• Tue. Jan 7th, 2025

24×7 Live News

Apdin News

‘பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்’ – திமுக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை | Marxist Communist Party demands that to fulfill government employees, food service workers wish

Byadmin

Jan 5, 2025


சென்னை: அரசு ஊழியர், சத்துணவு ஊழியர், அங்கன்வாடி ஊழியர், பள்ளி-கல்லூரிகளின் ஆசிரியர்கள் ஆகியோரின் கோரிக்கைகள் மீதான தேர்தல் வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை வைத்துள்ளது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி-யின் 24-வது தமிழ்நாடு மாநில மாநாடு ஜனவரி 3, 5 ஆகிய தேதிகளில் விழுப்புரத்தில் ஆனந்தா திருமண மண்டபத்தில் மத்தியக்குழு உறுப்பினர் பெ. சண்முகம் தலைமையில் நடந்து வருகிறது. இம்மாநாட்டில் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் பிருந்தா காரத், எம்.ஏ. பேபி, ஜி. ராமகிருஷ்ணன், மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன் மற்றும் மத்தியக்குழு, மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் மற்றும் தமிழகம் முழுவதிலிமிருந்து 550க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இன்றைய பிரதிநிதிகள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் விவரம்: அரசு ஊழியர்கள், சத்துணவு ஊழியர்கள் ஆசிரியர்களின் நலன்கள், கோரிக்கைகள் கடந்த கால அதிமுக ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட சூழலில் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ஆட்சி மாற்றம் நிகழும் போது அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்ற உறுதிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் தரப்பட்டது.

மிக முக்கியமானதாக வரையறுக்கப்பட்ட பயன் கொண்ட பழைய பென்ஷன் திட்டம் மீட்கப்படும் என்ற அறிவிப்பு அமைந்தது. மேலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கான நிர்வாக தீர்ப்பாயம் அமைப்பது, ரூ 8000 அடிப்படை ஊதியத்தில் நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம், ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17 பி நடவடிக்கைகளை திரும்பப் பெற்று நிவாரணம் வழங்குவது, சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களை அரசு பணியாளர்களாக பணி அமர்த்தி காலமுறை ஊதியம் மற்றும் குறைந்தபட்ச ஓய்வூதியம் பணிக்கொடை என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் எண் 308 லிருந்து 318 வரை இடம்பெற்று இருந்தன.

01.04.2003 முதல் அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் புதிய ஓய்வூதிய திட்டத்தில் சேர்க்கப்பட்டு எவ்வித வரையறுக்கப்பட்ட ஓய்வூதிய பயனுக்கும் உத்தரவாதம் இல்லாத நிலைமைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர். ஐந்து மாநில அரசுகள் பழைய ஓய்வூதிய திட்டத்திற்கு திரும்புவதாக அறிவித்து அமலாக்கத்தை துவங்கியுள்ளன.

ஆனால் இந்த மாநிலங்கள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் செலுத்திய தொகையை திரும்பத் தராது என்று ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம் மறுத்துள்ளது. ஆனால் தமிழ்நாடு அரசோ ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் வளர்ச்சி ஆணையத்தில் அங்கமாக மாறாத சூழலிலும் பழைய பென்ஷன் திட்டம் மீட்கப்படுவது என்ற கோரிக்கையை ஏறபது என்பதை நோக்கி நகரவே இல்லை. இது அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிருப்தியை, கோபத்தை உருவாக்கியுள்ளது.

தமிழ்நாட்டின் சத்துணவு ஊழியர்களின் நீண்ட கால கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. 2021 தேர்தல் வாக்குறுதியில் தொகுப்பூதியம் ஒழிக்கப்பட்டு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் 40 ஆண்டு காலமாக தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றி வரும் சத்துணவு ஊழியர்களின் இக்கோரிக்கை கூட ஈடேறாத நிலையில் காலைச் சிற்றுண்டியை தனியார் முகமைக்கு வழங்கப்பட்ட முடிவு எதிர் மாறானதாகும்.

தமிழ்நாட்டில் ஒன்றிய முன்னுரிமையோடு இருந்த ஆசிரியர்கள் இடமாற்றல்கள் மாநில அளவிலான முன்னுரிமை முறைமைக்கு மாறுவதற்கான அரசாணை எண் 243/ 21.12.2023 கடுமையாக ஆசிரியர் நலனையும் குறிப்பாக பெண் ஆசிரியர்களை பாதித்துள்ளது. கல்வித்தரத்தையும் பாதிப்பதாக உள்ளது.

23 ஆண்டுகளாக எந்த பதவி உயர்வும் இல்லாத அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி வரும் இடைநிலை ஆசிரியர்கள் அனைவரையும் பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும் என்கிற கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. பல்கலைக்கழக கல்லூரிகளை அரசு கல்லூரிகளாக மாற்ற வேண்டும், எல்லா பல்கலைக்கழகங்களின் சம்பளம் மற்றும் நிர்வாகத்திற்காக நிதியளிப்பு வழங்கப்பட வேண்டும்.

பல்கலைக்கழகங்களிலும், அதேபோல கல்லூரி கல்வி இயக்குனரகம் போன்ற முகமைகளிலும் காலியாக உள்ள முக்கியமான பதவிகள் விரைந்து நிரப்பப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளிலும் தீர்வு காணப்பட வேண்டியுள்ளது. தமிழ்நாட்டில் 64.24 லட்சம் இளைஞர்கள் வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் நிலையில் அரசு ஊழியர் ஆசிரியர் பணிகளில் 5 லட்சம் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

2024 இல் 75,000 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒப்பந்தபணிகள், பகுதி நேர ஊழியம், வெளிமுகமைகளிடம் பணி ஒப்படைப்பு வாயிலாக நிரந்தர பணியிடங்கள் மீதான தாக்குதல்கள் தொடுக்கப்படுகின்றன. உழைப்பு சுரண்டலும் நடத்தப்படுகிறது. வெளிமுகமை மூலமாக மருத்துவத்துறை, நில அளவைத்துறை, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் அரசாணை எண் 10, 34, 115, 152 போன்றவை மூலமாக நியமனங்கள்

மேற்கொள்ளப்படுகிறது.

உண்மையில் அரசாணை எண் 95 ன் படி 8997 சமையல் உதவியாளர்களை ரூ 3000 தொகுப்பூதியத்தில் பணி நியமனம் செய்திட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அஇஅதிமுக ஆட்சியில் பழிவாங்கப்பட்ட சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரைமுறைப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு முழுவதும் 4500 க்கு மேற்பட்ட தலைமையாசிரியர் பணியிடங்களும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்களும் நிரப்பப்பட வேண்டி உள்ளது. இவற்றை காலமுறை ஊதியத்தில் நிரப்புவதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டி உள்ளது. பதவி உயர்வுகளுக்கு தகுதித் தேர்வு என்ற பிரச்சனையில் உச்சநீதிமன்ற வழக்கினை விரைவில் முடிவுக்கு கொண்டு வந்து ஆசிரியர்களின் பதவி உயர்வு பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டி உள்ளது.

பள்ளி நிர்வாக குழு நியமனங்கள் என்ற பெயரால் மேற்கொள்ளப்படும் பகுதிநேர ஆசிரியர் நியமனங்கள் உழைப்புச் சுரண்டலுக்கு வழி வகுப்பதை முடிவுக்கு கொண்டு வந்து நிரந்தர பணி நியமனங்களுக்கு வழி கோல வேண்டும். அரசு கல்லூரிகளில் பணி புரியும் கௌரவ பேராசிரியர்களின் பணி வரைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

கல்வித்துறையை பொருத்தவரையில் தேசிய கல்விக் கொள்கை 2020 ஐ பல்வேறு பெயர்களில் மறைமுகமாக செயல்படுத்துவதை தமிழக அரசு கைவிட வேண்டும். தமிழக அரசால் தமிழகத்திற்கான கல்வி கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதிபதி குழுவின் பரிந்துரை இன்னும் அமலாக்கப்படவில்லை. அதன் அமலாக்கத்தை உறுதி செய்ய வேண்டும்.

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு தொடர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். திராவிட முன்னேற்றக் கழக அரசுக்கு 2021 இல் தந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டிய கடமை உள்ளது.

கடந்த மூன்றரை ஆண்டு காலமாக எதிர்பார்த்து காத்திருக்கும் அரசு ஊழியர் ஆசிரியர்களின் சத்துணவு ஊழியர்களின் சங்கங்களை அழைத்துப் பேசி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டும் என விழுப்புரத்தில் நடைபெறும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில 24வது மாநாடு கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.



By admin