சென்னை: தமிழகத்தில் உயர்கல்விப் பணிகள் பாதிக்கப்படாமல் இருக்க, பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு முதல்வருக்கு முன்னாள் துணை வேந்தர் பாலகுருசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் ஸ்டாலினுக்கு அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் இ.பாலகுருசாமி அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: மாநிலத்தின் பல்வேறு பல்கலைக்கழகங்கள் துணைவேந்தர்கள் இல்லாமல் பல ஆண்டுகளாக இயங்கி வருவதால் உயர்கல்வி வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. பல்கலைக்கழகங்களின் கல்வி, நிர்வாகப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
துணைவேந்தர்கள் இல்லாததால் முக்கியமான ஆசிரியர் பணியிடங்கள் காலியாகவே இருக்கின்றன. இதனால், பணியில் உள்ள ஆசிரியர்களின் பணிச்சுமை அதிகரித்துள்ளது. இதனால், கல்வி, ஆராய்ச்சியின் தரம் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு பல்கலைக்கழகங்களால் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை சரியாகப் பயன்படுத்த இயலாமல் போகிறது. குறிப்பாக உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், ஆய்வுக்கான மானியங்களை ஒதுக்குதல், மாணவர்களுக்குத் தேவையான வசதிகள் ஆகியவற்றுக்கு நிதியைப் பயன்படுத்த இயலவில்லை.
தேர்வுகள் தேவையின்றி தள்ளிப் போதல், உரிய நேரத்தில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படாமை, சான்றிதழ்கள் வழங்குவதில் தேவையில்லாத தாமதம் என மாணவர்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். கல்வியின் தரத்தையும், தேசிய அளவில் நமது பல்கலைக்கழகங்கள் பெற வேண்டிய இடத்தையும் இழக்கும் ஆபத்து உள்ளது. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.