ராமநாதபுரம்: “ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளை செப்டம்பர் மாதத்துக்குள் நிறைவேற்ற வேண்டும். இல்லையெனில், ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்புடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுப்போம்” என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் தெரிவித்தார்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் மாநில பொதுக்குழுக் கூட்டம் ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரி வளாகத்தில் இன்று (மே 1) நடைபெற்றது. மாநிலத் தலைவர் கி.தங்கவேலு தலைமை வகித்தார். தீர்மானங்களை முன்மொழிந்து மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் பேசினார். மாநில பொருளாளர் எஸ்.நாராயணன் வரவு செலவு அறிக்கை சமர்பித்தார். தமிழ்நாடு அளவிலான நேரடி நியமன பள்ளி ஆய்வக உதவியாளர் சங்க தலைவர் ம.அர்ஜூன் வாழ்த்தி பேசினார்.
தொடர்ந்து மாநில பொதுச்செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் செய்தியாளர்களிடம் கூறியதாவது: “சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு 9 அறிவிப்புகளை அறிவித்துள்ளார். அவற்றை எங்களது கூட்டமைப்பு வாழ்த்தி வரவேற்கிறது. அதேசமயம் திமுக கடந்த தேர்தல் வாக்குறுதி 309-ல் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்துவதாக அறிவித்தது. அந்த வாக்குறுதியை தமிழக அரசு செப்டம்பர் மாதத்துக்குள் எந்தவித மாற்றம் இல்லாமல் செயல்படுத்த வேண்டும்.
2006-2011 கால கட்டத்தில் தொகுப்பூதியத்தில் பணியாற்றிய பட்டதாரி ஆசிரியர்களின் தொகுப்பூதிய பணிக்காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். முன்னாள் முதல்வர் அண்ணா காலத்தில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட ஊக்க ஊதியத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கை விரைந்து முடித்து, ஆசிரியர்களுக்கான பதவி உயர்வை வழங்க வேண்டும்.
நாடு முழுவதும் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பணிக்கொடை வழங்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு 1.4.2003 முதல் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணிக்கொடை வழங்கவில்லை. எனவே, உடனடியாக தமிழக அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை வழங்க வேண்டும். எங்களது அமைப்பின் சார்பில் தமிழக முதல்வரை மூன்று முறை சந்தித்தோம். அப்போது தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக முதல்வர் கூறினார்.
”கரோனா தாக்கத்தால், நிதி நிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதற்காக குழுவை அமைத்துள்ளோம். அந்தக் குழுவின் அறிக்கைப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என முதல்வர் உறுதியளித்துள்ளார். வரும் செப்டம்பர் மாதத்துக்குள் அமல்படுத்துவோம் என முதல்வர் கூறியுள்ளார். கண்டிப்பாக செப்டம்பருக்குள் இந்த கோரிக்கைகளை உறுதியாக வென்றெடுப்போம். இல்லையேல் ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு அறிவிக்கும் அடுத்த கட்ட தீவிர போராட்டங்களில் பங்கெடுப்போம்,” என தெரிவித்தார். துணைப் பொதுச்செயலாளர் பி.மணிகண்டன் நன்றி கூறினார்.