சென்னை: “அரசுப் பள்ளியில் மாணவர்கள் சீருடையுடன் பள்ளியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். மாணவர்களைப் பள்ளி கழிவறைகளைச் சுத்தப்படுத்துவது தொடங்கி இதுபோன்ற கொடூரங்கள் திமுக ஆட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது” என்று தமிழக பாஜக கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து பாஜக மாநில பொதுச் செயலாளர் ஏ.பி.முருகானந்தம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே உள்ள அரசுப் பள்ளியில் மாணவர்கள் சீருடையுடன் பள்ளியில் கட்டிடப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். தன்னை சமூக நீதி அரசு என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறது இந்தப் போலி மாடல் ஸ்டாலின் அரசு என்பதற்கு இது சிறந்த உதாரணம்.
தொடர்ந்து அரசுப் பள்ளி மாணவர்களைப் பள்ளி கழிவறைகளைச் சுத்தப்படுத்துவது தொடங்கி இதுபோன்ற கொடூரங்கள் திமுக ஆட்சியில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. துறையை மேற்பார்வை செய்யவேண்டிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சரோ, உதயநிதி ரசிகர் மன்ற தலைவரைப் போலவே தற்போது வரை செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். மற்ற பணிகளை விட்டுவிட்டு கொஞ்சம் தான் சார்ந்த துறை வேலையையும் அமைச்சர் அன்பில் மகேஸ் பார்க்கவேண்டும்.
தமிழகத்தில் தொடர்ச்சியாக அங்கங்கே பள்ளி கட்டிடங்கள் உடைந்து விழுகின்றன. அதிலும் கடந்த ஜூலை மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே திறக்கப்பட்டு மூன்று மாதத்தில் அரசி பள்ளிக் கட்டிடம் உடைந்து விழுந்து ஐந்து மாணவர்கள் படுகாயமடைந்த சம்பவம் இந்த துறையில் உள்ள லஞ்ச லாவண்யத்தையும், துறை அதிகாரிகளின் மெத்தனத்தையும் தோலுரித்துக் காட்டுகிறது. படிக்க வரும் பச்சிளம் குழந்தைகளை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுத்துபவர்களின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அதில் கூறப்பட்டுள்ளது.