பட மூலாதாரம், Personal collection
முதன்முதலில் கெவின் கரோலும் டெபி வெபரும் 1967 ஆம் ஆண்டு ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டனர். அப்போது பதின்ம வயதில் இருந்த அவர்கள் இருவரும் அவரவர் உயர்நிலைப் பள்ளி நாடகக் குழுக்களின் உறுப்பினர்களாக இருந்தனர்.
முதல் பார்வையிலேயே அவர்கள் இருவருக்கும் ஆழமான ஈர்ப்பு ஏற்பட்டது.
“நான் ஆண்கள் பள்ளியில் படித்தேன், டெப் பெண்கள் பள்ளியில் படித்தார்”, “ஒரு ஆடிஷனின் போது, நாங்கள் அனைவரும் அரங்கத்தில் இருந்தபோது, எனது நண்பனிடம், ‘அந்தப் பெண்ணைப் பார், நான் அவரைப் பள்ளி நடன நிகழ்ச்சிக்கு அழைத்துச் செல்லப் போகிறேன்’ என்று சொன்னேன்”என்று கெவின் கரோல் பிபிசியின் ‘அவுட்லுக்’ நிகழ்ச்சிக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.
“நான் அரங்கத்தில் தனியாக அமர்ந்திருந்தேன், ஏனென்றால் ஆடிஷனுக்காக மற்ற பள்ளிகளில் இருந்து வந்திருந்த வேறு எந்தப் பெண்களையும் எனக்குத் தெரியாது, ஆனால் நான் அவரைக் கண்டபோது, நான் பார்த்ததிலேயே அவர் தான் மிகவும் அழகான பையன் என்று நினைத்தேன்”என்று டெபி வெபர் நினைவு கூர்ந்தார்.
அவர்கள் இருவரும் ஒன்றாக நடன நிகழ்ச்சிக்குச் சென்றனர்.
ஆனால் அதன் பிறகு அவர்களால் ஒருவரையொருவர் பிரிந்து இருக்க முடியவில்லை. எளிதில் திருமணம் செய்து கொள்ளக்கூடிய மேரிலாந்துக்கு ஓடிப்போகவும் அவர்கள் திட்டமிட்டனர்.
ஆனால், எல்லாமே மாறிவிட்டது.
டெபி வெபர் கர்ப்பமாக இருப்பதாக வந்த செய்தி, அவர்களின் கனவைச் சிதைத்ததுடன், அவர்களை 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பிரித்து வைத்தது.
இன்று அவர்கள் மீண்டும் ஒருவரை ஒருவர் கண்டுபிடித்துள்ளனர். இளமையில் அனுபவிக்க முடியாத அன்பை இப்போது பொக்கிஷமாகக் கருதுவதாகக் கூறுகிறார்கள்.
ஆனால், தற்போதைய நிலைக்கு வந்தடைந்துள்ள அவர்களின் பயணம் ஒரு ஹாலிவுட் திரைப்படத்துக்கு இணையானது.
எதிர்பாராத செய்தி
அந்தக் காலத்தின் சமூக விழுமியங்களின் பின்னணியில், தங்கள் மகள் கர்ப்பமாகிவிட்டதாகத் தெரிவித்தபோது டெபி வெபரின் பெற்றோர் ஆதரவாகவே இருந்தனர்.
“அவர்கள் மிகவும் அன்பானவர்கள். அவர்கள் கெவினை நேசித்தார்கள், அவர் ஒரு நல்ல பையன் என்பதையும், நாங்கள் ஒருவரையொருவர் மிகவும் நேசித்தோம் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர்,ஆனால் அந்தக் கால கட்டத்தில், கர்ப்பமான பெண்களுக்குச் சூழல் சற்று வித்தியாசமாக இருந்தது” என்று டெபி வெபர் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.
அவரைத் ஒற்றைத் தாய்மார்களுக்கான இல்லத்திற்கு அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டன. “வார இறுதி நாட்களில் கெவின் வந்து என்னை அழைத்துச் செல்ல என் அம்மா அனுமதித்தார், நாங்கள் வெளியே சென்று ஒன்றாக இரவு உணவு சாப்பிடுவோம்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
அப்போது, எப்படியாவது திருமணம் செய்துகொண்டு, பிறக்கவிருக்கும் குழந்தையை இருவரும் சேர்ந்து வளர்க்க முடியும் என்ற நம்பிக்கையை இருவருமே இறுகப் பற்றிக் கொண்டிருந்தனர்.
பட மூலாதாரம், Personal collection
கெவின் கரோல் இந்த யோசனையில் மிகவும் உறுதியாக இருந்தார், அதனால் அவர் தனது தாயாரை சம்மதிக்க வைத்து, 17 வயதிலேயே அமெரிக்கக் கடற்படையில் (US Marine Corps) சேர முடிவு செய்தார்.
“நாங்கள் திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், நான் கடற்படையில் சேர்ந்தால், டெப்க்குப் பணம் அனுப்ப முடியும், மேலும் கடற்படை அவரையும் குழந்தையையும் மருத்துவ ரீதியாகப் பார்த்துக் கொள்ளும் என்று நான் தெரிந்துகொண்டேன்.பயிற்சியிலிருந்து அவர்கள் என்னை வெளியே அனுப்பும்போது, நாங்கள் திருமணம் செய்து கொள்ளலாம் என்ற நம்பிக்கை எனக்கு இருந்தது”என்று கரோல் விவரித்தார்.
ஆனால் அது அனைத்தும் வெறும் நம்பிக்கையாகவே நின்றுவிட்டது.
அவரது ராணுவப் பயிற்சியின் போது, டெபி வெபரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில், அவர் குழந்தையைத் தத்துகொடுக்கப் போவதாகத் தெரிவித்திருந்தார்.
“அந்த உணர்வு எனக்கு இன்னும் நினைவிருக்கிறது,நான் பல கடற்படையினருடன் இந்தப் பயிற்சியில் இருந்தேன், அங்கே உணர்ச்சிகளை வெளியே காட்ட முடியாது, ஆனால் உள்ளுக்குள் என் உலகம் உடைந்து சரிந்தது”என்று குரல் தழுதழுக்கத் கூறினார்.
வாழ்க்கையின் திருப்பங்கள்
வியட்நாமில் போருக்கு அனுப்பப்படவிருந்த கெவின் கரோலுடனான உறவை முறித்துக் கொண்ட பிறகு, டெபி வெபருக்குத் தன் குழந்தையைத் தனியே விட்டுச் செல்வது குறித்துத் தொடர்ந்து கனவுகள் வந்து வாட்டியது. அந்தக் கனவுகளிலிருந்து அவர் விடுபட , தத்தெடுக்க ஆர்வமுள்ள ஒரு குடும்பத்தைப் பற்றி அவரது மருத்துவர் சொன்னபோது அவருக்கு நிம்மதி கிடைத்தது.
மருத்துவர் அவரிடம், ‘எனக்கு நான்கு குழந்தைகளுடன் உள்ள ஒரு குடும்பத்தைத் தெரியும், அந்தத் தாயால் இனிமேல் குழந்தைகளைப் பெற்றெடுக்க முடியாது. உங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தால், அவர்கள் அதைத் தத்தெடுக்க விரும்புவார்கள்’ என்று கூறினார்.
சில காலம் கழித்து, டெபி வெபருக்கு ஒரு பெண் குழந்தையும் பிறந்தது, அந்தக் குழந்தை கெவின் கரோலைப் போலவே இருந்தது என்று அவர் கருதினார். அந்தக் குடும்பத்தைப் பற்றி அதிகம் தெரிந்துகொள்ளாமலேயே , அவர் அக்குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்தார்.
பட மூலாதாரம், Personal collection
விரைவில், அவரது குடும்பம் புதிய வாழ்க்கையைத் தொடங்க வேறு இடத்திற்குச் சென்றது. மறுபுறம், கெவின் கரோல் வியட்நாமில் இருந்தார்.
“போரில் கீழே விழும் விமானிகளை மீட்பது தான் என் வேலை, 1969 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி, நாங்கள் ஒரு விநியோக ஹெலிகாப்டரை மீட்கச் சென்றோம்”என்று கூறுகிறார் கெவின்.
அந்த நடவடிக்கையின் போது, கெவின் கரோலின் கைகள், கால்கள் மற்றும் முதுகில் சில உலோகத் துண்டுகளால் காயம் ஏற்பட்டது.
“நான் அங்கிருந்து வெளியே வர மாட்டேன் என்று நினைத்தேன், கடவுளுடன் நான் வாக்குவாதம் செய்தேன்”, “நான், ‘டெபியை மீண்டும் பார்க்காமல், என் குழந்தையைப் பார்க்காமல், வீட்டிலிருந்து 18,000 மைல் தொலைவில், எங்கோ ஒரு இடத்தில், இங்கு என்னை இறப்பதற்கு அனுமதிக்கப் போகிறாய் என்று என்னால் நம்ப முடியவில்லை,’ என கடவுளிடம் சொன்னேன்” என்று அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார் கெவின்.
மற்றொரு கடற்படை வீரர் அவரைக் காப்பாற்ற வந்தார். அதனைத் தொடர்ந்து, கெவின் கரோல் பிலிப்பின்ஸுக்கும், ஜப்பானுக்கும் மாற்றப்பட்டார், பின்னர் சிகிச்சைக்காக அமெரிக்கா திரும்பினார்.
“அப்போது எனக்கு 18 அறுவை சிகிச்சைகள் நடந்தன. அதன்பிறகு, மேலும் 20 அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஆனால், நான் சக்கர நாற்காலியில் இருந்து வாக்கருக்கு மாறினேன், வாக்கரில் இருந்து ஊன்றுகோலுக்கு மாறினேன், ஊன்றுகோலில் இருந்து கைத்தடிக்கு மாறினேன். ஆனால் நான் ஒருபோதும் மனதளர்ந்ததில்லை”என்று குறிப்பிட்டார் கெவின்.
இதற்கிடையில் கெவின் கரோல், டெபி வெபரைக் கண்டுபிடிக்க முயற்சிகளை மேற்கொண்டுள்ளார் .
ஆனால், குற்ற உணர்ச்சியால் பாதிக்கப்பட்ட டெபி வெபர் மறக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அவர் திருமணம் செய்து கொண்டு மூன்று மகள்களைப் பெற்றெடுத்தார், அதே நேரத்தில் கெவின் கரோல் இறுதியில் மனைவியை இழந்தார் .
பல வருடங்களுக்கு முன்பு தத்துக்கொடுக்கப்பட்ட மகளைப் பற்றி இருவருமே எந்தத் தகவலும் கேள்விப்பட்டதில்லை.
ஒருவரையொருவர் கண்டறிதல்
பட மூலாதாரம், Personal collection
சில காலம் கழித்து , டெபி வெபர் தனது மகள்களிடம் உண்மையைச் சொல்ல முடிவு செய்தார்.
“அது அன்னையர் தினம்,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “நாங்கள் சமையலறையில் இருந்தோம், ‘நான் உங்களிடம் ஒன்று சொல்ல வேண்டும். நான் மிகவும் இளமையாக இருந்தபோது, எனக்கு ஒரு குழந்தை பிறந்தது’என்று நான் சொன்னேன். கெவினும் நானும் எப்படி காதலில் விழுந்தோம் என்பது உட்பட முழு சூழ்நிலையையும் விளக்கினேன்”என்பதை விவரித்தார்.
குழந்தையைக் கண்டுபிடிக்க உதவுவதற்காக ஒரு மகள், அவரது விவரங்களைக் கேட்டார்.
“அவர்களது கடைசிப் பெயர் எனக்குத் தெரியும், அந்தக் குடும்பத்தில் நான்கு பையன்கள் இருந்தார்கள் என்பது தெரியும், அவர்கள் வசித்த பகுதியும் எனக்குத் தெரியும்”என்று கூறுகிறார் டெபி.
அந்தத் தகவல்கள் போதுமானதாக இருந்தன. டெபி வெபரின் மகள் அந்தக் குடும்பத்தைக் கண்டுபிடித்து, அவரது சகோதரர்களில் ஒருவரைத் தொடர்பு கொண்டார். அதன் பிறகு, அவரது மகளான வாலிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது.
பட மூலாதாரம், Personal collection
“நான் காலை எட்டு மணிக்கு அவரை அழைத்தேன், நாம் பேச வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கின்றன, ஆனால் அவர் செய்ததைப் பாராட்டுகிறேன் என்று சொன்னேன். எனக்கு எந்தவிதமான கசப்பான உணர்வுகளும் இல்லை”என்று வால் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.
டெபி வெபருக்கு, அந்தப் பதில் ஒரு உணர்ச்சிப் பெருக்கை அளித்தது.
“வெட்கம் மற்றும் குற்ற உணர்ச்சி போன்ற அந்த உணர்வுகள் அனைத்தும் அப்படியே மறைந்து போயின,” என்று அவர் கூறினார். அன்றிரவே இருவரும் சந்தித்தனர். அந்தச் சந்திப்பின்போது, வாலின் உயிரியல் தந்தை என்ன ஆனார் என்ற கேள்வி எழுந்தது.
ஆன்லைனில் தேடியபோது, காலமான கெவின் கரோலின் மனைவியுடைய அஞ்சலிச் செய்தி கிடைத்தது. அதன்பிறகு, டெபி வெபர் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
“உங்களுக்கு ஏற்பட்ட இழப்பிற்காக வருந்துகிறேன். நமது பள்ளி நாட்கள் பற்றிப் பேச விரும்புகிறேன். நீங்கள் நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்,” என எழுதி, தனது தொலைபேசி எண்ணையும் அதில் இணைத்திருந்தார்.
கெவின் கரோலுக்கு, அந்தக் கடிதம் பேரதிசயமாக இருந்தது. “அந்தக் கடிதத்தைப் பெற்ற தருணத்தை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன். நான் உடனே தொலைபேசியை எடுத்து, இந்த உரையாடல் நமக்குள் நடக்கிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை என்று சொன்னேன்” என்கிறார்.
பட மூலாதாரம், Personal Collection
அடுத்து வேறொரு ஆச்சரியம் காத்திருந்தது.
“நான் உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒன்று இருக்கிறது என்று சொன்னேன்,” என்று டெபி வெபர் நினைவு கூர்ந்தார். “நம் மகளை நான் கண்டுபிடித்துவிட்டேன். நீங்கள் அவளைச் சந்திக்க விரும்புகிறீர்களா?”என்று அவரிடம் கேட்டேன்.
அவர் உறுதியாக ‘ஆம்’ என்று சொன்ன பிறகு, அவர்கள் டெபி வெபரின் வீட்டில் சந்தித்தனர். கெவின் கரோல் வந்தபோது, தன் தாயின் எதிர்வினையைக் கண்டு வால் சிரித்தார். “அவர், ‘ஓ, அவர் மிகவும் அழகாக இருக்கிறாரே!” என்று சொன்னார்”என அந்த நினைவுகளை பிபிசியிடம் பகிர்ந்து கொண்டார்.
வாலும் அவரது தந்தையும் பல மணிநேரம் பேசினார்கள். பின்னர் கெவின் கரோல், தான் அவரது தாயை நேசிப்பதை ஒருபோதும் நிறுத்தவில்லை என்று குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Personal collection
வீட்டிலிருந்து வெளியேறி சேர்ந்து வாழும் அவர்களுடைய திட்டம் தோல்வியடைந்து 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆன பிறகு, அவர்கள் இறுதியாகத் திருமணம் செய்து கொண்டனர்.
இப்போது 70 வயதில், அவர்கள் இறுதியாக ஒருவரையொருவர் கவனிப்பதில் கவனம் செலுத்த முடிகிறது.
“வாழ்க்கையின் இந்தக் கட்டத்தில் நாங்கள் ஒருவரையொருவர் கவனித்துக் கொள்ளவும், ஒருவரையொருவர் நேசிக்கவும் முடிகிறது. வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால், எனக்கு வேறு எதுவும் தேவையில்லை,” என்கிறார் டெபி வெபர்.
இச்செய்தி, பிபிசி உலக சேவையில் அவுட்லுக்கின் ஒரு அத்தியாயத்தை அடிப்படையாகக் கொண்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு