
-
- எழுதியவர், சிராஜ்
- பதவி, செய்தியாளர், பிபிசி தமிழ்
-
வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்
பஹ்ரைனிலிருந்து கடந்த மார்ச் 18 மற்றும் மார்ச் 21ஆம் தேதி இயக்கப்பட்ட இரு சிறப்பு விமானங்கள் மூலம் 384 தமிழர்கள் சென்னை வந்து சேர்ந்துள்ளனர்.
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக, பஹ்ரைனின் வான்வெளி மூடப்பட்டு, விமானச் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்னும் ஆயிரக்கணக்கான தமிழர்கள் தமிழ்நாடு திரும்ப காத்திருக்கின்றனர்.
பிப்ரவரி 28ஆம் தேதி இரான் மீதான அமெரிக்கா, இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதிலிருந்து வளைகுடா நாடுகள் மீது இரான் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதில் மிக அதிகமான பாதிப்புகளை எதிர்கொண்ட நாடுகளில் ஒன்றாக பஹ்ரைன் உள்ளது.
காரணம், பஹ்ரைனில்தான் வளைகுடா மற்றும் சுற்றியுள்ள கடல் பகுதிகளில் நடவடிக்கைகளை மேற்பார்வையிடும் அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தலைமையகம் உள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து மார்ச் 27ஆம் தேதி வரை, 362 டிரோன்களையும், 154 ஏவுகணைகளையும் இடைமறித்து அழித்துள்ளதாக பஹ்ரைன் அரசு கூறுகிறது.
இந்திய தூதரக தரவுகளின் படி, பஹ்ரைனில் சுமார் 3,50,000 இந்தியர்கள் வசிக்கிறார்கள், அதில் சுமார் 50,000 பேர் தமிழர்கள்.
“பஹ்ரைனில் உள்ள தமிழர்கள் பலர் எப்படியாவது சொந்த ஊருக்கு செல்ல வேண்டுமென விரும்புகிறார்கள்” என்று கூறும் செந்தில், தனது மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் பஹ்ரைனை விட்டு வெளியேற முடியாத சூழலில் உள்ளார்.
‘எல்லாமே முடிந்துவிட்டதாக நினைத்தோம்’
பட மூலாதாரம், Getty Images
“இன்னும் அந்தத் தருணங்களை நினைத்தால் மனம் பதறுகிறது. எங்கள் வீடு அமெரிக்க கடற்படைத் தளத்தில் இருந்து 500-600 மீட்டர் தொலைவில் தான் உள்ளது. பிப்ரவரி 28 காலை ஒரு வெடிப்பு நிகழ்ந்தபோது, அதை வீட்டின் பால்கனியில் இருந்து பார்த்து, அப்படியே உறைந்து விட்டேன்” என்கிறார் சென்னையைச் சேர்ந்த மாலதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது).
மார்ச் 18, பஹ்ரைனிலிருந்து தமிழ்நாடு வந்து சேர்ந்த 192 தமிழர்களில் மாலதி, அவரது கணவர், இரு குழந்தைகள் மற்றும் அவரது அப்பா, அம்மா ஆகியோரும் அடங்குவர்.
“சைரன் ஒலிகளுக்கு மத்தியில், எனது ஐந்தரை மாத பெண் குழந்தையைக் தூக்கிக்கொண்டு, வயதான என் அப்பா, அம்மாவையும் அழைத்துக்கொண்டு குடும்பத்துடன் 15-20 நிமிடங்களில் வீட்டை விட்டு வெளியேறினோம்.” என்று விவரிக்கிறார் அவர்.
வீட்டை விட்டு வெளியேறி ஒரு விடுதியில் தங்கியிருந்தபோது, அதற்கு அருகில் இருந்த கட்டடம் மீதும் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறுகிறார் மாலதி.
“எங்கள் அறையின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறியதும், எங்கள் கட்டடம் தான் தாக்கப்பட்டது, எல்லாமே முடிந்துவிட்டதாக நினைத்தோம். அதன் பின்னர் தான் சுதாரித்துக்கொண்டு, அங்கிருந்து கிளம்பி அரசின் காப்பகத்திற்கு சென்றோம்.” என்கிறார்.
“பஹ்ரைன் அரசு காப்பகத்தில் அனைத்து வசதிகளும் எங்களுக்கு கிடைத்தது. மறுபுறம் தாக்குதல்கள் நிற்பது போல தெரியவில்லை. எங்களது வீட்டிற்கும் செல்ல முடியவில்லை. பஹ்ரைனின் வான்வெளி மூடப்பட்டுள்ளதாக தகவல் வந்ததும், நாங்கள் அனைவரும் தமிழ்நாடு திரும்ப பஹ்ரைன் தமிழ் சங்கமான அன்னை தமிழ் மன்றத்தை அணுகினோம்” என்கிறார் மாலதி.
தகவல் பரிமாற்றங்கள் தொடர்பான கட்டுப்பாடுகள்
பட மூலாதாரம், Getty Images
“போர் தொடங்கிய முதல் நாளிலேயே பஹ்ரைனில் பாதிப்புகள் தென்படத் தொடங்கின. பிப்ரவரி 26ஆம் தேதியே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக எங்களது அலுவலகத்தை மூடிவிட்டார்கள்” என்கிறார் பஹ்ரைனில் 19 வருடங்களாக வசித்து வந்த கடலூரைச் சேர்ந்த அருண் ராகுல்.
அருண், பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது பிரிவின் தலைமையகத்தில் திட்டப் பொறியாளராக பணிபுரிந்து வருகிறார்.
“பிப்ரவரி 26 முதல் என்னை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு என் அலுவலகம் அறிவுறுத்தியிருந்தது. பிப்ரவரி 28ஆம் தேதி ஒரு பெரிய வெடிப்பு சத்தத்திற்கு பிறகு சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின, நாங்கள் தங்கியிருந்தது அமெரிக்க கடற்படை தளம் உள்ள ஜுஃபைர் எனும் பகுதியில் என்பதால் அதுவரை காணாத காட்சிகளைக் கண்டேன்” என்று விவரிக்கிறார் அருண்.
உடனடியாக தனது வீட்டிலிருந்து வெளியேறி அருகில் உள்ள ஒரு அரசு காப்பகத்தில் தஞ்சம் அடைந்ததாகக் கூறும் அருண், “பஹ்ரைன் அரசு சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தாலும் கூட தொடர் சைரன் சத்தங்கள், வெடிப்பு சத்தங்கள் என அங்கிருந்த மக்கள் அனைவரும் பெரும் பதற்றத்தில் இருந்தனர். குறிப்பாக முதியோர், பெண்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள் பலர் இருந்தனர். அவர்கள் மிகவும் பயந்திருந்தனர்.” என்கிறார்.
மார்ச் 21ஆம் தேதி பஹ்ரைனிலிருந்து இந்தியா வந்துசேர்ந்த 192 தமிழர்களில் அருணும் ஒருவர்.

பிரச்னைகளைப் பேசுவோம் – 2 | பெண்கள் பாதுகாப்பு
மறுபுறம், தகவல் பரிமாற்றங்கள் தொடர்பான பஹ்ரைன் அதிகாரிகளின் கட்டுப்பாடுகளும் இருந்ததாகக் குறிப்பிடுகிறார் அருண்.
“ஒருமுறை வெளியே சென்றபோது டிரோன் தாக்குதல் தொடர்பான புகைப்படங்கள், காணொளிகள் ஏதேனும் உள்ளதா என கைபேசியை அதிகாரிகள் வாங்கிச் சோதித்துப் பார்த்தார்கள். ஆனால், அவர்கள் சாதாரண உடைகளில் இருந்தார்கள். இது அங்கு வழக்கமான நடைமுறையாக உள்ளது” என கூறுகிறார் அருண்.
பஹ்ரைன் அரசு பிப்ரவரி 28, 2026 முதல் தகவல் பகிர்வு மீது, குறிப்பாக இரானிய ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல்கள் தொடர்பான காட்சிகள், புகைப்படங்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் மீது, பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது என்றும், அமைதியான முறையில் கருத்து தெரிவித்த பலரும் பஹ்ரைன் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் (Human rights watch) தெரிவிக்கிறது.
ஆனால், இந்த நடவடிக்கைகள் தேசியப் பாதுகாப்பு, தவறான தகவல்கள் பரவுவதைத் தடுத்தல், பொது ஒழுங்கைப் பாதுகாத்தல் மற்றும் ‘இரானிய ஆக்கிரமிப்புக்கு’ ஆதரவான எந்தவொரு விஷயத்தையும் தவிர்ப்பதில் கவனம் செலுத்துகிறது என பஹ்ரைன் அரசு கூறுகிறது.
பஹ்ரைன் வான்வெளி மூடப்பட்ட நிலையில் தமிழ்நாடு வந்தது எப்படி?

‘பஹ்ரைன் சிவில் விமானப் போக்குவரத்து விவகாரங்கள் ஆணையத்தின் உத்தரவின்படி, பஹ்ரைனின் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், விமானச் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. எங்கள் பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.’
இதுவே பஹ்ரைன் விமான நிலையத்தின் இணையதளத்தில் காணப்படும் அறிவிப்பு.
“இந்தப் போர்ச் சூழல் முழுவதும் பஹ்ரைனில் உள்ள அன்னை தமிழ் மன்றம் மூலம், தமிழர்களை ஒருங்கிணைத்து வந்தோம். அப்போது பலர் தமிழ்நாட்டுக்கு திரும்ப உதவ வேண்டுமென எங்களிடம் கோரிக்கை வைத்தார்கள்” எனக் கூறுகிறார் பஹ்ரைன் ‘அன்னை தமிழ் மன்றத்தின்’ தலைவரும், தற்போதும் குடும்பத்துடன் பஹ்ரைனில் தங்கியிருப்பவருமான செந்தில்.
“எனவே கல்ஃப் ஏர் நிறுவனத்துடன் இணைந்து இரு சிறப்பு விமானங்களை மார்ச் 18 மற்றும் 21 தேதிகளில் சென்னைக்கு இயக்க முயற்சிகள் எடுத்தோம்” என்கிறார் அவர்.
‘கல்ஃப் ஏர்’ என்பது பஹ்ரைனின் பிரதான அதிகாரப்பூர்வ விமான நிறுவனம் ஆகும். பஹ்ரைன் வான்வெளி மூடப்பட்டுள்ளதால், தற்போது இந்த நிறுவனம் தற்காலிகமாக சௌதி அரேபியாவின் தமாம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து உலகின் பல்வேறு பகுதிகளுக்கு விமானங்களை இயக்கி வருகிறது.

“பஹ்ரைன் நாட்டிலிருந்து சௌதி அரேபியா செல்வதற்கான பேருந்துகள், எல்லையைக் கடக்க அனுமதி போன்ற ஏற்பாடுகளை கல்ஃப் ஏர் நிறுவனம் செய்து கொடுத்தது” என்கிறார் செந்தில்.
இந்த இரு சிறப்பு விமானங்கள் மூலம் 384 பேர் தமிழ்நாடு வந்துள்ளதாகவும் பஹ்ரைனின் ‘கேரள சங்கம்’ இயக்கிய இரு விமானங்கள் மூலம் சில தமிழர்கள் இந்தியா வந்ததாகவும் செந்தில் குறிப்பிடுகிறார்.
“ஒருவருக்கு ரூ. 80,000 என்ற செலவில் இந்த பயணத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. 20 தொழிலாளிகளுக்கு இலவச டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன. பெரும்பாலும் இந்த இரு பயணங்களில் முதியோர், பெண்கள், குழந்தைகளுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது” என்கிறார் அவர்.
“இன்னும் பல தமிழர்கள் பஹ்ரைனை விட்டு செல்லவேண்டுமென எங்களிடம் கோரிக்கை வைக்கிறார்கள், அதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறோம். என் மனைவி நிறைமாத கர்ப்பிணியாக இருப்பதால் நான் குடும்பத்துடன் இங்கே தான் இருக்கிறேன்”.
“பஹ்ரைன் அரசு அனைத்து உதவிகளையும் செய்து வந்தாலும், இப்போதும் கூட வெடிப்புச் சத்தங்கள் எனக்கு தெளிவாகக் கேட்கின்றன” என்று கூறுகிறார் செந்தில்.
‘போர் கற்றுக்கொடுத்த பாடம்’

மார்ச் 18ஆம் சென்னை வந்து சேர்ந்தவர்களில் ஒருவரான மணிகண்டன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), “பஹ்ரைனிலிருந்து பேருந்தில் ஏறும் போதும், சௌதியின் தமாம் நோக்கிய சாலையில் பேருந்து செல்லும்போதும் வானில் வெடிப்புகளை நாங்கள் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம். பேருந்து மீது ஒரு தாக்குதல் நடந்தால் என்னவாகும் என்ற பயம் தான் அனைவரது மனதிலும் நிறைந்திருந்தது” என்று கூறுகிறார்.
சௌதியின் தமாமிலிருந்து புறப்பட்ட விமானம் இந்திய வான்வெளியை அடைந்துவிட்டது என்ற விமானியின் செய்தி கேட்டதும் விமானத்தில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்தனர் என நினைவு கூர்கிறார் அவர்.
“பலமுறை சென்னை வந்திருந்தாலும், இம்முறை குடும்பத்துடன் பத்திரமாக வந்து சேர்ந்தது ஒரு பெரும் ஆறுதல் உணர்வை அளித்தது. மீண்டும் நாங்கள் நிச்சயம் பஹ்ரைன் செல்வோம், வாழ்வாதாரம் என்பதைத் தாண்டி, பஹ்ரைன் எப்போதுமே ஒரு பாதுகாப்பான நாடாக தான் இருந்துள்ளது” என்கிறார் அவர்.

மார்ச் 18ஆம் தேதி இயக்கப்பட்ட சிறப்பு விமானத்தில் தமிழ்நாடு வந்துசேர்ந்த ஜாக்குலின், பஹ்ரைனில் ஒரு தனியார் நிறுவனத்தில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார்.
“பிப்ரவரி 28-ஆம் தேதி ஒரு போர் என்றால் என்ன என நாங்கள் நேரில் பார்த்த நாள், உயிர் பயம் அங்கிருந்த அனைவரையும் தொற்றிக்கொண்டது. சைரன் சத்தங்களும், வெடிப்புகளும் எங்களது பதற்றத்தை அதிகரித்தன. இரவுகளில் தூக்கம் இல்லாமல் தவித்தோம்” என்கிறார்.
அதேசமயம், “அந்த நெருக்கடியான சூழலிலும் அங்கிருந்த அனைவரும் ஒருவருக்கொருவர் உதவுவதில் கவனம் செலுத்தினர். யாரும் உணவுக்காகவோ, இருப்பிடத்திற்காகவோ சண்டையிடவில்லை, பஹ்ரைன் அரசு எங்களுக்கு தேவையான அனைத்தையும் செய்தது” எனக் குறிப்பிடுகிறார்.
ஆனால், “இந்தப் போர் ஒரு முக்கியமான விஷயத்தை எங்களுக்கு கற்றுக்கொடுத்துள்ளது, உலகத்தில் இனி எந்தப் பகுதியும் பாதுகாப்பானது இல்லை. எதற்கும், எப்போதும் தயாராக இருக்க வேண்டும்” என்கிறார் ஜாக்குலின்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு