பட மூலாதாரம், Alamy
சூனியக்காரி குறித்தான கதைகளில் வரக்கூடிய கூம்பு வடிவத் தொப்பியின் வரலாறு தெரியுமா?
‘விக்கட்: ஃபார் குட்’ (Wicked: For Good) வெளியாகியுள்ள நிலையில், கூம்பு வடிவத் தொப்பியின் வரலாற்று அர்த்தங்கள் என்ன, பண்டைய உலகம், இடைக்காலம், ஸ்பானிஷ் மத நீதிமன்றம் ஆகியவற்றில் இருந்து, எல்ஃபாபா வரை அது எப்படி உருவெடுத்துள்ளது என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
முதலில், சூனியக்காரியை நினைத்தவுடன் உங்கள் மனதில் தோன்றும் படம் எது? அது ஒருவேளை துடைப்பமாகக்கூட இருக்கலாம்.
கடந்த 1342ஆம் ஆண்டு, அயர்லாந்து பெண்மணி லேடி ஆலிஸ் கைட்லர் சூனியம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டபோது, முதன்முதலில் துடைப்பம் சூனியத்துடன் இணைக்கப்பட்டது.
ஓர் ஆய்வாளர், அவரது வீட்டை ஆராய்ந்தபோது, குற்றஞ்சாட்டப்பட்ட அந்தப் பொருளைக் கண்டார், “அதன் மீது அமர்ந்து தடைகள் எதுவாக இருந்தாலும் விரைவாகப் பாய்ந்து சென்றார்” என்று கூறப்பட்டது.
அல்லது அது கொப்பரையாக இருக்கலாம்.
வில்லியம் ஷேக்ஸ்பியரின் தி டிராஜெடி ஆஃப் மேக்பெத் (The Tragedy of Macbeth) என்ற நாடகத்தில், சூனியக்காரிகள் மருந்துகளை கொப்பரையில் காய்ச்சி, “Double, double toil and trouble; Fire burn and cauldron bubble” என மந்திரம் உச்சரித்தனர். அது சூனியக்காரிகளின் அடையாளமாக பின்னர் பிரபலமானது.
பட மூலாதாரம், Getty Images
ஆனால் சூனியக்காரி என்றவுடன் உடனடியாக மனதுக்கு வரும் உருவம் என்றால் அது கூம்பு வடிவத் தொப்பிதான்.
இந்தத் தொப்பி பல இடங்களிலும் சூனியக்காரி அடையாளமாகத் தோன்றியுள்ளது. உதாரணமாக, 1900இல் வெளியான பிராங்க் எல். பாம் எழுதிய தி வொண்டர்ஃபுல் விஸார்ட் ஆஃப் ஆஸ் (The Wonderful Wizard of Oz) என்ற குழந்தைகளுக்கான கிளாசிக் நாவலில், 1939இல் வெளியான அதே பெயரிலான திரைப்படத்தில் மார்கரெட் ஹாமில்டன் நடித்த மேற்கத்திய தீய சூனியக்காரி கதாபாத்திரத்தில், 1960களின் பிரபல சிட்காம் தொடரான பிவிட்ச்சடின் (Bewitched) தொடக்க கார்ட்டூன் பகுதியில், ஹாரி பாட்டர் திரைப்படங்களில் எனப் பல இடங்களில் இந்தத் தொப்பி தோன்றியுள்ளது.
சமீபத்திய உதாரணமாக நவம்பர் 21ஆம் தேதி வெளியான விக்கட்: ஃபார் குட் (Wicked: For Good) உள்படப் பல இடங்களிலும் தோன்றியுள்ளது.
கூம்பு வடிவத் தொப்பியின் பழமையான எடுத்துக்காட்டுகள் வெண்கல காலம் முதலே காணப்படுகின்றன. தங்கத்தால் செய்யப்பட்டிருந்த அவை, வானியல் குறியீடுகளாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இவற்றை அணிந்த பூசாரிகள் தெய்வீக அறிவும் சக்தியும் கொண்டவர்களாக இருந்ததாகக் கருதப்பட்டது.
கிமு 4–2ஆம் நூற்றாண்டு வரையிலான சீன மம்மிகளின் தலைகளிலும் கூர்மையான தொப்பிகள் காணப்பட்டன. அந்தக் கல்லறைகள் 1978இல் அகழாய்வு செய்யப்பட்டபோது, அவற்றுக்கு “சுபேஷியின் மந்திரவாதிகள்” என்ற பெயரும் கிடைத்தது.
பட மூலாதாரம், Getty Images
கூர்மையான தொப்பி சூனியக்காரி அடையாளமாக மாறியது எப்படி?
இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
வரலாற்றில் குறிப்பிட்ட காலங்களில், மனிதர்களைத் துன்புறுத்தவும், குறிப்பிட்ட குழுக்களை அடையாளம் காணவும் கூம்பு வடிவத் தொப்பிகள் பயன்படுத்தப்பட்டன.
சில மதங்களுக்கு, குறிப்பாக கிறிஸ்தவ கோட்பாட்டிற்கு முரணான நம்பிக்கை அல்லது கருத்தைக் கொண்டிருந்தவர்கள், மதவெறியர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு, தனித்துவமான தொப்பியை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த 13ஆம் நூற்றாண்டில் யூத ஆண்கள் ரோமன் கத்தோலிக்க திருச்சபையால் ஜூடன்ஹட் எனப்படும் கூம்பு வடிவ, கொம்புகள் கொண்ட தொப்பியை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
கடந்த 1478ஆம் ஆண்டு தொடங்கிய ஸ்பானிஷ் விசாரணைக் காலத்தில், மதங்களுக்கு எதிரான கொள்கை, மத துரோகம், கடவுளுக்கு எதிராகப் பேசுதல் மற்றும் சூனியம் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களை அடையாளம் காண ஏற்றவகையில், கேபிரோட் (capirote) அல்லது கொரோசா (coroza) எனப்படும் உயர்ந்த, கூம்பு வடிவத் தொப்பியை அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஸ்பெயினில் மத விழாக்களில், குறிப்பாகப் புனித வாரத்தில், கேபிரோட் இன்னமும் அணியப்படுகிறது.
ஆனால், ‘இதுவே கூர்மையான தொப்பி பின்னாட்களில் சூனியக்காரியின் அடையாளமாக மாறுவதற்குக் காரணமாக அமைந்ததா?’ என்று கேள்வி எழுப்பினால், அதற்கான பதில்கள் வேறுபடுகின்றன.
பட மூலாதாரம், Alamy
பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு, கலைஞர் பிரான்சிஸ்கோ கோயா தனது ஓவியமான விட்ச்சஸ் ஃப்ளைட்-இல் (Witches’ Flight – 1798) கொரோசாவை பற்றிக் குறிப்பிடுகிறார். அதில் மூன்று பெண் சூனியக்காரிகள் காற்றில் மிதந்தபடி ஒரு மனிதனை சுமந்து செல்கிறார்கள்.
இந்தக் கலைப் படைப்பு , மூட நம்பிக்கையையும் அறியாமையையும் நகைச்சுவையாக விமர்சிக்க உருவாக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.
அறிவொளி காலத்தில் (Enlightenment era) உருவாக்கப்பட்ட இந்த ஓவியத்தில், வானில் மிதந்து செல்லும் சூனியக்காரிகள் கோரமான முகத்துடன், உயரமான கூம்பு வடிவ தொப்பிகளை அணிந்துள்ளனர். அவை மைட்டர் (mitre) அல்லது மதவெறியர்கள் அணிய வேண்டிய கொரோசாவை போல் இருக்கின்றன. அவர்களுடன் சேர்ந்து வரையப்பட்டுள்ள கழுதை அறியாமையைக் குறிக்கிறது.
கீழே, சில விமர்சகர்களால் “பயம்”, “மாயை” ஆகியவற்றை குறிப்பதாகக் கருதப்படும் இரு ஆண்கள், அங்கு பேய் அல்லது இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வு நடப்பதாக உணர்ந்து அதற்கு எதிர்வினை ஆற்றுகிறார்கள்.
கலை வரலாற்றாளர்கள் இந்த ஓவியத்தையும் அதிலுள்ள கூம்பு தொப்பிகளையும் பல்வேறு விதமாக விளக்கியுள்ளனர்.
சூனியக்காரர்களின் தயாரிப்பு
இடைக்காலத்தில், இடைக்கால பீர் தயாரிப்பாளர்களான அலெவைவ்ஸ் கூர்மையான தொப்பிகளை அணிந்தனர். மூலிகைகள் பற்றிய அவர்களின் அறிவு, மருந்துகளைக் கலக்க பயன்படுத்தப்படும் கொப்பரைகளுடனான (cauldrons) தொடர்பை வலுப்படுத்துகிறது.
“‘ஞானம் கொண்ட பெண்கள்’, மூலிகை நிபுணர்கள், வயதான பெண்கள் போன்றோர் பல்வேறு பண்பாடுகளில், பல ஆயிரம் ஆண்டுகளாகவே சந்தேகத்துடன் பார்க்கப்பட்டார்கள்.
அதே குழுவில் பீர் தயாரிக்கும் பெண்களும் (brewsters) சேர்க்கப்பட்டனர். மூடநம்பிக்கையுடன் இருந்த, கல்வியறிவற்ற மக்கள், இப்படியானோரை ‘புறக்கணிக்கப்பட்டவர்கள்’ எனக் கருதினர்,” என்று மது நிபுணர் ஜேன் பேட்டன், தாரா நூரின் மற்றும் டெரி ஃபஹ்ரெண்டார்ஃப் எழுதிய எ வுமென்’ஸ் பிளேஸ் இஸ் இன் தி ப்ரூஹவுஸ்: எ ஃபர்காட்டன் ஹிஸ்டரி ஆஃப் அலெவைவ்ஸ், ப்ரூஸ்டர்ஸ், விட்ச்சஸ் அண்ட் சிஇஓஸ் (A Woman’s Place Is in the Brewhouse: A Forgotten History of Alewives, Brewsters, Witches, and CEOs) என்ற புத்தகத்தில் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
சசெக்ஸ் பல்கலைக் கழகத்தின் ஆரம்பக்கால நவீன வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியரான முனைவர் லாரா கூனைன், சூனியத்துடனான அலெவைஃப் தொடர்புகள் “ஒரு கட்டுக்கதை” என்றும், இந்தத் தொடர்பு பின்னாளில் உருவாக்கப்பட்டதாகவும் விளக்குகிறார்.
கடந்த 16ஆம் நூற்றாண்டின் சூழல் எப்படி இருந்தது என்பதை அவர் பிபிசியிடம் விவரித்தார்.
“அப்போது எல்லாரிடமும் கொப்பரை இருந்தது. சமையல் செய்ய மக்கள் அதைப் பயன்படுத்தினர். எல்லாரிடமும் துடைப்பமும் இருந்தது. அதே போல் எல்லாரும் ஒரு வகைத் தொப்பியை அணிந்திருந்தனர். அது கட்டாயமாகக் கூர்மையான தொப்பியாக இருந்ததில்லை. வெறுமனே ஏதாவது ஒரு வகைத் தொப்பி மட்டும்தான். பெண்கள் தங்கள் சமூக நிலை மற்றும் திருமண நிலையைப் பொறுத்து பல விதமான தொப்பிகளை அணிந்திருந்தனர்” என்று அவர் குறிப்பிட்டார்.
சூனியத்தின் வரலாறு குறித்து விரிவுரை வழங்கிய கூனைன், நவீன காலத்தின் தொடக்கத்தில் “சூனியக்காரிகள் எனக் குற்றம் சாட்டப்பட்டவர்களை மற்ற மக்களிடம் இருந்து வேறுபடுத்தியது, அவர்கள் தொப்பி அணியாததுதான்” என்று கூறுகிறார்.
“அந்தக் காலத்தின் படங்களைப் பார்த்தால், அல்பிரெக்ட் டியூரரின் விட்ச் ரைடிங் பேக்வேர்ட்ஸ் ஆன் எ கோட் ( Witch Riding Backwards on a Goat,1501–02) அல்லது ஹான்ஸ் பால்டுங் க்ரியனின் தி விட்ச்சஸ் சபாத் (The Witches’ Sabbath, 1510) போன்ற மிகவும் குறிப்பிடத்தக்க படங்களில், சூனியக்காரிகள் தொப்பி இல்லாமல் சித்தரிக்கப்படுகிறார்கள். அவர்கள் முடியைப் பின்னலிடாமல் இருப்பார்கள். அது அவர்களுடைய கட்டுக் கடங்காத உணர்ச்சிகளையும், தார்மீக சமூக மதிப்புகளுக்கு அவர்கள் எதிர்மறையாக இருப்பதையும் குறிக்கிறது.
அந்தக் காலத்தில் பெண்கள் தளர்வான முடியுடன் இருப்பது சாதாரண விஷயமாகக் கருதப்படவில்லை. அப்படி இருப்பவர்கள் ‘ஒழுக்கக் கேடானவர்களாக’ கருதப்பட்டனர்.”
கண்ணுக்குத் தெரியாத உலகம்
கூம்பு வடிவத் தொப்பியும் சூனியக்காரியும் இணைந்து காணப்படும் மிகவும் பழமையான எடுத்துக்காட்டு, 1693ஆம் ஆண்டில் வெளியான காட்டன் மாதர் எழுதிய தி வொண்டர்ஸ் ஆஃப் தி இன்விஸிபிள் வோர்ல்ட் (The Wonders of the Invisible World) என்ற புத்தகத்தில் உள்ளது.
அதில், ஒரு சூனியக்காரி துடைப்பத்தில் பறப்பதுடன், சாத்தானும் (devil) அவருடன் இருப்பது போலச் சித்தரிக்கப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
ஆனால், கூர்மையான கூம்புத் தொப்பி சூனியக்காரியை சுட்டிக் காட்டுகிறது என்ற கருத்தைப் பற்றி முனைவர் குனைன் தனது சந்தேகத்தை வெளிப்படுத்துகிறார்.
“அப்போது பலரும் அந்த மாதிரி கூர்மையான தொப்பிகளைத்தான் அணிந்திருந்தார்கள். இதில் குறிப்பிடத்தக்க சூனியக்காரிகளின் பண்பு என எதுவும் இல்லை,” என்று அவர் விளக்குகிறார்.
கடந்த 17ஆம் நூற்றாண்டின் ஓவியங்களான, பெயர் தெரியாத ஓவியரின் போர்ட்ரெய்ட் ஆஃப் எஸ்தர் இங்க்லிஸ் (Portrait of Esther Inglis) உருவப்படம் மற்றும் ஜான் மைக்கேல் ரைட் வரைந்த போர்ட்ரைட் ஆஃப் மிஸ்ஸஸ் சேல்ஸ்பரி வித் ஹெர் கிராண்ட்சில்ட்ரன் எட்வர்ட் அண்ட் எலிசபெத் பேகாட் (Portrait of Mrs Salesbury with her Grandchildren Edward and Elizabeth Bagot) உருவப்படம் போன்றவற்றில் பெண்கள் உயரமான கூம்பு வடிவத் தொப்பிகளை அணிந்திருப்பது காணப்படுகிறது.
அவர்களில் யாருக்கும் சூனியத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை. அவர்கள் அக்காலத்தில் பிரபலமாக இருந்த அழகியல் வடிவத்தின்படி அந்தத் தொப்பியை அணிந்திருந்தார்கள்.
கூர்மையான கூம்புத் தொப்பிக்கும் சூனியக்காரிக்குமான தொடர்பு, உண்மையில் பின்னாளில் உருவானதுதான். 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதி முதல் 18, 19ஆம் நூற்றாண்டுகளில் வந்த ஓவியங்கள் மற்றும் குழந்தைகளுக்கான கற்பனைக் கதைகளில்தான் இந்த உருவம் பரவலானது.
கடந்த 17ஆம் நூற்றாண்டில் ஃபேஷனாக கருதப்பட்ட கூம்பு வடிவத் தொப்பியின் உருவம், காலப்போக்கில் மக்கள் மனதில் நிலைத்துத் தங்கி, இன்றும் சூனியக்காரியின் அடையாளமாகக் கருதப்படுகிறது.
வரலாற்றில் பல பெண்கள் இதுபோன்ற ஸ்ட்ரோபிலாய்டு (strobiloid) வகையிலான தொப்பிகளை அணிந்துள்ளனர்.
அதில் சிண்ட்ரெல்லா , ஸ்லீப்பிங் பியூட்டி போன்ற கற்பனைக் கதைகளின் நாயகிகளும் கூம்புத் தொப்பிகளை அணிந்து காணப்படுகின்றனர். அவை 1400களில் ஐரோப்பிய உயர்வகுப்பைச் சேர்ந்த பெண்கள் அணிந்த ஹென்னின் (hennin) எனப்படும் உயரமான கூம்புத் தலைக் கவசத்தை அடிப்படையாகக் கொண்டவை என்று விளக்குகிறார் முனைவர் குனைன்.
பட மூலாதாரம், Alamy
அப்படியானால், தொப்பியின் நிறம்தான் தீமைக்கான சின்னமாக மாறியதா?
அதை விவரிக்கிறார் முனைவர் குனைன். 1621இல் வெளியான வில்லியம் ரோலி, தாமஸ் டெக்கர், ஜான் போர்ட் ஆகியோரின் தி விட்ச் ஆஃப் எட்மன்டன் (The Witch of Edmonton) என்ற நாடகத்தை அவர் சுட்டிக் காட்டுகிறார்.
அதில் ஒரு சூனியக்காரி, டாம் என்ற பெயருள்ள கருப்பு நாயின் வடிவத்தில் வரும் சாத்தானுடன் பேசுகிறார். வரலாற்றில் பிசாசு பெரும்பாலும் கருப்பு நிற உடை அணிந்திருப்பதாகக் கூறப்படுகிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.
“அந்தக் காலத்து ஓவியங்கள் பெரும்பாலும் மரத்தால் (woodcut) செய்யப்பட்டவை. அதனால் அவை கருப்பு நிறத்தில் மட்டுமே வரையப்பட்டன. கூடவே, சூனியக்காரிகள் இரவின் இருளில் சந்திப்பதாகவும் நம்பப்பட்டது. எனவே ‘கருமை’, ‘இரவு’, ‘மறைந்த செயல்கள்’ போன்றவை அனைத்தும் சூனியத்துடன் இணைக்கப்பட்டன,” என்று அவர் கூறுகிறார்.
மேலும், “யார் சூனியக்காரி என்பதை இருளின் போர்வையில் உங்களால் அறிய முடியாது. அதனால், கருப்பு நிறம் தீமை, இருள், மறைவு ஆகியவற்றின் சின்னமாகிவிட்டது,” என்று அவர் சுட்டிக்காட்டினார்.
சூனியக்காரியின் அடையாளத்தை மீட்டெடுத்தல்
இன்றைய காலத்தில் சூனியக்காரியை அருவருப்பான, வயதான பெண் என்று கற்பனை செய்வது பெரும்பாலும் பாம் எழுதிய தி வொண்டர்ஃபுல் விஸார்ட் ஆஃப் ஆஸ் புனைவின் (The Wonderful Wizard of Oz) தாக்கம்தான்.
அதில் வரும் டோரதி கேல் மற்றும் அவருடன் பயணிக்கும் வித்தியாசமான நண்பர்களின் கதையைப் பின்னர் மாற்றி, 1939ஆம் ஆண்டு தி விஸார்ட் ஆஃப் ஆஸ் என்ற திரைப்படமாக வெளியிடப்பட்டது.
ஹாமில்டனின் பச்சை நிற தோல், வளைந்த மூக்கு, கொடூரமாகச் சிரிக்கும் சூனியக்காரியின் உருவம் என அந்தப் படம், ஒவ்வொரு முறை தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டபோதும், பல தலைமுறை குழந்தைகளின் கனவுகளில் ஆழமாகப் பதிந்துவிட்டது.
பட மூலாதாரம், Alamy
ஆனால் பெண்ணிய அலைகள், வரலாற்றில் சூனியக்காரிகள் எனக் குற்றம் சாட்டப்பட்ட பெண்களின் குணங்களையும் வாழ்க்கை முறைகளையும் பெண்கள் மீட்டெடுக்க உதவின.
பெண்களின் ஒற்றுமை, முழுமையான சிகிச்சை முறை, ஆண்களிடம் இருந்து விடுதலை, சூழலியல்-பெண்ணியம் (ecofeminism) மற்றும் பாலியல் சுதந்திரம் போன்ற பல அம்சங்களும் அதில் அடங்கும்.
இதனால், சூனியக்காரி எனும் உருவம் இன்று மேலும் ஆழமான, பல பரிமாணங்களைக் கொண்டதாகப் புரிந்துகொள்ளப்படுகிறது.
சிலருக்கு, சூனியக்காரி என்பது பெண்களை ஒடுக்கி வந்த ஆணாதிக்கத்திற்கும், பெண் வெறுப்புக்கும் எதிரான போராட்டத்தின் அடையாளமாக மாறியுள்ளது.
இது இன்ஸ்டாகிராம் கேப்ஷன்களில் இருந்து தலையணை உறைகள் வரை பலவற்றிலும் காணப்படும் ஒரு பிரபலமான வரியால் விளக்கப்படுகிறது. “நீங்கள் எரிக்க முடியாத சூனியக்காரிகளின் மகள்கள் நாங்கள்” என்பதுதான் அந்த வரி.
“இப்போது சூனியக்காரி என்பது சுய அதிகாரம், ஆணாதிக்கத்திற்கு எதிரான மற்றும் பெண்ணியத்தின் அடையாளமாக இருக்கிறது” என்கிறார் முனைவர் கூனைன்.
கிரெகோரி மக்வயரின் 1995ஆம் ஆண்டின் விக்கெட் (Wicked) என்ற கதையை அடிப்படையாகக் கொண்டு பிராட்வே நாடகமும் பின்னர் இரண்டு திரைப்படங்களும் உருவாக்கப்பட்டன. இதில் ‘விக்கட் விச் ஆஃப் தி வெஸ்ட்’ எனப்படும் சூனியக்காரிக்கு ‘எல்ஃபாபா’ என்ற பெயரும், அவரை எதிரியாகக் காட்டிய சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட ஒருவராகவும், ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிற்கும் துணிச்சலான நபராகவும் காட்டும் பின்னணிக் கதை வழங்கப்பட்டது.
சூனியக்காரியை தவறாகப் புரிந்துகொள்ளப்பட்ட ஒரு பாத்திரமாக மீட்டுருவாக்கம் செய்வதோடு, பிவிட்ச்சடு (Bewitched) தொடரின் சமந்தா, மேலும் 1990களின் சார்ம்டு (Charmed) தொடரின் ப்ரூ, பைப்பர், பீபி, பேஜ் ஹாலிவெல் போன்ற பாப் கலாசாரச் பாத்திரங்களும் சேர்ந்து, கூம்பு வடிவத் தொப்பி இனி பயமூட்டும் ஒன்றாக இல்லாமல், இயல்பான ஒன்றாக மாற்றம் பெறுகிறது.
அகாடமி விருது பெற்ற விக்கெட் (Wicked) நாடகத்தின் ஆடை வடிவமைப்பாளர் பால் டாஸ்வெல்லும் இதற்கு ஒரு காரணம்.
கிளிண்டா “அருவருப்பான தொப்பி” என்று அழைக்கும் அந்தத் தொப்பியை, எல்ஃபாபாவின் பூமியுடன் உள்ள உறவைச் சிறப்பாக பிரதிபலிக்கும்படி டாஸ்வெல் மீட்டுருவாக்கம் செய்துள்ளார்.
“அது நாம் ஏற்கெனவே அறிந்துள்ள ஓர் உருவத்தை நினைவூட்டுகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட விதத்தில் தனித்துவமான ஒன்றாக அது மாறியுள்ளது,” என்று டாஸ்வெல் தி கட் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
பட மூலாதாரம், Universal
‘விக்கெட்’ சூனியக்காரி பற்றிய பழைய கதைகளை மீண்டும் மீட்டுருவாக்கம் செய்யும்போது, கூம்பு வடிவத் தொப்பி மீதான பயத்தைக் குறைத்து, அதை மென்மையான உருவமாக மாற்றியதில் பெரிய பங்கு வகிக்கிறது.
அதில் இயல்பாகவே பயமூட்டும் எதுவும் இல்லை. அது வெறும் பொருள் மட்டும்தான். “கலை, கதைகள் வழியாக நூற்றாண்டுகளாகக் கூறப்பட்டு வந்த புராணங்கள் அதற்கு அர்த்தம் கொடுத்துள்ளன. அந்த அர்த்தங்கள் காலம் செல்லச் செல்ல மாறிக்கொண்டே இருக்கின்றன” என்கிறார் கூனைன்.
இன்று சிலர், அந்தத் தொப்பியை ஆற்றலைக் கடத்தும் கருவியாகக் கருதுகின்றனர். குழந்தைகள் இன்னும் ‘spooky season’ (ஹாலோவீன் காலம்) வந்தால் அதைப் பெற ஆவலாக இருக்கிறார்கள். உண்மையில், ‘விக்கெட்’ பற்றிய எதிர்பார்ப்பு தொடங்குவதற்கு முன், 2021இல் சூனியக்காரி தொப்பி கூகுளில் மிகவும் தேடப்பட்ட பிரபலமான ஹாலோவீன் வேடமாக இருந்தது.
நவீன கலாசாரத்தில், பழைய மரச் சிற்பங்கள், ஓவியங்கள், கற்பனைக் கதைகள் போன்றவை கூம்பு வடிவத் தொப்பி மீதான தாக்கத்தை ஏற்படுத்தியதைப் போலவே, இன்றைய வடிவமும் எதிர்கால தலைமுறைகளின் புரிதலை உருவாக்கும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு