சென்னை: பள்ளி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், கராத்தே பயிற்சியாளர் கெபிராஜுக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டுகள் சிறை தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சென்னை அண்ணாநகரில் கராத்தே, ஜூடோ போன்ற தற்காப்புக் கலை பள்ளி நடத்தி வந்தவர் கெபிராஜ். பயிற்சி பள்ளியில் தனக்கு பாலியல் தொல்லை அளித்ததாக, மாணவி ஒருவர், கெபிராஜ் மீது புகார் அளித்திருந்தார். கடந்த 2021-ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் சென்னை அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீசார், கெபிராஜ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கெபிராஜ், பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, மேலும் சில மாணவிகள் அவர் மீது பாலியல் புகார் அளித்ததை தொடர்ந்து வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கை, விசாரித்த சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பத்மா, கெபிராஜ்க்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், 50 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரியும், தண்டனையை ரத்து செய்யக் கோரியும் கெபிராஜ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கெபிராஜ் தரப்பில், சிறுமிக்கு எந்த பாலியல் தொந்தரவும் அளிக்கப்படவில்லை எனவும், இது பொய் புகார் எனக் கூறி, தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதனை ஏற்க மறுத்த நீதிபதி, தண்டனையை நிறுத்தி வைக்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும், தீர்ப்பை எதிர்த்து கெபிராஜ் தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவுக்கு பதிலளிக்க காவல் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை செப்டம்பர் 18=ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.