படக்குறிப்பு, ஜின்னா பழங்குடித் தலைவர்களுடன் நடத்திய சந்திப்பு.கட்டுரை தகவல்
பாகிஸ்தான் எனும் புதிய நாடு உருவாவதற்கு முன்பே அதற்கு ஆதரவு அறிகுறிகள் இருந்ததால், வடமேற்கு எல்லை (ஃப்ரண்டியர்) மாகாணம் ஏப்ரல் 17, 1948 அன்று பாகிஸ்தானுடன் இணைவது உறுதியாகிவிட்டது.
மறுநாள் வெளியான அமெரிக்க செய்தித்தாள் நியூயார்க் டைம்ஸ் செய்திப்படி, “பெஷாவரில் உள்ள 200 சர்தார்கள்(பழங்குடியினத் தலைவர்கள்) கவர்னர் ஜெனரல் முகமது அலி ஜின்னாவிடம் தங்களைப் பாகிஸ்தானுடன் இணைத்துக் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர்.”
இந்தத் தலைவர்கள் பிரதிநிதித்துவப்படுத்திய மக்கள் தொகை 25 லட்சம் ஆகும். இவர்களது பகுதி தெற்கு வஸிரிஸ்தானில் இருந்து சித்ரால் வரை சுமார் 1,600 கிலோமீட்டர் பரவி இருந்தது.
நியூயார்க் டைம்ஸ் கூற்றுப்படி, தங்கள் மக்களைப் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர அனுமதிக்க வேண்டும் என்று கோரினர். மேலும் பாகிஸ்தானின் உதவி இருந்தாலும் இல்லாவிட்டாலும், காஷ்மீரிலிருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்றுவோம் என்று ஆளுநர் ஜெனரல் ஜின்னாவுக்கு உறுதியளித்தார்.
“கவர்னர் ஜெனரல் ஜின்னா அவர்களின் வேண்டுகோளைக் கருத்தில் கொள்வதாக உறுதியளித்து முஸ்லிம் ஒற்றுமையின் அவசியத்தை வலியுறுத்தினார்,” என்றும் அந்த செய்தித்தாள் எழுதியது.
பட மூலாதாரம், NAM.AC.UK
படக்குறிப்பு, 1920 இல் எடுக்கப்பட்ட சித்ரால் சாரணர்களின் படம்.
முஸ்லிம் லீக் பக்கம் சாய்வு
ஹியூ பீட்டி தனது ‘இம்பீரியல் ஃப்ரண்டியர் – ட்ரைப் அண்ட் ஸ்டேட் இன் வஸிரிஸ்தான்’ என்ற புத்தகத்தில், 1946-இல் பிரிட்டிஷ் இந்தியாவின் வடமேற்கு எல்லை மாகாணத்தின் சட்டமன்றத் தேர்தலில் ஃப்ரண்டியர் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதாக எழுதுகிறார். ஆனால், பிரிவினை ஒரு உண்மையாகப்போகிறது என்பது தெளிவாகத் தெரிந்தவுடன், நிலைமைகள் மாறத் தொடங்கின.
“இந்துக்கள் பெரும்பான்மையாக இருந்த இந்திய காங்கிரஸ் கட்சியுடனும், அதன் தலைமையுடனும் இக்கட்சி இணைந்திருந்ததால், பஷ்தூன்கள், ஃப்ரண்டியர் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிச் சென்றனர். பெரும்பாலான மக்கள் முஸ்லிம் லீக்குக்கு ஆதரவளித்தனர். குறிப்பாக, பழங்குடியினரின் சக்திவாய்ந்த பிரிவினர், மாலிக் எனப்படும் தலைவர்கள் தங்கள் பலத்தை முஸ்லிம் லீக் பக்கம் சேர்க்கத் தொடங்கினர்.”
பிரிட்டிஷ் இந்தியாவின் இடைக்கால அரசாங்கத்தில் வெளியுறவு அமைச்சராக ஆன பிறகு, ஜவஹர்லால் நேரு, அக்டோபர் 1946-இல் பழங்குடியினப் பகுதிகளுக்குப் பயணம் மேற்கொண்டார்.
நேருவின் வாகனத்தொடரணி மீது பல இடங்களில் கல் வீசப்பட்டது. அப்போது ஃப்ரண்டியர் மாகாணத்தின் கவர்னராக இருந்த சர் ஓலாஃப் கரோ, பலத்த பாதுகாப்புக்கு மத்தியிலும் நேரு கொல்லப்படலாம் என்று அஞ்சினார்.
சையத் அப்துல் குத்தூஸ் தனது ‘பாகிஸ்தானின் வடமேற்கு எல்லை’ என்ற புத்தகத்தில், லார்ட் வேவலுக்கு கரோ எழுதிய கடிதத்தை மேற்கோள் காட்டுகிறார்.
“இந்தத் துயரச் சம்பவத்தில் இருந்து நாம் தப்பித்தது அதிர்ஷ்டவசமானது. பழங்குடியினர் விவகாரங்களுக்கு நேருவோ அல்லது வேறு எந்த இந்து அதிகாரியோ பொறுப்பாளராக இருந்தால், குழப்பம் அதிகரிக்கும் என்று நான் மீண்டும் எச்சரிக்கிறேன். இது பழங்குடியினர் கிளர்ச்சிக்கு வழிவகுக்கும்,” என கரோ எழுதினார்.
சர் ஓலாஃப் கரோ தனது ‘பதான்கள்’ என்ற புத்தகத்தில், “நேரு தனது ஆதரவாளர்களை ஒருங்கிணைக்க பெஷாவருக்கு வந்தார். இது ஒரு துணிச்சலான நடவடிக்கையாகும், ஆனால் அதன் பின்னணியில் இருந்த திட்டம் தவறானது. இது தோல்வியடைய வேண்டியிருந்தது, மேலும் இது ஒருங்கிணைந்த இந்தியாவை கனவு கண்ட அனைவருக்கும் மிகவும் மோசமான விஷயமாக மாறியது.”
“சமவெளிப் பகுதிகளில் மட்டுமின்றி, மலைப் பகுதிகளிலும் இருந்த பழங்குடியினர் நேருவை ஏற்கத் தயாராக இல்லை,” என்று கரோ மேலும் எழுதுகிறார்.
பட மூலாதாரம், BLOGSPOT.COM
படக்குறிப்பு, பழங்குடியினப் பகுதிகளுக்கு ஜின்னா மேற்கொண்ட பயணங்களைப் பற்றிய செய்தி.
ஜின்னாவின் பயணங்கள்
முகமது அலி ஜின்னாவும் 1945 மற்றும் 1948-ஆம் ஆண்டுகளில் இந்தப் பகுதிகளுக்குப் பயணம் செய்தார்.
ஷேர் ஆலம் ஷின்வாரி, ஆகஸ்ட் 13, 2017 அன்று எழுதிய ‘பழங்குடி மக்கள் இன்றும் ஜின்னாவின் பாகிஸ்தானைத் தேடுகிறார்கள்’ என்ற கட்டுரையில், “90 வயதுக்கு மேற்பட்ட பழங்குடி பெரியவர்கள் இன்றும் பாகிஸ்தானின் நிறுவனர் முகமது அலி ஜின்னா வரலாற்றுச் சிறப்புமிக்க கைபர் கணவாய்க்கு அக்டோபர் 1945 மற்றும் ஏப்ரல் 1948-இல் மேற்கொண்ட இரண்டு முக்கியப் பயணங்களை நன்கு நினைவில் வைத்திருக்கிறார்கள்,” என்று எழுதினார்.
90 வயதான மாலிக் ராஜ் முகமது கான் என்கிற ராஜ்ஜன், “தேசத்தின் தலைவர் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்கப்பட்டார். அவர் வண்டியிலிருந்து இறங்கியபோது, மக்கள் ‘காயித்-ஏ-ஆசம் ஜிந்தாபாத்!’ என்று முழக்கமிட்டனர்,” என்று லண்டி கோட்டலுக்கு ஜின்னா மேற்கொண்ட் முதல் பயணத்தைப் பற்றி நினைவு கூர்ந்தார்.
இஸ்லாமின் கொடிகள் உயர்த்தப்பட்டன, ஜின்னாவின் பாதை தெளிவாக்கப்பட்டது என்று கரோ எழுதுகிறார்.
ஹியூ பீட்டியின் கூற்றுப்படி, எல்லையில் பதற்றம் அதிகரித்து, 1947-இல் முஸ்லிம் லீக் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியது.
“பஷ்தூன் தலைவர்கள் சிலர், குறிப்பாக அப்துல் கஃபார் கான், பஷ்தூன்களுக்கு ஒரு தனி சுதந்திர நாடான ‘பஷ்தூனிஸ்தான்’-க்கு வாக்களிக்கும் உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கோரினர். ஆனால் ஜூலை 1947-இல் இந்தப் மாகாணத்தின் எதிர்காலம் குறித்து நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பில் இரண்டு தேர்வுகள் மட்டுமே வழங்கப்பட்டன: பாகிஸ்தான் அல்லது இந்தியா. இதன் விளைவாக, 99.02% வாக்குகள் பாகிஸ்தானுக்கு ஆதரவாக விழுந்தன.”
பொதுவாக்கெடுப்பு நடந்த பின்னர் அந்த மாகாணம் முழு உற்சாகத்துடன் பாகிஸ்தானின் ஒரு பகுதியாக மாறியது என்று கரோ எழுதுகிறார், “அதே ஆண்டு நவம்பரில் துராந்த் கோடு வரை இருந்த அனைத்துப் பழங்குடியினரும் பாகிஸ்தானுடன் இணைந்தனர். கூடுதலாக, நான்கு எல்லைப்புற சமஸ்தானங்களான – திர், சுவாத், சித்ரால் மற்றும் அம்பு – ஆகியவை பாகிஸ்தானுடன் இணைந்தன.”
முகமது அலி ஜின்னா ஏப்ரல் 17, 1948 அன்று பெஷாவரில் நடந்த பழங்குடியினர் கூட்டத்தில் உரையாற்றினார்.
பட மூலாதாரம், BLOGSPOT.COM
படக்குறிப்பு, இந்தியப் பிரிவினையின் போது பழங்குடியினப் பகுதிகளின் எதிர்காலம் ஒரு முக்கியப் பிரச்னையாக இருந்தது.
பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து மாறுபட்ட நோக்கு
ஆபித் மஸ்ஹரின் ஆய்வின்படி, ஃப்ரண்டியர் மாகாணத்தின் நிர்வாகத்திற்கான ஜின்னாவின் பார்வை பிரிட்டிஷ் பார்வையிலிருந்து வேறுபட்டது.
மஸ்ஹரின் கூற்றுப்படி, “ஜின்னாவின் நோக்கு இரண்டு விஷயங்களை அடிப்படையாகக் கொண்டது – பழங்குடி மக்களின் சுயாட்சி, கலாசாரம், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளை ஏற்றுக்கொள்வது மற்றும் பொருளாதார வளர்ச்சியின் மூலம் அவர்களைச் சுயாதீனமான மற்றும் மரியாதைக்குரிய குடிமக்களாக ஆக்குவது.”
பிரிட்டிஷ் இந்தியாவில் இந்தப் பகுதி பஞ்சாபின் ஒரு பகுதியாக இருந்தது, மேலும் அதன் நிர்வாகத்தை ஒரு தலைமை ஆணையர் கவனித்து வந்தார்.
1901 ஆம் ஆண்டில், இது ஒரு தனி மாகாணமாக உருவாக்கப்பட்டது மற்றும் நிரந்தரமாகக் குடியேறிய பகுதிகள் அல்லது மாவட்டங்கள் மற்றும் பழங்குடியினப் பகுதிகள் என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது.
‘வரிசையாக நின்று வரவேற்றனர்’
பட மூலாதாரம், COLLECTION.NAM.AC.UK
படக்குறிப்பு, ராஸ்மாக்கில் கொண்டாடப்பட்ட பாகிஸ்தானின் முதல் சுதந்திர தினம் (கோப்புப் படம்).
இந்தப் பகுதியின் கட்டுப்பாட்டைப் பேணுவதற்காக பிரிட்டிஷ் நிர்வாகம் ராணுவத்தை நிலைநிறுத்தியது, ஆனால் அதே சமயம் சிறிதளவு சுயாட்சியும் வழங்கப்பட்டது.
“இந்தச் சிறப்புத் தகுதி பல ஒப்பந்தங்களில் பதிவு செய்யப்பட்டது. இந்த ஒப்பந்தங்களின் கீழ், ‘மாலிக்குகள்’ (பழங்குடியினப் பெரியவர்கள்) வர்த்தகம் மற்றும் சுயாட்சிக்காக எல்லைப் பாதைகளைத் திறந்து வைப்பதாக உறுதியளித்தனர், அதற்கு ஈடாக அவர்களுக்கு சலுகைகள் மற்றும் மானியங்கள் வழங்கப்பட்டன, அதை அவர்கள் தங்கள் மக்களிடையே பகிர்ந்து கொண்டனர்.”
ஜூன் 3, 1947-இன் இந்தியச் சுதந்திரச் சட்டம் இந்தச் சிறப்பு ஒப்பந்தங்களை முடிவுக்குக் கொண்டு வந்தது.
1949-இல் வெளியான ‘டான்’ நாளிதழின் செய்தியின்படி, பாத்திமா ஜின்னா 15 நாள் சுற்றுப்பயணத்துக்குப் பிறகு, பாராச்சினாரில் இருந்து பெஷாவருக்குத் திரும்பும் போது, பழங்குடியினரின் பாகிஸ்தான் மீதான ‘அளவற்ற அன்பு மற்றும் உணர்ச்சியால்’ தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகக் கூறினார்.
குர்ரம் ஏஜென்சியில் கிடைத்த மகத்தான வரவேற்பை அவரால் மறக்க முடியாது என்றும், அங்கு குழந்தைகள் உட்பட மக்கள் வீதிகளின் ஓரத்தில் வரிசையாக நின்று அவரை வரவேற்றனர் என்றும் அவர் கூறினார்.
பட மூலாதாரம், Life photo (Olaf Caroe’s book, ‘The Pathans’)
படக்குறிப்பு, பாகிஸ்தானின் எல்லைப் பகுதிகளில் 1946 வரை காங்கிரஸின் செல்வாக்கு கணிசமாக இருந்தது. ஆனால் அடுத்த ஒரு வருடத்தில் நிலைமை வேகமாக மாறியது.
முகமது அலி பாபாக்கேல் தனது ஒரு கட்டுரையில், பாகிஸ்தானுடன் இணைந்த பிறகு எல்லைப்புற மாகாணத்தின் நிர்வாகத்தில் பல அரசியலமைப்பு மாற்றங்கள் செய்யப்பட்டன என்று கூறுகிறார்.
அவரது கூற்றுப்படி, 1956 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு எல்லைப்புற மாகாணத்திற்குச் சிறப்புத் தகுதியை வழங்கியது.
1973 ஆம் ஆண்டின் அரசியலமைப்பு 37,000 ‘மாலிக்குகளுக்கு’ வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. பொதுவான பழங்குடி மக்கள் தேர்தல் நடைமுறையிலிருந்து வெளியே வைக்கப்பட்டனர். 1997-இல் அனைத்து வயதுவந்த மக்களுக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
2010 ஆம் ஆண்டில், பதினெட்டாவது திருத்தத்தின் மூலம் வடமேற்கு ஃப்ரண்டியர் மாகாணத்தின் பெயர் கைபர் பக்துன்க்வா என்று மாற்றப்பட்டது.