சென்னை: பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் படுகாயமடைந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தமிழக மருத்துவர் பரமேஸ்வரனை, தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி திரு ஏ.கே.எஸ்.விஜயன் சந்தித்து நலம் விசாரித்தார்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணியான மருத்துவர் பரமேஸ்வரன் படுகாயம் அடைந்தார்.
இதையடுத்து, தமிழக அரசின் உதவியுடன் ஏர் ஆம்புலன்ஸ் மூலல் அவர் டெல்லி அழைத்து வரப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுரையின் பேரில் தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன், எய்ம்ஸ் மருத்துவமனையில் பரமேஸ்வரனை சந்தித்து நலம் விசாரித்தார். அவருக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார்.
அப்போது, சிகிச்சை உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் தமிழக அரசு ஏற்கும் என முதல்வர் உறுதி அளித்துள்ளதாக பரமேஸ்வரனிடம் தெரிவித்தார். பரமேஸ்வரனின் தந்தை ஆறுமுகம், தாயார் சித்ரா, மனைவி நயன்தாரா, தமிழக அரசின் உள்ளுறை ஆணையாளர் ஆஷிஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர் என்று தமிழக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.