0
‘மெட்ராஸ்காரன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடத்திலும் பிரபலமான மலையாள நடிகர் ஷேன் நிகாம் முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘பல்டி’ திரைப்படம் – 60 சதவீதம் மலையாளமாகவும், 40 சதவீதம் தமிழ் திரைப்படமாகவும் இருக்கும் என அப்படத்தின் இயக்குநர் உன்னி சிவலிங்கம் தெரிவித்திருக்கிறார்.
அறிமுக இயக்குநர் உன்னி சிவலிங்கம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பல்டி ‘ எனும் திரைப்படத்தில் ஷேன் நிகாம், சாந்தனு பாக்யராஜ், பிரீத்தி அஸ்ராணி, செல்வராகவன், அல்போன்ஸ் புத்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அலெக்ஸ் ஜே. புல்லிக்கல் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.
கபடி எனும் வீர விளையாட்டின் பின்னணியில் எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை எஸ் டி கே பிரேம்ஸ் மற்றும் பினு ஜோர்ஜ் அலெக்ஸாண்டர் புரொடக்ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சந்தோஷ் டி. குருவில்லா மற்றும் பினு ஜோர்ஜ் அலெக்சாண்டர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் 26 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தினை விளம்பரப்படுத்தும் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் படக்குழுவினர் பங்கு பற்றினர்.
இதில் படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், ” இப்படத்தின் கதையை இரண்டு ஆண்டு காலமாக எழுதினேன். அதற்காக இப்படத்தில் கதாசிரியராகவும் நானே பணியாற்றியிருக்கிறேன். கபடி எனும் விளையாட்டை மையப்படுத்தி தமிழக மற்றும் கேரள மாநில எல்லையை ஒட்டிய கதை களத்தில்.. தமிழும், மலையாளமும் கலந்து சரளமாக பேசும் கதாபாத்திரங்களுடன் இப்படத்தினை உருவாக்கி இருக்கிறேன்.
கபடி விளையாட்டில் ஆர்வத்துடன் ஈடுபட்டிருக்கும் நான்கு இளைஞர்களின் வாழ்வியலை உணர்வுபூர்வமாக விவரித்து இருக்கிறோம். இது ரசிகர்களை கவரும் என நம்புகிறேன். படத்தை பட மாளிகைக்கு வருகை தந்து கண்டு ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்றார்.