பட மூலாதாரம், Getty Images
அமெரிக்கா மற்றும் யுக்ரேன் அதிகாரிகள் கடந்த செவ்வாய்க்கிழமை, ரஷ்யா – யுக்ரேன் போர் குறித்து செளதி அரேபியாவில் சந்தித்து பேசினர்.
அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான், ரஷ்ய அதிபர் புதின் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகிய இருவருடனும் வலுவான உறவை வைத்திருப்பதால் இந்த பேச்சுவார்த்தை நடத்த செளதி அரேபியா தேர்ந்தெடுக்கப்பட்டது.
போரில் ஈடுபட்டிருக்கும் ரஷ்யா மற்றும் யுக்ரேன் ஆகிய நாடுகளுக்கிடையில் மத்தியஸ்தராக முக்கிய பங்காற்றவிருப்பதாக செளதி அரசு கூறியிருந்தது.
செளதி அரேபியாவின் சிறிய அண்டை நாடான கத்தாரும், கடந்த பல ஆண்டுகளாக உலக அளவில் பிரசித்தி பெற்ற மத்தியஸ்த நாடாக உருவெடுத்திருக்கிறது.
காஸாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே ஏற்பட்ட போர்நிறுத்தத்தில் கத்தார் முக்கிய பங்காற்றியது. மேலும் இதற்கு முன்பு பல போர்நிறுத்தங்களையும் கத்தார் செய்துள்ளது.
இந்த அண்டை நாடுகள் சர்வதேச அளவில் மத்தியஸ்தர்களாக இருப்பதற்கு காரணம் என்ன? இதனால் அவர்களுக்கு இடையே ஏதேனும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதா?
அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்த செளதி அரேபியா விரும்புவது ஏன்?
பட மூலாதாரம், Getty Images
பல ஆண்டுகளாக மிக கடுமையான அணுகுமுறையை பின்பற்றி வந்த செளதி அரேபியா அமைதியை நிலைநாட்டும் மத்தியஸ்தராக தன்னை காட்டிக்கொள்ள முயன்றுள்ளது.
2015ஆம் ஆண்டு ஏமன் உள்நாட்டு யுத்தத்தில் ஏமன் அரசுக்கு ஆதரவாக தலையிட்டு ஹூதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தியது.
2017ஆம் ஆண்டு, லெபனான் பிரதமர் சைய்த் அல் ஹரிரியை பதவி விலக நிர்பந்திப்பதற்காக அவரை பிடித்து வைத்திருப்பதாக செளதி அரேபியா மீது லெபனான் அரசு குற்றம்சாட்டியது.
2018 ஆம் ஆண்டில், செளதி அரசின் கடும் விமர்சகரான பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி, இஸ்தான்புல்லில் உள்ள செளதி அரேபியாவின் தூதரகத்தில், அரசின் ஏஜென்டுகளால் கொல்லப்பட்டார்.
“முகமது பின் சல்மானின் ஆரம்ப ஆட்சிக் காலம் மோதலை கொண்டுவந்தது,” என்கிறார் அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள மத்திய கிழக்கு மையத்தின் பால் சலம்.
“ஆனால், மோதல்களைவிட அமைதி ஒப்பந்தங்கள் ஏற்படுத்தி மத்தியஸ்தராக இருப்பது மேலானது என தலைமை முடிவு செய்திருக்கிறது.” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
மத்திய கிழக்கு பகுதியில் நிலைத்தன்மையை அதிகரிக்கவே செளதி அரேபியா அமைதி பேச்சுவார்த்தைகளில் மத்தியஸ்தராக செயல்பட்டிருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த மத்திய கிழக்கு விவகாரங்களுக்கான சிந்தனைக் குழுவான வாஷிங்டன் இன்ஸ்டிட்யூட்டைச் சேர்ந்த எலிசபெத் டெண்ட் சொல்கிறார்.
“சௌதி அரேபியாவின் எண்ணெய் மீதான சார்பைக் குறைத்து புதிய தொழில்களுக்கு வெளிநாட்டு முதலீட்டைக் கொண்டுவருவதற்கான திட்டத்திற்கு இது முக்கியமானது”, என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
இதனால் செளதி அரேபியாவுக்கு என்ன பலன்?
மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்காக செளதி அரேபியாவின் வரலாறு பல ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கியது.
1989 ஆம் ஆண்டில், லெபனானில் சண்டையிட்ட பிரிவுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தைகளில் செளதி அரேபியா மத்தியஸ்தம் செய்தது. இதனால் டயீப் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டதுடன், 1990ஆம் ஆண்டு போர் நிறுத்தம் ஏற்பட்டது. இது அந்த நாட்டில் 15 ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்தது.
2007ஆம் ஆண்டு, பாலத்தீன குழுக்களான ஹமாஸ் மற்றும் ஃபத்தா இடையே மோதல்களை முடிவுக்கு கொண்டு வந்த மெக்கா ஒப்பந்தத்தில் செளதி அரேபியா மத்தியஸ்தராக செயல்பட்டது.
அண்மையில் பட்டத்து இளரவசர் முகமது பின் சல்மான் அந்நாட்டின் ஆட்சியாளராக இருக்கும் நிலையில், செளதி அரேபியா மத்தியஸ்தர் பொறுப்பை மீண்டும் ஏற்றது.
2022ஆம் ஆண்டு முதல், ஏமனில் போர்நிறுத்தம் கொண்டுவரும் முயற்சியில் ஹூதி கிளர்ச்சியாளர்களுடன் செளதி அரேபியா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
சூடானின் மோதலில் ராணுவ ஆட்சியாளர்களின் ஆயுதப் படை மற்றும் கிளர்ச்சி செய்து வரும் துணை ராணுவப் படையான ரேபிட் சப்போர்ட் போர்ஸ் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே நீண்டகால பேச்சுவார்த்தைகளையும் இது நடத்தி வருகிறது.
2022-ல் ரஷ்யா – யுக்ரேன் இடையே 250-க்கும் மேற்பட்ட கைதிகளை அவரவர் நாட்டுக்கு திரும்ப வழிவகை செய்யும் ஒப்பந்தத்திலும் செளதி அரேபியா மத்தியஸ்தராக செயல்பட்டது,
பட மூலாதாரம், Getty Images
கத்தார் செய்த அமைதி ஒப்பந்தங்கள் என்னென்ன?
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையே செய்துகொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்திய நாடுகளில் (எகிப்து மற்றும் அமெரிக்காவுடன்) கத்தார் ஒரு முக்கிய நாடாக இருந்தது.
2020ஆம் ஆண்டில், ஆப்கானிஸ்தானில் 18 ஆண்டுகளாக நீடித்து வந்த போரை முடிவுக்கு கொண்டுவர தலிபான் மற்றும் அமெரிக்கா இடையே கத்தார் மத்தியஸ்தராக செயல்பட்டது. இதில் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் படைகளை விலக்கிக்கொள்ள, தலிபான் நாட்டை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டது.
2010-ல் ஏமனில் அரசுக்கும், ஹூதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையில் ஒரு போர்நிறுத்த ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. (அது பின்னர் தோல்வியடைந்தது.)
அது ஆப்ரிக்காவிலும் அமைதி பேச்ச்வார்த்தைகளில் மத்தியஸ்தராக செயல்பட்டுள்ளது
2022ஆம் ஆண்டு சாட் நாட்டின் அரசுக்கும் பல டஜன் எதிர்ப்புக்குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் அவைகளில் ஒன்று.
மற்றொன்று, 2010-ல் சூடான் அரசுக்கும் ஆயுத குழுக்களுக்கும் இடையில் மேற்கத்திய பிராந்தியமான டார்ஃபூரில் அமைதி ஒப்பந்தம்
2008ஆம் ஆண்டில், லெபனானில் போட்டி குழுக்களிடம் பகைமை அதிகரித்து புதிய உள்நாட்டு யுத்தம் ஏற்படும் ஆபத்து உருவான சூழலில், கத்தார் ஒரு ஒப்பந்தத்தை சாத்தியப்படுத்தியது.
கத்தார் ஒரு மத்தியஸ்தராக இருக்க விரும்புவதன் காரணம் என்ன?
1995-ல் அரியணைக்கு வந்த (2013ஆம் ஆண்டுவரை அதிகாரத்தில் இருந்தார்) ஹமத் பின் கலிஃபா அல் தானியின் கீழ் மத்தியஸ்தராக கத்தார் செயல்பட்டது.
இதற்கு முக்கிய காரணம், வளைகுடாவில் 1990ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட நார்த் டோம் மற்றும் சவுத் பார்ஸ் பீல்ட் என அழைக்கப்படும் எரிவாயு இருப்பை பயன்படுத்த கத்தார் விரும்பியது.
எரிவாயு வயல் கத்தார் மற்றும் இரானின் கடல் எல்லையில் இருந்ததால், இதைச் செய்ய கத்தார் இரானுடன் ஒத்துழைக்க வேண்டியிருந்தது. இரான் அப்போது செளதி அரேபியாவின் எதிரியாக இருந்தாலும் அதனுடன் கத்தார் ஒத்துழைக்கவேண்டியிருந்தது என்கிறார் பிரிட்டனின் ராயல் யுனைடட் சர்வீஸஸ் இன்ஸ்டியூட்டை சேர்ந்த முனைவர் ஹெச்ஏ ஹெல்யெர்.
“எரிவாயு வயலை கண்டுபிடித்த பின்னர், தனக்கென ஒரு பாதையை வகுத்துக்கொள்ளவேண்டும் என கத்தார் புரிந்துகொண்டது,” என அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
கத்தார் 2004 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொண்ட அரசமைப்பு சட்டத்திலேயே அதன் அமைதிக்கான மத்தியஸ்தர் பங்கு இடம்பெற்றுள்ளது.
“சர்வதேச மத்தியஸ்தத்தை தனது தேசிய அடையாளங்களில் ஒன்றாக தேர்வு செய்துள்ள கத்தார், மற்றவர்கள் பயன்படுத்திக்கொள்ளக் கூடிய நாடாக தன்னை அடையாளப்படுத்திக்கொண்டிருக்கிறது,” என்கிறார் முனைவர் சலம்.
பட மூலாதாரம், Getty Images
செளதி அரேபியா மற்றும் கத்தார் இடையேயுள்ள வேறுபாடுகள் என்ன?
சௌதி அரேபியாவும் பிற நாடுகளும் தொடர்புவைத்துக்கொள்ள விரும்பாத குழுக்களுடன், கத்தார் தொடர்புகளை வைத்திருப்பதால், கத்தார் பெரும்பாலும் சமாதான ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதற்கான ஒரு நாடாக தேர்ந்தெடுக்கப்படுகிறது.
“முஸ்லிம் சகோதரத்துவம், ஹமாஸ் மற்றும் தாலிபன் போன்ற இஸ்லாமிய குழுக்கள் மீது செளதிக்கு இருப்பதைப் போன்ற ஆழமான விரோதம் கத்தாருக்கு இல்லை,” என்கிறார் சலம்.
தாலிபானுடன் கத்தார் வளர்த்த உறவுகள், அமெரிக்காவிற்கும் அந்நாட்டிற்கும் இடையே பாலமாக இருக்க உதவியது என்றும், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினர் மத்தியிலும் கத்தார் கொண்டுள்ள தொடர்பு காஸா போர்நிறுத்த ஒப்பந்தத்தை கொண்டு வர உதவியது என்றும் அவர் கூறுகிறார்.
”செளதி அரேபியா மரபுவழி சார்ந்தவர்களை கையாள்கிறது, கத்தார் மரபுசாராதவர்களை கையாள்கிறது,”என்கிறார் டெண்ட்.
ஆனால் கத்தார் முஸ்லிம் சகோதரத்துவம் போன்ற குழுக்களை ஆதரிப்பதன் மூலம் சௌதி அரேபியாவின் விரோதத்தை பெற்றுள்ளது. முஸ்லிம் சகோதரத்துவ குழுக்களை சௌதி அரேபியா அதன் ஆட்சிக்கு அச்சுறுத்தலாகக் கருதுகிறது.
“அரபு வசந்தத்தின் போது (2010, 2011), சிரியா, லிபியா போன்ற நாடுகளில் எதிர் குழுக்களுக்கு கத்தார் தடையற்ற ஆதரவை வழங்கியது,” என்கிறார் டெண்ட். “அது அதன் நிலைப்பாட்டை மிகத் தெளிவாக காட்டியது.”
இது 2017ஆம் ஆண்டு செளதி அரேபியா மற்றும் பிற மத்திய கிழக்கு நாடுகள் கத்தாருடனான அனைத்து உறவுகளையும் முறித்துகொள்ளும் “வளைகுடா பிரிவுக்கு” வழிவகுத்தது.
“இந்த விரிசலுக்குப் பிறகு, முதலில் தனது அண்டை நாடுகளுடன் கலந்தாலோசிக்காமல் எந்த கடும்போக்கு குழுவுடனும் கத்தார் பேசுவதில்லை,” என்கிறார் டெண்ட்.
“தற்போது ஒரு மத்தியஸ்தராக, அது மிகவும் நடுநிலையாக இருக்கிறது.”
யார் அமைதி ஒப்பந்தத்தை கொண்டு வருவது என்பது குறித்து கத்தாரும், செளதி அரேபியாவும் மோதுவதில்லை என்கிறார் ஹெல்யெர்.
“இந்நாட்களில் கத்தார் செளதி அரேபியாவுடன் போட்டிபோட விரும்புவதில்லை, அதே போல் செளதி அரேபியாவும் கத்தாரின் எந்த விவகாரத்தையும் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை, என்கிறார் அவர்.
”வருத்தமான விஷயம் என்னவென்றால், இரு நாடுகளும் தொடர்ந்து மத்தியஸ்த பணிகளில் ஈடுபடும் அளவுக்கு நிறைய மோதல்கள் இருக்கின்றன”
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.