல்கள்
பட மூலாதாரம், Getty Images
இச்சம்பவத்துக்குப் பிறகு நவாப் கைர் பக்ஷ் மாரி ஆப்கானிஸ்தானுக்குச் சென்றார்.
அவர் மாரி பழங்குடியினரின் ஏராளமான உறுப்பினர்களையும் தன்னுடன் அழைத்துச் சென்றார்.
அவர் அங்கு ‘ஹக் டவர்’ என்ற பெயரில் ஒரு படிப்பு வட்டத்தை நடத்தி வந்தார்.
பின்னர், ஆப்கானிஸ்தானில் தாலிபன் இயக்கம் ஆட்சிக்கு வந்த போது, அவர் பாகிஸ்தானுக்குத் திரும்பி, ‘ஹக் டவர்’ எனும் படிப்பு வட்டத்தை இங்கேயும் தொடர்ந்தார்.
பல இளைஞர்கள் இந்த படிப்பு வட்டத்தில் சேர ஆர்வம் காட்டினர். இவர்களில் உஸ்தாத் அஸ்லம் அச்சுவும் ஒருவர்.
அதன் பின்னர் பலூச் விடுதலை ராணுவத்தின் தளபதியானார் உஸ்தாத் அஸ்லம்.
2000 ஆம் ஆண்டு முதல், பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீதான தாக்குதல்கள் தொடங்கின.
முன்னாள் அதிபர் ஜெனரல் பர்வேஸ் முஷாரஃப் 2005 டிசம்பரில் கோலுவுக்குப் பயணம் செய்த போது ராக்கெட்டுகள் வீசப்பட்டன. அதனையடுத்து சூழல் மிகவும் மோசமாகியது.
கோலு என்பது நவாப் கைர் பக்ஷ் மாரியின் மூதாதையர் கிராமமாகும்.
பாகிஸ்தான் அரசாங்கம் பலூச் விடுதலை ராணுவத்தை தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.
நவம்பர் 21, 2007 அன்று, நவாப் கைர் பக்ஷ் மாரியின் மகன் நவாப்சாதா பாலாச் மாரி, ஆப்கானிஸ்தானில் ஒரு சாலை அருகே நடந்ததாகக் கூறப்படும் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தான் அதிகாரிகள் அவரை பலூச் விடுதலை ராணுவத்தின் தலைவர் என்று வர்ணித்திருந்தனர்.
பாலாச் மாரியின் மரணத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அதிகாரிகள் அவரது சகோதரர் நவாப்சாதா ஹர்ப்யார் மாரியை பலூச் விடுதலை ராணுவத்தின் தலைவர் என்று அழைக்கத் தொடங்கினர். பாலாச் மாரி பிரிட்டனில் வசித்து வந்தார்.
தன்னை பலூச் விடுதலை ராணுவத்தின் தலைவர் என்று பாகிஸ்தான் அதிகாரிகள் குறிப்பிட்டதை அவர் மறுத்திருந்தார்.
பலூச் விடுதலை ராணுவத்தின் நோக்கம் என்ன?
பட மூலாதாரம், Getty Images
இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் போது, தங்களை ஒரு சுதந்திர நாடாகக் காண விரும்பிய பலுசிஸ்தான் மக்கள், தாங்கள் வலுக்கட்டாயமாக பாகிஸ்தானில் சேர்க்கப்பட்டதாக நம்புகிறார்கள்.
இந்த மாகாண மக்களுக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்திற்கும் இடையிலான போராட்டம் தொடங்கியது, இன்றும் தொடர்கிறது.
பலுசிஸ்தானுக்கு சுதந்திரம் வேண்டும் என்று கோரி தற்போது பல்வேறு பிரிவினைவாத குழுக்கள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் மிகப் பழமையான மற்றும் மிகவும் தாக்கத்தை ஏற்படுத்தும் அமைப்புகளில் ஒன்று பி.எல்.ஏ, அதாவது பலூச் விடுதலை ராணுவம்.
2007 ஆம் ஆண்டில், பாகிஸ்தான் அரசாங்கம் பலுசிஸ்தான் விடுதலை ராணுவத்தை தடை செய்யப்பட்ட அமைப்புகளின் பட்டியலில் சேர்த்தது.
இந்தக் குழு பலுசிஸ்தானை சீனா மற்றும் பாகிஸ்தான் அரசாங்கத்திடமிருந்து விடுவிக்க விரும்புகிறது.
பலுசிஸ்தானின் வளங்களில் தங்களுக்கு முதல் உரிமை இருப்பதாக பலுசிஸ்தான் விடுதலை ராணுவம் நம்புகிறது.
பி.எல்.ஏ எப்போது நிறுவப்பட்டது?
பட மூலாதாரம், Getty Images
இந்த அமைப்பு முதன்முதலில் 1970 களின் முற்பகுதியில் உருவானதாக நம்பப்படுகிறது.
பின்னர் பலூச் அமைப்பைச் சேர்ந்தவர்கள் சுல்பிகர் அலி பூட்டோவின் அரசாங்கத்திற்கு எதிராக ஆயுதமேந்திய கிளர்ச்சியைத் தொடங்கினர்.
ஆனால் ராணுவ ஆட்சியாளர் ஜியா-உல்-ஹக் ஆட்சியைப் பிடித்த பிறகு, பலூச் பிரிவினைவாதத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இதன் விளைவாக, ஆயுதமேந்திய கிளர்ச்சி முடிவுக்கு வந்த பிறகு, பலுசிஸ்தான் விடுதலை ராணுவமு காணாமல் போனது.
பி.எல்.ஏ மீண்டும் உயிர் பெற்றது எப்போது?
பட மூலாதாரம், Getty Images
2000-ஆம் ஆண்டில் பலூச் விடுதலை ராணுவம் மீண்டும் செயல்படத் தொடங்கியது.
சில நிபுணர்கள் பி.எல்.ஏ இந்த ஆண்டு அதிகாரப்பூர்வமாக நிறுவப்பட்டதாக நம்புகின்றனர்.
2000 ஆம் ஆண்டு முதல், இந்த அமைப்பு பலுசிஸ்தானின் பல்வேறு பகுதிகளில் அரசு நிறுவனங்கள் மற்றும் பாதுகாப்புப் படையினர் மீது தொடர் தாக்குதல்களைத் தொடங்கியது.
இந்த அமைப்பில் பெரும்பாலும் முர்ரி மற்றும் புக்தி பழங்குடியின உறுப்பினர்கள் உள்ளனர்.
பிராந்திய சுயாட்சிக்காக பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு எதிராக இவர்கள் போராடி வருகின்றனர்.
பி.எல்.ஏ எந்தெந்த தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்றுள்ளது?
பட மூலாதாரம், Getty Images
- 2000-ஆம் ஆண்டு ஜூலை மாதம் – குவெட்டாவில் நடந்த குண்டுவெடிப்புக்கு பி.எல்.ஏ பொறுப்பேற்றது. இந்த குண்டுவெடிப்பில் 7 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 25 பேர் காயமடைந்தனர்.
- 2003-ஆம் ஆண்டு மே மாதம் – பி.எல்.ஏ தொடர்ச்சியான தாக்குதல்களை நடத்தியது. காவல்துறையினரையும் பலூச் அமைப்பைச் சாராதவர்களையும் கொலை செய்தது.
- 2004ம் ஆண்டு – பாகிஸ்தான் அரசாங்கத்தின் மெகா வளர்ச்சித் திட்டங்களில் ஈடுபட்டுள்ள சீனத் தொழிலாளர்களை பி.எல்.ஏ தாக்கியது. பாகிஸ்தானில் சீனா தொடங்கும் திட்டங்களை பி.எல்.ஏ எதிர்த்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
- டிசம்பர் 2005-ஆம் ஆண்டு – அப்போதைய பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் வருகை தந்திருந்த கோலுவில் உள்ள ஒரு துணை ராணுவ முகாமின் மீது பி.எல்.ஏ போராளிகள் 6 ராக்கெட்டுகளை வீசினர். முஷாரஃப் காயமடையவில்லை என்றாலும், பாகிஸ்தான் அரசாங்கம் இந்தத் தாக்குதலை அவருக்கு எதிரான கொலை முயற்சி என்று கூறி, பதிலடி கொடுக்கும் விதமாக ஒரு பெரிய ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது.
- 2009-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் – பி.எல்.ஏ-வின் தலைவராகக் கூறப்படும் பிரம்மதாக் கான் புக்தி, பலுசிஸ்தானைப் பூர்வீகமாகக் கொள்ளாமல் அங்கு வசிக்கும் மற்றவர்களைக் கொல்லுமாறு பலூச் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார். இதனைத் தொடர்ந்து நடந்த தாக்குதல்களில் சுமார் 500 பஞ்சாபியர்கள் உயிரிழந்ததாக பி.எல்.ஏ கூறுகிறது.
- 2009-ஆம் ஆண்டு ஜூலை மாதம் – தாக்குதல் நடத்திய பி.எல்.ஏ அமைப்பைச் சேர்ந்தவர்கள் 19 பாகிஸ்தான் போலீசாரை கடத்திச் சென்றனர். கடத்தப்பட்டப் பணியாளர்களைத் தவிர, பி.எல்.ஏ ஒரு போலீஸ் அதிகாரியையும் கொன்றது மற்றும் 16 பேரைக் காயப்படுத்தியது. மூன்று வாரங்களில், கடத்தப்பட்ட போலீஸ்காரர்களில் ஒருவரைத் தவிர சிறைப்பிடிக்கப்பட்ட மற்ற அனைவரையும் பி.எல்.ஏ அமைப்பைச் சேர்ந்தவர்கள் கொன்றனர்.
2011-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் – வடக்கு முசகேல் மாவட்டத்தில் ஒரு தனியார் நிலக்கரிச் சுரங்கத்தைக் பாதுகாத்துக் கொண்டிருந்த அரசுப் பாதுகாப்புப் பணியாளர்களை பி.எல்.ஏ கிளர்ச்சியாளர்கள் தாக்கினர். இதில் 14 பேர் உயிரிழந்தனர், 10 பேர் காயமடைந்தனர்.
2011-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் – முன்னாள் மாநில அமைச்சர் மிர் நசீர் மெங்கலின் வீட்டிற்கு வெளியே பி.எல்.ஏ போராளிகள் ஒரு கார் குண்டை வெடிக்கச் செய்தனர். இந்த தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 30 பேர் காயமடைந்தனர்.
ஜூன் 2013 – முகமது அலி ஜின்னா வீட்டின் மீது நடத்தப்பட்ட ராக்கெட் தாக்குதல் மற்றும் சோதனைக்கு பி.எல்.ஏ பொறுப்பேற்றது.
2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் – பிர் மசோரி பகுதியில் ஐக்கிய பலூச் ராணுவத்தின் கரம் கான் முகாமை பி.எல்.ஏ போராளிகள் தாக்கினர். இந்த தாக்குதலில் 20 பேர் உயிரிழந்தனர்.
2017-ஆம் ஆண்டு மே மாதம் – பலுசிஸ்தானின் குவாடரில் மோட்டார் சைக்கிள்களில் வந்த பி.எல்.ஏ போராளிகள் கட்டுமானத் தொழிலாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்.
2017-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் – பலுசிஸ்தானின் ஹர்னாயில் நடந்த வெடிகுண்டு( IED) தாக்குதலுக்கு பி.எல்.ஏ பொறுப்பேற்றது. பாகிஸ்தான் துணை ராணுவப் படை மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இத்தாக்குதல் சம்பவத்தில் 8 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது.
2018ம் ஆண்டு நவம்பர் மாதம் – கராச்சியில் உள்ள சீன தூதரகத்தைத் தாக்க பி.எல்.ஏ போராளிகள் முயன்றனர். இதில் ஏழு பேர் உயிர் இழந்தனர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு