பட மூலாதாரம், Getty Images
இன்றைய (30/04/2025) நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் வெளிவந்துள்ள முக்கியச் செய்திகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள முப்படைகளுக்கு பிரதமர் நரேந்திர மோதி அனுமதி அளித்துள்ளதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியின்படி, ‘தாக்குதல் இலக்குகள், நேரம் மற்றும் தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே சுதந்திரமாக முடிவுகளை எடுக்கலாம்’ என நாட்டின் உயர் பாதுகாப்பு அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ஆம் தேதி சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 26 பேர் கொல்லப்பட்டனர். “இந்தத் தாக்குதலின் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகத் தெரிய வந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது” என்று அந்தச் செய்தி கூறுகிறது.
இந்தச் சூழலில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படைகளின் தலைமைத் தளபதி அனில் சௌகான், ராணுவத் தளபதி உபேந்திர திவிவேதி, கடற்படைத் தளபதி தினேஷ் கே.திரிபாதி, விமானப் படை தளபதி அமர் பிரீத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோர் டெல்லியில் நேற்று (ஏப்ரல் 29) பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்தனர்.
பிரதமர் இல்லத்தில் சுமார் 90 நிமிடங்கள் முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, பஹல்காம் தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாகவும், அதற்குத் தக்க பதிலடி கொடுப்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோதி பேசும்போது, “தீவிரவாதத்தை வேரறுக்க வேண்டும். பஹல்காம் தாக்குதலில் தொடர்புடையவர்களுக்குத் தக்க பதிலடி கொடுக்க வேண்டும். எவ்வாறு தாக்குதல் நடத்துவது, எந்த இடங்களில் தாக்குதல் நடத்த வேண்டும், எப்போது தாக்குதல் நடத்த வேண்டும் என்பதை பாதுகாப்புப் படைகளே முடிவு செய்யலாம். இந்த விவகாரத்தில் முப்படைகளும் சுதந்திரமாகச் செயல்படலாம்” என்று தெரிவித்ததாக அந்தச் செய்தியில் கூறப்பட்டுள்ளது.
இரு மகன்களை தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொன்றதாக தாய் கைது
சேலம் மாவட்டத்தில் தனது 2 மகன்களை தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளதாக தினத்தந்தி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்தச் செய்தியில், “சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையம் சின்னத்தம்பி வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 40). கொத்தனார் பணி செய்து வரும் இவருக்கும் இவரது மனைவி இளவரசிக்கும் (34) விக்னேஸ்வரன் (6), சதீஷ்குமார் (3) என 2 மகன்கள் இருந்தனர்.
நேற்று முன்தினம் இரவு 8 மணியளவில் அவர்களது வீட்டின் முன்பு தண்ணீர் நிரப்பியிருந்த 10 அடி ஆழ தரைமட்டத் தண்ணீர்த் தொட்டியில் தனது 2 மகன்களும் விழுந்துவிட்டதாக இளவரசி கூச்சலிட்டார். அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து, தண்ணீர்த் தொட்டியில் மூழ்கிக் கிடந்த 2 குழந்தைகளையும் மீட்டு சிகிச்சைக்காக வாழப்பாடி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்,” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அங்கு அந்த 2 சிறுவர்களையும் பரிசோதித்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த தகவலின்பேரில் வாழப்பாடி போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று இளவரசியிடம் விசாரித்தனர். ஆனால் அவரின் பதில்கள் முன்னுக்குப் பின் முரணாக இருந்ததால் போலீசார் சந்தேகமடைந்து, தீவிரமாக விசாரித்தனர்.
இதில் அவர் தனது 2 குழந்தைகளையும் தண்ணீர்த் தொட்டியில் மூழ்கடித்துக் கொலை செய்துவிட்டுத் தானும் தற்கொலைக்கு முயன்றதாகத் தெரிவித்துள்ளார்,” என்று அந்தச் செய்தி கூறுகிறது.
தினத்தந்தி வெளியிட்டுள்ள செய்தியின்படி, இளவரசி போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில், “விஜயகுமாரும், நானும் காதலித்து திருமணம் செய்துகொண்டோம். எனக்கும், அதே பகுதியைச் சேர்ந்த திருமணமான வேறொரு இளைஞருக்கும் தொடர்பு இருப்பதாக எனது கணவர் விஜயகுமார் என்னிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் இதே விவகாரத்தில் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும், அந்தத் தொடர்பைக் கைவிடாவிட்டால் கொலை செய்து விடுவேன் என கணவர் மிரட்டினார்.
எனவே எனக்குப் பிறகு என் குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக 2 மகன்களையும் கொன்றுவிட்டு, நானும் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தேன். எனது 2 குழந்தைகளை முதலில் 10 அடி ஆழமுள்ள தண்ணீர்த் தொட்டியில் தூக்கி வீசிவிட்டு, நானும் தொட்டியில் குதித்தேன். அப்போது, தண்ணீரில் மூழ்கி 2 குழந்தைகளும் உயிரிழந்தனர். நீருக்குள் தாக்குப் பிடிக்காமல் நான் கத்தியதால் என்னை உறவினர்கள், அக்கம்பக்கத்தினர் காப்பாற்றினர்” என்று கூறியுள்ளார்.
முல்லைப் பெரியாறு அணை குறித்த கேரள அரசின் பிரமாணப் பத்திரம் – தமிழக விவசாயிகள் கண்டனம்
பட மூலாதாரம், Getty Images
‘முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்ட வேண்டும்’ என்று உச்சநீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்த கேரள அரசுக்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக இந்து தமிழ் திசை நாளிதழ் செய்தி கூறுகிறது.
அந்தச் செய்தியின்படி, முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றம் இரண்டு முறை தீர்ப்பு வழங்கி உள்ளபோதும், இந்த அணைக்குப் பதிலாக புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு நேற்று (ஏப்ரல் 29) பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்தது. “இதில், முல்லைப் பெரியாறு அணை பலவீனமாகவும், மக்களின் உயிருக்கு அச்சுறுத்தலாகவும் உள்ளது, புதிய அணை கட்டுவதே தீர்வாக அமையும். புதிய அணைக்கான மொத்த செலவையும் கேரள அரசே ஏற்கும். அணை கட்டுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து முடிவெடுக்க வேண்டும்,” என்று அதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதற்கு தமிழக விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இது குறித்து பெரியாறு வைகை பாசன விவசாய சங்க அலுவலகத்தில் ஒருங்கிணைப்பாளர் பென்னிகுவிக்பாலசிங்கம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கேரள அரசு தேவையின்றி இப்போது உச்சநீதிமன்றத்தில், ஒரு பிரமாணப் பத்திரத்தைத் தாக்கல் செய்துள்ளது. இரண்டு மாநிலங்களுக்கு இடையே தண்ணீர் பிரச்னையால் சண்டை வரக்கூடாது என்பதில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். இரண்டு அரசுகள் அமர்ந்து பேச வேண்டிய விஷயத்திற்காக எதற்கெடுத்தாலும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று கொண்டிருந்தால் 2014இல் நீதியரசர்கள் ஐந்து பேர் கொண்ட குழு அணை பலமாக உள்ளது என்று கொடுத்த தீர்ப்பு என்னாவது?” என்று கேள்வி எழுப்பியதாக செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “அணை பலமாக உள்ளதாகத் தீர்ப்பளித்த அதே நீதிமன்றத்தில் பலவீனமாக உள்ளது என்று பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது உச்சநீதிமன்றத்தை ஏமாற்றுவதற்குச் சமம். எனவே உச்சநீதிமன்றம் இந்த வழக்கை 356வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி கேரள அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும்.
முல்லைப் பெரியாறு அணைக்கு 999 ஆண்டுகள் ஒப்பந்தம் இருக்கிறது. கேரளா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரம், தமிழக அரசை கேலி செய்யும் வகையில் உள்ளது. பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ததைக் கடுமையாகக் கண்டிக்கிறோம்” என்றும் அவர் தெரிவித்திருப்பதாக அந்தச் செய்தி கூறுகிறது.
‘பாதுகாப்புக் காரணங்களுக்காக பெகாசஸ் பயன்பாடு தவறில்லை’
பட மூலாதாரம், Getty Images
‘பாதுகாப்புக் காரணங்களுக்காக ஒரு நாடு உளவு செயலியைப் பயன்படுத்துவதில் எந்தவிதத் தவறும் இல்லை. அது யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி’ என்று ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதாக தினமணி நாளிதழின் செய்தி கூறுகிறது.
இஸ்ரேலை சேர்ந்த என்எஸ்ஓ நிறுவனத்தின் ‘பெகாசஸ் ஸ்பைவேர்’ என்ற உளவு செயலி மூலம், உலகின் பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகையாளர்களின் கைபேசிகளை உளவு பார்த்து, வாட்ஸ்ஆப் தகவல்கள் உள்ளிட்ட கைபேசி தரவுகளைச் சேகரித்ததாகப் புகார்கள் எழுந்தன. அதுபோல், இந்தியாவும் இந்த உளவு செயலியைப் பயன்படுத்தி உளவு பார்த்ததாக சர்ச்சை எழுந்தது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை கடந்த 2021ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், அனுமதியற்ற வகையில் பெகாசஸ் உளவு செயலி பயன்பாடு தொடர்பாக ஆய்வு செய்ய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆர்.வி.ரவீந்திரன் தலைமையில் மூன்று நிபுணர்களை உள்ளடக்கிய தொழில்நுட்பக் குழுவை அமைத்தது.
இந்தக் குழு தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது. இதை நீதிமன்றம் ஆய்வு செய்து வருகிறது. இந்த வழக்கு, நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்ததாக தினமணி செய்தி கூறுகிறது.
அந்தச் செய்தியின்படி, மனுதாரர் ஒருவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரான தினேஷ் திவேதி, “மத்திய அரசிடம் பெகாசஸ் உளவு செயலி இருந்ததா? அதை மத்திய அரசு பயன்படுத்தியதா என்பதுதான் கேள்வி. அதை மத்திய அரசு இப்போதும் தொடர்ந்து பயன்படுத்தினால், அதைத் தடுக்க எதுவுமில்லை” என்றார்.
இதைக் கேட்ட நீதிபதிகள், “ஒரு நாடு தீவிரவாதிகளுக்கு எதிராக உளவு செயலியைப் பயன்படுத்துவதில் என்ன தவறு? இதில் எந்தத் தவறும் இல்லை. யாருக்கு எதிராகப் பயன்படுத்தப்படுகிறது என்பதுதான் கேள்வி. தேசத்தின் பாதுகாப்பை சமரசம் செய்ய முடியாது. அதே நேரம், தனிநபர்களின் தனியுரிமை அரசமைப்புச் சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்படும்” என்றதாகவும் அந்தச் செய்தி கூறுகிறது.
பிறகு நீதிபதிகள், வழக்கு விசாரணையை வரும் ஜூலை 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை அவசியம்’
பட மூலாதாரம், Getty Images
“இலங்கையில் சிசு மற்றும் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணம் அதிகரித்த போக்கைக் காண்பிக்கிறது. தொடர்ச்சியாக இவ்வாறான அதிகரிப்பிற்கு இடமளிக்க முடியாது. எனவே ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மரணங்கள் தொடர்பில் பிரேத பரிசோதனை அவசியம்” என்று சுற்றுநிரூபம் வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்திருப்பதாக வீரகேசரி இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
செவ்வாய்க்கிழமை (29) இடம்பெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதைத் தெரிவித்த அவர், “இலங்கையில் 2022ஆம் ஆண்டில் 1008 சிசு மரணங்களும், 3300 ஐந்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களின் மரணங்களும் பதிவாகியுள்ளன.
இது முன்னர் இலங்கையில் காணப்பட்டதைவிட மோசமான நிலை. எனவே இது தொடர்பில் சுகாதார அமைச்சினால் விசேட அவதானம் செலுத்தப்பட்டது. உலகில் இது குறித்து விசேட வழிகாட்டிகள் காணப்படுகின்றன. அதற்கமைய மரணத்துக்கான காரணி கண்டறியப்படாத 5 வயதுக்கு உட்பட்ட சிறார்களின் மரணங்களுக்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது சுகாதார அமைச்சின் பரிந்துரை” என்று கூறியதாக வீரகேசரி செய்தி கூறுகிறது.
அதோடு, மரணத்துக்கான காரணம் கண்டறியப்படாமல் அந்த மரணம் கைவிடப்பட்டால் சிசு மற்றும் சிறார் மரண வீதம் அதிகரிக்கும். பதிவாகும் ஒவ்வொரு மரணத்திற்குமான காரணிகள் இனங்காணப்பட்டு இருப்பதாலேயே சிசு மரண வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியதாக அச்செய்தி குறிப்பிடுகிறது.
அதேநேரம், “மரணத்துக்கான காரணம் தெரிந்தால் அது அத்தியாவசியமற்றது. ஆனால் காரணம் தெரியவில்லை எனில் பிரேத பரிசோதனை அவசியம். ஏனைய சிறுவர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளை இதன் மூலம் தவிர்க்க முடியும் என்று உலகம் எதிர்பார்க்கின்றது” என்று நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளதாக அந்தச் செய்தி கூறுகிறது.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு