2
தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரும் , ஆந்திர பிரதேச மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘ஹர ஹர வீரமல்லு ‘ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘கேட்கணும் குருவே ‘ எனும் முதல் பாடலும் , பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர்கள் கிரிஷ் மற்றும் ஜோதி கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஹர ஹர வீரமல்லு ‘எனும் திரைப்படத்தில் பவன் கல்யாண் , நிதி அகர்வால், பாபி தியோல், சுனில் , நாசர் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள்.
மனோஜ் பரஹம்சா, வி. எஸ். ஞானசேகர் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஓஸ்கார் விருதினை வென்ற எம். எம் . கீரவாணி இசையமைக்கிறார்.
இந்தத் திரைப்படத்தை மெகா சூர்யா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. தயாகர் ராவ் தயாரிக்கிறார். இந்தப் படத்தை தயாரிப்பாளர் ஏ. எம். ரத்தினம் வழங்குகிறார்.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் முதல் பாடலும், பாடலுக்கான காணொளி மற்றும் லிரிக்கல் ஆகியவை வெளியிடப்பட்டிருக்கிறது.
இந்தப் பாடலை பாடலாசிரியர் பா. விஜய் எழுத , பின்னணி பாடகரும் , நாயகனுமான பவன் கல்யாண் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் பவன் கல்யாண் ரசிகர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில் இருப்பதால் பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது.
இந்திய மதிப்பில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் தயாராகி வரும் இந்த திரைப்படம் எதிர்வரும் மார்ச் மாதம் 28 ஆம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகைகளில் தமிழ் , தெலுங்கு , இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.