பட மூலாதாரம், ANI
இடம்: பைசரன், பஹல்காம்
நாள்: செவ்வாய், ஏப்ரல் 22
தாக்குதல் நேரம்: பிற்பகல் 2:15 மணி
காஷ்மீர் பள்ளத்தாக்கின் பஹல்காமில் 2025 ஏப்ரல் 22 அன்று ஒரு தீவிரவாதத் தாக்குதல் நடந்தது.
இந்த தாக்குதல் பஹல்காம் சந்தையிலிருந்து சுமார் ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பைசரனில் நடந்தது.
இந்த தாக்குதலில் 25 சுற்றுலாப் பயணிகள் மற்றும் ஒரு உள்ளூர் இளைஞர் உட்பட 26 பேர் கொல்லப்பட்டனர்.
கடந்த மூன்று தசாப்தங்களில் ஜம்மு காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பெரிய தாக்குதல் இதுவாக உள்ளது.
பைசரனில் உள்ள அந்த இடத்தை அடைந்த முதல் உள்ளூர்வாசியான பஹல்காமில் வசிக்கும் குதிரை சவாரி சங்கத் தலைவர் அப்துல் வாஹித் வானியிடம் பிபிசி பேசியது.
காவல்துறை அதிகாரிகளிடம் இருந்து தனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாக கூறுகிறார் வானி.
பட மூலாதாரம், ANI
“நான் அப்போது குன்ஷிபாலில் இருந்தேன். காவல்துறையிடமிருந்து முதல் அழைப்பு எனக்கு 2:35 மணிக்கு வந்தது. பைசரனில் ஏதோ நடந்திருப்பதாக போலீசார் என்னிடம் சொன்னார்கள்.
நீங்கள் அங்கே சென்று பாருங்கள் என்றார்கள். நான் எனது சகோதரர் சஜ்ஜத்தை என்னுடன் அழைத்துக்கொண்டு பைசரனை நோக்கி ஓட ஆரம்பித்தேன். நான் மூன்றே கால் மணி அளவில் அங்கு சென்றடைந்தேன்.
அந்த நேரத்தில் என்னைத் தவிர வேறு யாரும் அங்கே இல்லை. எல்லா இடங்களிலும் இரத்த வெள்ளத்தில் மக்கள் இருப்பதைக் கண்டேன். காவல்துறையினர் எங்களைத் தேடி வந்தனர்.” என்று அவர் கூறுகிறார்.
இருப்பினும், ஒரு மணி நேரத்திற்குப் பிறகு காவல்துறையினர் பைசரன் இடத்தை அடைந்ததாக ஒரு மூத்த காவல்துறை அதிகாரி என்னிடம் கூறினார்.
குறைந்தது ஒரு மணி நேரத்திற்குப் பிறகுதான் காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்ததாக மற்றொரு தகவலும் எனக்கு உறுதிப்படுத்தியது.
காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த பிறகு, ராணுவம் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்களும் அங்கு வந்ததாகவும் அவர் கூறினார்.
இந்த சம்பவம் குறித்து பல காவல்துறை அதிகாரிகள் மற்றும் உள்ளூர் மக்களிடம் பேசினோம். எங்களுடன் பேசிய அனைவருமே தங்களது அடையாளம் வெளிப்படுத்தப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பேரில் எங்களுடன் பேசினர்.
அமர்நாத் யாத்திரை செல்லும் பாதை
பட மூலாதாரம், Getty Images
ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் பஹல்காம் சந்தை வழியாக அமர்நாத் குகையை அடைகிறார்கள். பயணத்தின் அடிவார முகாம் (Base Camp) பஹல்காமின் நுன்வானில் உள்ளது.
இந்த முகாமிலிருந்து ஒவ்வொரு நாளும், பயணிகள் குழுக்களாக இணைந்து அமர்நாத்துக்கு புறப்படுவார்கள்.
அமர்நாத் யாத்திரை நாட்களில் போது, பஹல்காமில் இருந்து குகை வரை கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன.
பைசரன் பள்ளத்தாக்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகளுக்காகத் திறந்திருக்கும்.
2024 ஆம் ஆண்டு அமர்நாத் யாத்திரையின் போது மட்டுமே பைசரன் பூங்கா சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்பட்டதாக உள்ளூர் நபர் ஒருவர் என்னிடம் கூறினார்.
மேலும் 2015 ஆம் ஆண்டு வரை, அமர்நாத் யாத்திரையின் போது பைசரனில் பாதுகாப்புப் படையினர் நிறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.
மக்கள் யாத்திரை செல்லும் காலம் தவிர, ஆண்டு முழுவதும் பாதுகாப்புப் படையினர் இங்கு நிறுத்தப்படவில்லை.
மேலும், 2015 க்குப் பிறகு, பைசரனில் பாதுகாப்புப் படையினரின் நிலைநிறுத்தப்படுவதும் கைவிடப்பட்டது.
பூங்காவில் சிசிடிவி கேமராக்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு
பட மூலாதாரம், Getty Images
பைசரனில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பஹல்காம் உள்ளூர்வாசிகள் பலரிடம் பிபிசி பேசியது.
இந்த தாக்குதல் மிகப்பெரிய பாதுகாப்பு குறைபாட்டின் விளைவு என்று அவர்கள் கூறினார்.
இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தரும் பூங்காவில் ஒரு சிசிடிவி கேமரா கூட பொருத்தப்படவில்லை என்கின்றனர் அப்பகுதியைச் சேர்ந்த மக்கள்.
நாள் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வரும் இடத்தில் ஒரு பாதுகாப்புப் பணியாளர் கூட நிறுத்தப்படவில்லை என்று மற்றொரு உள்ளூர்வாசி என்னிடம் பகிர்ந்து கொண்டார்.
பைசரனில் சிசிடிவி கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்பதை காவல்துறை அதிகாரி ஒருவரும் உறுதிப்படுத்தினார்.
மற்றொரு மூத்த பாதுகாப்பு அதிகாரி என்னிடம் கூறுகையில், அன்றைய தினம் பைசரன் நோக்கிய பயணத்திலோ அல்லது பைசரன் பூங்காவைச் சுற்றியோ அல்லது பூங்காவிற்குள் பாதுகாப்புப் பணியாளர்கள் யாரும் இல்லை.
ஒரு மூத்த சிஆர்பிஎப் அதிகாரி என்னிடம், சிஆர்பிஎப் படையினரை எங்காவது நிறுத்துவதற்கு முன், காவல்துறையிடமோ அல்லது ராணுவத்திடமோ அனுமதி பெற வேண்டும் என்று கூறினார்.
சுற்றுலா வழிகாட்டிகள் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீர் சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், தாக்குதல் நடந்த அன்று, அவர்கள் மூன்று சுற்றுலா வழிகாட்டிகளை (TAGs) அந்தப் பகுதியில் நிறுத்தியிருந்தனர். அவர்கள் பைசரன் பூங்காவிற்கு வெளியே நிறுத்தப்பட்டனர்.
சுற்றுலாப் பயணிகளுக்கு வழி காட்ட வேண்டும். அல்லது யாராவது சுற்றுலா பயணிகளை ஏமாற்ற முயற்சி செய்பவர்களைக் கண்காணிப்பது தான் சுற்றுலா வழிகாட்டிகளின் வேலை என்று அவர் கூறினார்.
இதற்கும் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. மேலும், தன்னிடம் எந்த வகையான ஆயுதங்களும் இல்லை என்றும் அவர் கூறினார்.
இந்த வழிகாட்டிகள் காவல் துறையில் சிறப்பு காவல் அதிகாரிகளாக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
அவருடைய சம்பளம் பன்னிரண்டாயிரம் ரூபாய். பஹல்காமில் இதுபோன்ற சுற்றுலா வழிகாட்டிகள் 30 பேர் உள்ளனர்.
இந்த சுற்றுலா வழிகாட்டிகள் 2015 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டதையும் பிபிசி கண்டறிந்துள்ளது. இது மட்டுமல்லாமல், இன்றுவரை அவர்களுக்கு பாதுகாப்பு தொடர்பான எந்த பயிற்சியும் வழங்கப்படவில்லை.
இருப்பினும், பைசரன் பூங்காவிற்குச் செல்லும் பாதைகளில் ராணுவம் அவ்வப்போது ரோந்து செல்வதாக மற்றொரு உள்ளூர்வாசி எங்களிடம் கூறினார்.
பஹல்காமில் எத்தனை பாதுகாப்புப் படையினர் உள்ளனர்?
பட மூலாதாரம், Getty Images
பஹல்காமில் எப்போதும் ஒரு சிஆர்பிஎப் கம்பெனி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. இது தவிர, பஹல்காமில் ராணுவ வீரர்களும் நிறுத்தப்பட்டுள்ளனர். இருப்பினும், அங்குள்ள ராணுவ வீரர்களின் அளவு மிகப் பெரியதல்ல.
இந்த ராணுவப் பிரிவு பஹல்காம் சந்தையிலிருந்து குறைந்தது ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
அதாவது, சம்பவம் நடந்த இடத்திலிருந்து குறைந்தது பன்னிரண்டு கிலோமீட்டர் தொலைவில் அந்தப் படை இருந்துள்ளது.
மறுபுறம், சம்பவம் நடந்த இடத்திலிருந்து ஆறு கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஹல்காம் சந்தையில் சிஆர்பிஎஃப் நிறுவனம் நிறுத்தப்பட்டது.
பஹல்காமில் ஒரு காவல் நிலையமும் உள்ளது. காவல் நிலையத்தைத் தவிர, அங்கு ஒரு சிறப்புப் பணிக்குழுவும் உள்ளது. மொத்தத்தில் குறைந்தது நாற்பது காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்.
பஹல்காமைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கூறுகையில், சில வருடங்களுக்கு முன்பு வரை, நான் விறகு சேகரிக்க பைசரன் வழியாக காட்டிற்குச் செல்வேன். இந்தப் பகுதியில் பாதுகாப்புப் பணியாளர்களை நான் பார்த்ததில்லை என்றார்.
பஹல்காம் பல வருடங்களாக அமைதியாக இருப்பதாக ஒரு காவல் துறை அதிகாரி என்னிடம் கூறினார்.
அதனால் தான் இது போன்ற சம்பவம் நடக்கக்கூடும் என்று காவல்துறையினருக்கோ அல்லது பாதுகாப்புப் படையினருக்கோ தெரிந்திருக்கவில்லை .
பஹல்காமில் எந்தவிதமான தீவிரவாத சம்பவமும் நடக்காது என்று பாதுகாப்புப் படையினர் அதீத நம்பிக்கையுடன் இருந்ததாகவும் அவர் கூறினார்.
தாக்குதலுக்கு முன்பு பைசரனில் 1,092 சுற்றுலாப் பயணிகள் இருந்ததாக ஒரு நபர் தெரிவித்தார்.
தாக்குதல் நடந்த நேரத்தில் சுமார் 250 முதல் 300 சுற்றுலாப் பயணிகள் அங்கு இருந்தனர்.
தாக்குதலுக்கு முன்பு, பைசரனுக்கு தினமும் சுமார் 2,500 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்ததாகவும் அவர் கூறினார்.
பஹல்காம் சந்தையில் இருந்து பாறை , மலைகள் மற்றும் அடர்ந்த காடுகள் வழியாக பைசரன் செல்லும் பாதை நீள்கிறது. அங்கு செல்லும் சுற்றுலாப் பயணிகள் குதிரையில் பயணித்தோ, கால்நடையாகவோ அங்கு செல்கிறார்கள்.
எவ்வளவு பெரிய தாக்குதல் நடந்துள்ளது?
பட மூலாதாரம், Getty Images
பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது நடந்துள்ள தாக்குதல் கடந்த மூன்று தசாப்தங்களில் நடந்த மிகப்பெரிய தாக்குதலாக உள்ளது.
காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது இதுபோன்ற ஒரு தாக்குதல் நடக்கும் என்று யாரும் நினைத்துப் பார்த்ததில்லை.
2019ஆம் ஆண்டு, நரேந்திர மோதி அரசு ஜம்மு காஷ்மீரின் 370வது பிரிவை ரத்து செய்தது. அப்போது, தீவிரவாதத்தை முடிவுக்குக் கொண்டு வரும் வழியில் இந்தச் சட்டப்பிரிவு ஒரு முக்கியமான தடையாக இருப்பதாகக் கூறப்பட்டது.
ஆனால் இந்தப் பிரிவு நீக்கப்பட்ட பிறகும், ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத சம்பவங்கள் தொடர்கின்றன.
இது மட்டுமல்லாமல், கடந்த இருபது ஆண்டுகளாக அமைதி நிலவிய ஜம்முவின் பகுதிகளுக்கும் தீவிரவாத சம்பவங்களின் வீச்சு பரவத் தொடங்கியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.