பழநி: தைப்பூசத்தை முன்னிட்டு இன்று (பிப்.11) ஆன்மிக நகரான பழநியில் லட்சக்கணக்காண பக்தர்கள் குவிந்து வருகின்றனர். காவடி எடுத்தும், அலகு குத்தியும் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உப கோயிலான பெரியநாயகியம்மன் கோயிலில் தைப்பூசத் திருவிழா பிப்.5-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. விழா தொடங்குவதற்கு முன்கூட்டியே பல்வேறு மாவட்டங்களில் இருந்து விரதம் இருந்து மாலை அணிந்த பக்தர்கள் பாதயாத்திரையாக வரத் தொடங்கினர்.
தைப்பூச விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான திருக்கல்யாணம் நேற்று (பிப்.10) இரவு நடைபெற்றது. இன்று செவ்வாய்கிழமை (பிப்.11) தைப்பூசத்தை முன்னிட்டு பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தைப்பூசத்தை முன்னிட்டு நள்ளிரவு முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்தனர்.
லட்சக்ணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்ததால் கிரிவீதி, சந்நதி வீதிகள் உட்பட பழநி முழுவதும் காவி மற்றும் பச்சை உடை அணிந்து வந்த பக்தர்கள் கூட்டம் காணப்பட்டது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை காவடி எடுத்து கிரிவீதிகளில் ஆடி வந்தனர். பலர் அலகு குத்தி வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பழநியில் குவிந்தனர். மலைக்கோயிலுக்கு செல்ல யானைப்பாதை ஒருவழிபாதையாக மாற்றப்பட்டது. மலையில் இருந்து கீழே இறங்கும் பக்தர்கள் படிப்பாதை வழியாக இறங்க அனுமதிக்கப்பட்டனர். கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த பகுதி பகுதியாக பக்தர்களை மலைக்கு செல்ல போலீஸார் அனுமதித்தனர்.
பாதயாத்திரையாக வந்த பக்தர்கள் கிரிவீதிகளில் மலையை சுற்றி வந்து அடிவாரத்தில் உள்ள பாதவிநாயகர் கோயிலில் வழிபட்டனர். பின்னர் மலைக்கோயிலுக்கு சென்று தண்டாயுதபாணி சுவாமியை பல மணி நேரம் காத்திருந்து தரசினம் செய்தனர்.
விரைவு தரிசன கட்டண சீட்டுகளான ரூ.20 மற்றும் ரூ.200 ரத்து செய்யப்பட்டுள்ளதால் அனைவரும் இலவச தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தனர். சண்முகநதி, இடும்பன் குளத்தில் புனித நீராடும் பக்தர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுக்க ரப்பர் படகில் தீயணைப்பு வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். பக்தர்களின் வசதிக்காக அதிகாலை 2 மணி முதல் முடி காணிக்கை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கூட்ட நெரிசலில் தொலைந்து போகும் குழந்தைகளை அடையாளம் காண, பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு ‘க்யூஆர் கோட்’ அடங்கிய கைப்பட்டை அணிவிக்கப்படுகிறது. இதற்காக, பழநி அடிவாரம், பேருந்து நிலையம் உட்பட 3 இடங்களில் முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
வழிநெடுகிலும் பல இடங்களில் பக்தர்களுக்கு தனியார் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானம் தரமான பொருட்களை கொண்டு தயார் செய்யப்பட்டதா என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
சிறப்பு பேருந்து, ரயில்கள் இயக்கம்.. தைப்பூசத்தை முன்னிட்டு வெளியூர் பக்தர்களுக்காக 100 சிறப்பு பேருந்துகளும், மதுரை – பழநி, பழநி – மதுரைக்கு சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. சண்முக நதியில் இருந்தும், ரயில் நிலையத்துக்கும் 3 இலவச பேருந்துகள் இயக்கப்பட்டன.
தீவிர கண்காணிப்பு: திருட்டு உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க பழநி அடிவாரம், படிப்பாதை, யானைப்பாதை, பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் 400 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 50 இடங்களில் உயர் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அடிவாரம் காவல் நிலையம் மற்றும் நகர் காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை அமைத்து போலீஸார் கண்காணித்து வருகின்றனர். தைப்பூசத்தை முன்னிட்டு பழநி நகர் மற்றும் புறநகர் பகுதியில் 100 காவல் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஐஜி, 2 டிஐஜி, 5 எஸ்பி.க்கள் ஆகியோர் தலைமையில் வெளி மாவட்டங்களில் இருந்து 3,500 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.