பஹல்காமில் நடந்த தீவிரவாத தாக்குதலுக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரின் பல பகுதிகளில் உள்ள வீடுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து, காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் இடித்து வருகின்றனர்.
ஏப்ரல் 22 அன்று, பஹல்காமின் பைசரன் பள்ளத்தாக்கில் நடந்த தீவிரவாத தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்துக்குப் பிறகு, ஜம்மு காஷ்மீரில் இந்த நடவடிக்கை பெரிய அளவில் நடைபெற்று வருகிறது.
இதுவரை குறைந்தது 10 வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன.
இடிக்கப்பட்ட வீடுகளைச் சேர்ந்த இரண்டு குடும்பங்களுடன் பிபிசி ஹிந்தி பேசியது.
இந்தக் குடும்பங்களில் ஆதில் உசேன் தோக்கரின் குடும்பமும் அடங்கும்.
பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு அனந்த்நாக் காவல்துறையினரால் வெளியிடப்பட்ட மூன்று தீவிரவாதிகளின் ஓவியங்களில் ஆதில் உசேன் தோக்கரின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், வீட்டை இடிக்கும் நடவடிக்கை குறித்து காவல்துறையினரோ அல்லது பாதுகாப்புப் படையினரோ எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடவில்லை.
விசாரணைக்காக பலரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர், ஆனால் இதுபோன்ற நடவடிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
ஆதில் தோகரின் குடும்பத்தினர் கூறியது என்ன?
ஏப்ரல் 25 ஆம் தேதி இரவு ராணுவமும் காவல்துறையும் தங்கள் வீட்டை அடைந்ததாக ஆதில் தோக்கரின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
“ராணுவத்தினரும் காவல்துறையினரும் இரவு 12:30 மணி வரை இங்கு இருந்தனர். நான் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு, எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும், நாங்கள் என்ன தவறு செய்தோம் என்றும் கேட்டேன். ஆனால் அவர்கள் என்னை வெளியேறச் சொல்லிவிட்டு, வேறு வீட்டிற்கு அனுப்பினர்” என்று ஆதில் தோகரின் தாயார் ஷாஜாதா பானோ கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “இரவு 12.30 மணிக்கு ஒரு பெரிய குண்டுவெடிப்பு ஏற்பட்டது. வீட்டைச் சுற்றி இருந்த அனைவரும் 100 மீட்டர் தொலைவில் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. அங்கிருந்து அனைத்து மக்களும் வெளியேற்றப்பட்டனர். சிலர் கடுகு வயல்களுக்குச் சென்றனர், சிலர் வேறு வீடுகளில் தஞ்சம் புகுந்தனர்” என்றார்.
“அப்போது எங்கள் வீட்டில் யாரும் இல்லை. எனது இரண்டு மகன்களையும், கணவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். எங்களுக்கு எந்த ஆதரவும் இல்லை” என்றும் ஷாஜாதா பானோ கூறினார்.
மேலும், 2018 முதல் ஆதிலை காணவில்லை என்கிறார் ஷாஜதா பானோ.
ஜாகிர் அகமதுவின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது
குல்காம் மாவட்டத்தின் மட்லஹாமா கிராமத்தில் உள்ள ஜாகிர் அகமதுவின் வீடும் இடிக்கப்பட்டுள்ளது.
ஜாகிர் 2023 ஆம் ஆண்டு வீட்டிலிருந்து காணாமல் போனதாகவும், அதன் பின்னர் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
ஜாகிரின் தந்தை குலாம் மொஹியுதீன் கூறுகையில், அவர் காவல்துறையில் புகார் அளித்ததாகவும், அதன் பிறகு காவல்துறையும் ராணுவமும் தனது மகன் ஒரு தீவிரவாத அமைப்பில் சேர்ந்துள்ளதாகத் தெரிவித்ததாகவும் கூறுகிறார்.
“குண்டுவெடிப்பில் எங்கள் வீடு இடிந்து விழுந்தபோது, இரவு 2:30 மணி. குண்டுவெடிப்பு நடந்த அதே நேரத்தில் நாங்கள் மசூதியில் தங்க வைக்கப்பட்டிருந்தோம்” என்கிறார் குலாம் மொஹியுதீன்.
“இதுவரை ஜாகீர் அகமது உயிருடன் இருக்கிறாரா அல்லது இறந்துவிட்டாரா என்பது எங்களுக்குத் தெரியாது. அவர் எங்களுடன் எந்த தொடர்பும் வைத்திருக்கவில்லை. அவர் எங்களை ஒருபோதும் வந்து சந்திக்கவில்லை என்பது ராணுவத்திற்கும் , கிராம மக்களுக்கும் தெரியும்” என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய குலாம் , “எங்களுடைய பொருட்கள் அனைத்தும் வீட்டுக்குள் புதைந்து போயிருந்தன. எங்களால் எதையும் வெளியே எடுத்துச் செல்ல முடியவில்லை. எங்களுக்கு ஒரு சிறிய மகள் இருக்கிறாள், அவளை ஒரு ஃபெரான் போர்த்தி மூடினோம். இன்று நாங்கள் அணிந்திருக்கும் ஆடைகளை மட்டுமே எங்களால் எடுத்துக்கொள்ள முடிந்தது. அன்று இரவு எங்கள் உயிரை மட்டுமே காப்பாற்ற முடிந்தது” என்கிறார்.
‘நான் எனது சகோதரனை பல வருடங்களாக பார்க்கவில்லை’
தனது சகோதரனை பல வருடங்களாகப் பார்க்கவில்லை என்று இதேபோன்ற கூற்றைத்தான் ஜாகிரின் சகோதரி ருகையாவும் கூறுகிறார்.
பிபிசியிடம் பேசிய அவர், “எங்களைப் பொறுத்தவரை அவர் வீட்டை விட்டு வெளியேறிய தருணமே இறந்துவிட்டார். இப்போது அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்பது எங்களுக்குத் தெரியாது” என்றார்.
“நாங்கள் எங்கள் கண்களால் எதையும் பார்த்ததில்லை. இன்று எங்கள் குடும்பம் அதிகமாக சித்திரவதை செய்யப்பட்டுள்ளது. எனது இரண்டு சகோதரர்களும் காவலில் உள்ளனர். எனது மாமாவின் ஒரே மகனும் சிறையில் உள்ளார்” என்று ருக்கையா கூறுகிறார்.
“ஜாகிருக்கு எங்களது குடும்பத்தினரின் ஆதரவு இல்லை. அவர் எங்கிருந்தாலும், அவரைப் பிடித்து கொல்ல வேண்டும் என்று நான் கூறுகிறேன். நாங்கள் கூப்பிய கைகளுடன் நீதி கோருகிறோம். எங்களுக்கு வேறு எதுவும் வேண்டாம்” என்று அவர் கூறினார்.
ராணுவம், காவல்துறை அல்லது ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட் கவர்னர் அலுவலகம் ஆகியவற்றால் இந்த நடவடிக்கைகளைப் பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்த நடவடிக்கை குறித்து எழுப்பப்படும் கேள்விகள்
சிலர் இந்த நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்பத் தொடங்கியுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் சட்ட நிபுணரான வழக்கறிஞர் ஹபில் இக்பால், இதுபோன்ற நடவடிக்கை உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவுகளை முழுமையாக மீறுகின்றன என்று கூறுகிறார்.
“இது உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய தீர்ப்பை அவமதிக்கும் செயல். உண்மையில், வீடுகளை இடிக்கும் வழக்குகள் குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவாகக் கருத்துத் தெரிவித்துள்ளது” என்று அவர் நம்புகிறார்.
“அறிவிப்பு வழங்கப்பட்டாலும் இல்லாவிட்டாலும், பட்டப்பகலில் வீடுகள் இடிக்கப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றம் இதனை கூட்டு தண்டனை என்று கூறியுள்ளது. இதுபோன்ற செயலை எந்த சட்டத்தின் கீழும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இது சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது என்றும் நீதிமன்றம் தெளிவாக தெரிவித்துள்ளது” என்கிறார் ஹபில் இக்பால்.
தொடர்ந்து பேசிய அவர், “இது கூட்டு தண்டனை என்று உச்ச நீதிமன்றம் மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. குற்றவியல் சட்ட அமைப்பில், ஒருவர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டால், அவரது முழு குடும்பம் அல்லது வீட்டின் மீது நடவடிக்கை எடுப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது” என்றார்.
“அரசியலமைப்பிற்கு எதிரான இவை அனைத்தும், உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு எதிரானது மற்றும் சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது.
குற்றவியல் சட்டம், அரசியலமைப்பு, சர்வதேச தரநிலைகள் அல்லது சர்வதேச நாகரிக விதிகள் என உலகில் உள்ள எந்த சட்டத்தின் கீழும் இத்தகைய நடவடிக்கை அனுமதிக்கப்படவில்லை.”
மெஹபூபா முஃப்தி மற்றும் உமர் அப்துல்லா கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வரும் பிடிபி தலைவருமான மெஹபூபா முஃப்தி, சமூக ஊடக தளமான எக்ஸில் இந்த நடவடிக்கைகள் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளார்.
“பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்திய அரசாங்கம் விழிப்புடன் இருக்க வேண்டும், பயங்கரவாதிகளுக்கும் அப்பாவி பொதுமக்களுக்கும் இடையில் வேறுபாட்டைக் காட்ட வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களை அரசாங்கம் தனிமைப்படுத்தக்கூடாது” என்று மெஹபூபா முஃப்தி குறிப்பிட்டுள்ளார்.
“ஆயிரக்கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், தீவிரவாதிகளின் வீடுகளுடன், சாதாரண காஷ்மீர் மக்களின் வீடுகளும் இடிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
அப்பாவி மக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்துமாறு அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது” என்று மெஹபூபா முப்தி பதிவிட்டுள்ளார்.
பொது மக்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தால், அது தீவிரவாதிகளின் நோக்கங்களை வலுப்படுத்தும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
அப்பதிவில், “பஹல்காம் தீவிரரவாத தாக்குதலுக்குப் பிறகு, பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு தீர்க்கமான போராட்டம் அவசியம்.
காஷ்மீர் மக்கள் தீவிரவாதத்திற்கும் அப்பாவி மக்களைக் கொல்வதற்கும் எதிராக வெளிப்படையாகக் குரல் எழுப்பியுள்ளனர், இதை அவர்கள் தாங்களாகவே செய்துள்ளனர்.
இப்போது மக்களின் இந்த ஆதரவை வலுப்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, அவர்களை தனிமைப்படுத்தும் எதையும் செய்யக்கூடாது.”
குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அவர்கள் மீது கருணை காட்டக்கூடாது, ஆனால் அப்பாவி மக்கள் இதற்கு பலியாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.