பட மூலாதாரம், Corbis via Getty Images
சில மாதங்களுக்கு முன் கெர்ரி டன்ஸ்டன் மற்றும் அவரது துணைவி, ஒரு புதிய மின்சார காரை வாங்க நினைத்தபோது, டீலரிடம் அவர்கள் கேட்ட கேள்விகளில் ஒன்று, ‘இந்தக் காரின் பேட்டரி எப்படி இருக்கிறது?’.
29,000 மைல்கள் மட்டுமே ஓடிய 2021 நிசான் லீஃப் காரை அவர்கள் வாங்க நினைத்தார்கள். வாகன டீலர், பேட்டரியின் ஆரோக்கியம் 93% இருப்பதாகக் கூறினார்.
அந்த காரை கெர்ரி டன்ஸ்டன் £12,500 விலைக்கு (இந்திய மதிப்பில் 14,75,900 ரூபாய்) பேசி முடித்தார். அவர்களுக்கு ஒரு பெரிய மற்றும் நிறைய இட வசதியுடன் கூடிய ஒரு மின்சார கார் கிடைத்தது.
சற்றே நேர்த்தியான, வால்வோ மின்சார எஸ்யூவி காரையும் வைத்திருக்கும் டன்ஸ்டனுக்கு, இந்த பயன்படுத்தப்பட்ட லீஃப் கார் மீது அவ்வளவு ஈர்ப்பில்லை.
இருப்பினும், கடந்த மூன்று மாதங்களில் லீஃப் மின்சார கார் எதிர்பார்த்தபடி சரியாக செயல்பட்டதாக அவர் கூறுகிறார்.
பேட்டரியின் ஆரோக்கியம் குறித்த கேள்விகள்
பழைய கார்களை வாங்க விரும்புபவர்கள், காரின் வயது மற்றும் மைலேஜ் பற்றி மட்டுமே அதிகம் யோசிக்கின்றனர். ஆனால், அதிகமான மக்கள் மின்சார கார்களுக்கு மாறுவதால், காரின் பேட்டரியின் ஆரோக்கியத்தை ஆராய்வது இன்னும் முக்கியமானதாகிவிட்டது.
அந்த பேட்டரி முந்தைய உரிமையாளரால் எப்படி கையாளப்பட்டது? உதாரணமாக, கடைசி உரிமையாளர் அதை பெரும்பாலும் ‘ஃபாஸ்ட் சார்ஜ்’ முறையில் 100% வரை சார்ஜ் செய்தாரா?
ஏனெனில் காரின் பேட்டரியின் ஆயுளை ‘ஃபாஸ்ட் சார்ஜ்’ முறை குறைக்கலாம்.
பேட்டரி பிரச்னைகள் பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களை வாங்குவதில் சில நுகர்வோர்களுக்கு தயக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் பேட்டரி பகுப்பாய்வு நிறுவனங்கள் பழைய மின்சார வாகனங்களின் பேட்டரியின் ஆரோக்கியத்தை அதிக துல்லியத்துடன் வெளிப்படுத்த முடியும் என்று கூறுகின்றன.
மேலும் சில மின்சார வாகனங்கள், பலர் கணித்ததை விட நீண்ட காலம் நீடிக்கும் என்று தொழில்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
டன்ஸ்டனின் நிசான் லீஃப் காரை எடுத்துக் கொள்ளுங்கள். இது பெரும்பாலான மின்சார வாகனங்களில் காணப்படும் அதிநவீன, திரவ அடிப்படையிலான பேட்டரி குளிரூட்டும் அமைப்பு இல்லாமல் உருவாக்கப்பட்ட ஒரு மின்சார வாகனம்.
நிசான் நிறுவனம் சமீபத்திய லீஃப்களில் இந்த வசதியை கொண்டிருந்தாலும், முந்தைய மாடல்களின் வரம்புகள் ஆண்டுதோறும் கணிசமாகக் குறைந்து வருவதாக அமெரிக்க காப்பீட்டு மற்றும் ஆராய்ச்சி நிறுவனமான நிம்பிள்ஃபின்ஸ் பகுப்பாய்வு செய்த தரவுகள் தெரிவிக்கின்றன.
ஆனால் டன்ஸ்டன் பதற்றமடையவில்லை. “நான் எனது இரண்டு மின்சார வாகனங்களையும் 100% சார்ஜ் செய்கிறேன், அதைப் பற்றி நான் கவலைப்படுவதில்லை,” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Kerry Dunstan
முன்வைக்கப்படும் தீர்வுகள்
பயன்படுத்தப்பட்ட மின்சார வாகன சந்தையில் உள்ளவர்கள் பேட்டரி தொடர்பான பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரியாவைச் சேர்ந்த நிறுவனமான அவிலூ (Aviloo), அதற்கு ஒரு தீர்வு இருப்பதாகக் கூறுகிறது.
“ஒரு பேட்டரியின் ஆரோக்கியத்தை நாங்கள் முற்றிலும் சுயாதீனமாக தீர்மானிக்க முடியும்,” என்று அதன் தலைமை தயாரிப்பு அதிகாரி பேட்ரிக் ஷாபஸ் கூறுகிறார்.
சந்தையில் உள்ள பல பேட்டரி பகுப்பாய்வு வணிக நிறுவனங்களில் அவிலூவும் ஒன்றாகும். பிரிட்டனின் முக்கிய கார் விற்பனை நிலையமான ‘பிரிட்டிஷ் கார் ஆக்ஷன்ஸ்’-க்கு பேட்டரி ஆரோக்கிய சான்றிதழ்களை வழங்கும் அவிலூ நிறுவனம், இரண்டு தீர்வுகளை வழங்குகிறது.
ஒரு பிரீமியம் சோதனை உள்ளது, அங்கு மின்சார கார் உரிமையாளர்கள் தங்கள் காரில் ஒரு சிறிய டேட்டா லாக்கிங் பெட்டியை செருகுவார்கள். இதனால் அவர்கள் காரை சில நாட்களுக்குப் பயன்படுத்தும் போது பேட்டரி செயல்திறனைக் கண்காணிக்க முடியும், அதாவது 100% சார்ஜில் இருந்து 10% வரை.
அல்லது, அவர்கள் ஒரு விரைவான ‘ஃபிளாஷ் சோதனை’யைத் தேர்வுசெய்யலாம். இது காரின் பேட்டரி மேலாண்மை மென்பொருளிலிருந்து தரவை எடுப்பதற்கு வேறு பெட்டியைப் பயன்படுத்துகிறது. பின்னர் அதை ஒரு கணினி மாதிரியின் உதவியுடன் பகுப்பாய்வு செய்கிறது. “இதை நாம் இரண்டு நிமிடங்களுக்குள் செய்ய முடியும்,” என்கிறார் ஷாபஸ்.
பிரீமியம் சோதனையானது பேட்டரி சார்ஜ் குறைவதை உன்னிப்பாகக் கவனித்து, மின்னோட்டம் அல்லது மின்னழுத்தத்தில் ஏற்ற இறக்கங்களை எடுத்துக்கொள்கிறது. மேலும், பேட்டரியில் உள்ள தனிப்பட்ட செல்களின் நிலை குறித்த விரிவான தகவல்களை வெளிப்படுத்த முடியும் என்று அவிலூ நிறுவனம் கூறுகிறது.
80% க்கும் குறைவான ஆரோக்கியம் கொண்ட பேட்டரிகள் அவ்வளவு பயனுள்ளவை அல்ல என்ற பொதுவான கருத்தை அவிலூவின் தலைமை நிர்வாகி மார்கஸ் பெர்கர் ஏற்கவில்லை
“80% க்கும் குறைவான ஆரோக்கியம் கொண்ட ஒரு மின்சார கார் இன்னும் ஒரு சிறந்த காராக இருக்கலாம். அதற்கு (பொருத்தமான) விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும்.”
நியூசிலாந்தைச் சேர்ந்த லூசி ஹாக்ராஃப்ட், தனது கணவருடன் சேர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நிசான் லீஃப் மின்சார காரை வாங்கினார்.
டீலர்ஷிப்பிலிருந்து 95% அல்லது அதற்கு மேற்பட்ட பேட்டரி ஆரோக்கிய முடிவைப் பெற்றதை அவர் நினைவு கூர்ந்தார். ஆனால் ஒரு வருடம் கழித்து ஒரு சுயாதீன மெக்கானிக் அவர்களுக்காக மீண்டும் பேட்டரி ஆரோக்கியத்தை சரிபார்த்தார்.
“அது மிகவும் குறைந்திருந்தது,” என்று அவர் நினைவு கூர்ந்தார்.
இருப்பினும், இந்த கார் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்டாலும் சுமார் 160 கிமீ (100 மைல்கள்) தூரம் செல்லும். லூசி ஹாக்ராஃப்ட் பெரும்பாலும் 10 கிமீ வரையிலான குறுகிய பயணங்களுக்கு இந்தக் காரை பயன்படுத்துகிறார். “சுமார் 400 கிமீ வரை வரம்புகள் கொண்ட மின்சார கார்கள் என் நண்பர்களிடம் உள்ளது. அப்படி இருப்பது சிறந்ததாக இருக்கும்.” என்கிறார் ஹாக்ராஃப்ட்.
செல்டென்ஹாமில் உள்ள ‘கிளீவ்லி எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸ்’ நிறுவனத்தின் விற்பனை இயக்குநரான டேவிட் ஸ்மித்துக்கு, பயன்படுத்தப்பட்ட மின்சார வாகனங்களின் பேட்டரிகளை விரிவாக பகுப்பாய்வு செய்ய முடிவது ஒரு லாபகரமான விஷயமாகும்.
பெரும்பாலான வாடிக்கையாளர்கள் இந்தத் தகவலைக் கேட்கிறார்கள் என்று அவர் கூறுகிறார். அவரது நிறுவனம் மற்றொரு பேட்டரி பகுப்பாய்வு நிறுவனமான கிளியர்வாட்டின் பேட்டரி ஆரோக்கிய சோதனை முடிவுகளை பயன்படுத்துகிறது.
“அவர்கள் சுதந்திரமாக இயங்குபவர்கள். நாங்கள் அவர்களது அறிக்கைகளில் தலையிட முடியாது,” என்று அவர் கூறுகிறார். “வாடிக்கையாளர்களுக்கு அறிக்கையைப் பார்த்து திருப்தி ஏற்பட்டால், அது பெரும்பாலும் வணிகத்திற்கு உதவுகிறது.”
கிளீவ்லி எலக்ட்ரிக் வெஹிக்கிள்ஸின் நிர்வாக இயக்குநரான மேட் கிளீவ்லி, “ஒரு பேட்டரிக்குள் உள்ள செல்கள் அல்லது பிரச்னையை சரிசெய்வது என்பது பெரும்பாலும் சாத்தியமாகும். இது ஒரு புதிய பேட்டரியை நிறுவுவதை விட மிகவும் மலிவானது” என்று கூறுகிறார்.
பட மூலாதாரம், Lucy Crawford
உங்கள் சொந்த மின்சார வாகனத்தின் பேட்டரியை சிறப்பாகப் பராமரிக்க, அதன் பேட்டரியை எவ்வாறு சார்ஜ் செய்ய வேண்டும் என்பது குறித்து, ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சிமோனா ஓனோரி பேசினார்.
“அடிக்கடி ‘ஃபாஸ்ட் சார்ஜ்’ செய்வதற்கும் அதை முற்றிலுமாகத் தவிர்ப்பதற்கும் இடையே ஒரு சமநிலை இருக்கலாம். இருப்பினும், எனக்குத் தெரிந்தவரை, அது இன்னும் முழுமையாக ஆய்வு செய்யப்படாத ஒன்று” என்று அவர் கூறுகிறார்.
சில நுகர்வோரின் எச்சரிக்கை இருந்தபோதிலும், சமீபத்திய ஆண்டுகளில் பேட்டரி தொழில்நுட்பம் குறிப்பிடத்தக்க அளவில் மேம்பட்டுள்ளது என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான சிஆர்யூ-வின் பேட்டரி துறைத் தலைவர் மேக்ஸ் ரீட் கூறுகிறார்.
“பழைய பேட்டரிகள் 500 முதல் 1,000 [சார்ஜிங்] சுழற்சிகள் வரை நீடிக்கும்,” என்று அவர் விளக்குகிறார். “இப்போது வரும் புதிய மின்சார கார் பேட்டரிகள் சிலவற்றில் 10,000 சுழற்சிகள் வரை உள்ளன.”
முன்னர் குறிப்பிட்ட மின்சார வாகனங்களுக்கு என வடிவமைக்கப்பட்ட பேட்டரிகள், இப்போதும் பயனுள்ளதாக இருக்கும் என்று டோர்செட்டில் உள்ள ‘செகண்ட் லைஃப் மின்சார வாகன பேட்டரிஸ்’-ஐ சேர்ந்த பால் சாண்டி கூறுகிறார்.
உதாரணமாக, பழைய மின்சார வாகன பேட்டரிகளைப் பயன்படுத்தி மின்சாரத்தை சேமித்து வைக்கும் நிறுவனங்கள் சில அவரது வாடிக்கையாளர்களில் அடங்குவர்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு