பட மூலாதாரம், AFP via Getty Images
-
- எழுதியவர், அம்ரிதா ஷர்மா
- பதவி, பிபிசி மானிட்டரிங்
-
ஆகஸ்ட் 13, 2025 அன்று ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்ட் (ARFC) என்ற அமைப்பை உருவாக்குவதாக பாகிஸ்தான் அறிவித்தது.
இந்த முடிவு, மே 2025 இல் இந்தியாவுடன் நடந்த ராணுவ மோதலின் பின்னணியில் எடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த புதிய குழுவிடம் நீண்ட தூர மரபுசார்ந்த தாக்குதல் திறனை வளர்ப்பதற்கான பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் ஊடகங்களின் கூற்றுப்படி, இந்த புதிய குழு இந்தியாவுக்கு எதிராக ஒரு தடுப்பு சக்தியாக (deterrent) செயல்படும்.
மே மாத மோதலுக்குப் பிறகு, பாகிஸ்தான் தனது ராணுவ திறன்களை வலுப்படுத்துவதற்கு தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
ஜூன் மாதத்தில், பாகிஸ்தான் 2025-2026 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு பட்ஜெட்டை 20% உயர்த்தியது. இது கடந்த பத்தாண்டுகளில் பாதுகாப்பு செலவினத்தில் செய்யப்பட்ட மிகப்பெரிய வருடாந்திர உயர்வாகும்.
பாகிஸ்தான் தனது விமானப்படை மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பையும் சீனாவின் உதவியுடன் மேம்படுத்தி வருகிறது.
இதனால், பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இடையே வளர்ந்து வரும் ராணுவ உறவுகள் குறித்து இந்தியாவின் கவலை ஆழமடைந்துள்ளது.
பாகிஸ்தான் ஊடகங்களும் நிபுணர்களும் இந்த அறிவிப்பை தொலைநோக்கு பாதுகாப்பு உத்தி என்று விவரித்தாலும், சிலர் நாட்டின் பொருளாதார நிலைமையைக் கருத்தில் கொண்டு இதனால் ஏற்படும் நிதிச் சுமை குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
இந்த புதிய ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்ட் என்பது என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
மரபுசார் ஏவுகணைகள், எறியியற் ஏவுகணைகள் (பாலிஸ்டிக்), சீர்வேக( க்ரூஸ்) ஏவுகணைகள் ஆகியவற்றையும் சில நேரங்களில் வேளை மீயொலி ஏவுகணைகளையும்(ஹைப்பர்சோனிக்) இயக்குவது ஆர்மி ராக்கெட் ஃபோர்ஸ் கமாண்டின் (ARFC) பணியாக இருக்கும்.
பாகிஸ்தான் ஊடகங்களின்படி, மே மாத மோதலுக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிராக தடுப்பு சக்தியாக இந்த குழு உருவாக்கப்படுகிறது.
இந்த புதிய குழுவின் மூலம், முதல் முறையாக எல்லைக்கு அப்பால் நீண்ட தூர துல்லியத் தாக்குதல்களை மேற்கொள்ளும் திறனை பாகிஸ்தான் ராணுவம் பெறும்.
இதுவரை, பாகிஸ்தானால் இத்தகைய தாக்குதல்களை விமானப்படை மூலமாக மட்டுமே மேற்கொள்ள முடிந்தது.
ஆகஸ்ட் 13 அன்று, பாகிஸ்தான் சுதந்திர தினத்திற்கு முந்தைய நாள், பிரதமர் ஷபாஸ் ஷரீஃப் இந்த குழு உருவாக்கப்படுவதை அறிவித்தார்.
அவர் இதை, “நாட்டின் எதிரிகளுக்கு எதிராக எல்லா திசைகளிலிருந்தும் ராணுவ பதிலடி தரும் திறன்களை மேம்படுத்துவதற்கும், பாரம்பரிய போர் திறனை மேலும் வலுப்படுத்துவதற்கும் ஒரு முக்கிய மைல்கல்” என்று விவரித்தார்.
இருப்பினும், இந்த புதிய கமாண்ட் ஃபோர்ஸின் செயல்பாடு தொடர்பான எந்த விவரங்களையும் அவர் பகிர்ந்து கொள்ளவில்லை.
ஆனால், சில இந்திய ஊடக செய்திகள், இந்த ராக்கெட் ஃபோர்ஸ், பாபர் க்ரூஸ் ஏவுகணை, ஷாஹீன் பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் வழிகாட்டக்கூடிய ராக்கெட் லாஞ்சர்கள் போன்ற ஆயுதங்களைக் மேலாண்மை செய்து, இந்தியாவின் விமான மற்றும் ஏவுகணை பாதுகாப்பு திறன்களுக்கு பதிலளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
“இந்த ஃபோர்ஸுக்கு எதிரி பகுதியில் நீண்டதூரமும், துல்லியமாகவும் தாக்குதல் நடத்தும் திறன் இருக்கும்” என்று பாகிஸ்தானின் உத்தி விவகார நிபுணர் சையத் முகமது அலி, நுக்டா டிஜிட்டல் தளத்தில் ஆகஸ்ட் 18 அன்று மூத்த பத்திரிகையாளர் கம்ரான் கானுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
பாகிஸ்தான் ராணுவத்திற்கு ஆதரவாக எழுதும் பாகிஸ்தான் ஆப்சர்வர் என்ற நாளிதழ், ஆகஸ்ட் 14 அன்று வெளியிட்ட அறிக்கையில், சிறந்த ஒருங்கிணைப்பு ” தாக்குதல்களை முன்கூட்டியே கணிப்பதை இந்தியாவுக்கு மிகவும் கடினமாக இருக்கும்” என்று குறிப்பிட்டது.
இதற்கு இரண்டு நாட்களுக்குப் பிறகு, இந்தியா தனது சுதந்திர தினத்தில் உள்நாட்டு பாதுகாப்பு கவசத்தை உருவாக்கும் திட்டத்தை அறிவித்தது.
இது இஸ்ரேலின் ‘ஐயர்ன் டோம்’ மற்றும் அமெரிக்கா முன்மொழிந்துள்ள ‘கோல்டன் டோம்’ போன்றவற்றை ஒத்திருக்கும் என்று கூறப்படுகிறது.
சீனா, மற்றும் பாகிஸ்தானிடமிருந்து தொடர்ந்து இருக்கும் பாதுகாப்பு சவால்களைக் கருத்தில் கொண்டு இந்தியா இந்த முடிவை எடுத்துள்ளது.
இது ஏன் உருவாக்கப்படுகிறது?
பட மூலாதாரம், AFP via Getty Images
மே மாத மோதலும், இந்தியாவின் ஏவுகணை திறனில் ஏற்பட்ட முன்னேற்றமும் இந்த குழுவை உருவாக்கும் முடிவை பாகிஸ்தான் எடுக்க காரணமாக உள்ளன.
பாகிஸ்தான் ஊடகங்கள் மற்றும் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, 500 கிலோமீட்டர் தூர வரம்பு கொண்ட குவாஸி பாலிஸ்டிக் பிரளய் ஏவுகணை மற்றும் இந்தியா-ரஷ்யா இணைந்து உருவாக்கி வரும் பிரம்மோஸ்-II ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணை குறித்து பாகிஸ்தான் கவலை கொண்டுள்ளது. பிரம்மோஸ் II ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையின் வேகத்தை மாக் 6 முதல் 8 வரை எட்ட இலக்கு (ஒலியின் வேகத்துடனான ஒப்பீடு) வைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கமாண்ட் மூலம் இந்திய ராணுவத்தின் மீது மேலாதிக்கம் பெறும் என்று பாகிஸ்தான் நம்புகிறது.
“இது மே மாத போரின் பாடம். பாகிஸ்தானிடம் தொலைதூர இலக்குகளைத் தாக்குவதற்கு போதுமான நீண்ட தூர மரபுசார் ராக்கெட்டுகள் இல்லை,” என பாதுகாப்பு நிபுணர் முகமது ஃபைசல், பாகிஸ்தான் நாளிதழான டானில் எழுதினார்.
நிபுணர்கள், பாகிஸ்தான் இந்த நடவடிக்கையை தனது தொலைநோக்கு பாதுகாப்பு உத்தியின் ஒரு பகுதியாக கருதுகின்றனர். குறிப்பாக எதிர்காலத்தில் இந்தியாவுக்கு எதிரான மோதல்களில் பாகிஸ்தானை மேலும் வலிமையாக்கும் என்றும் கருதுகின்றனர்.
இஸ்லாமாபாத்தின் ஏர் யுனிவர்சிட்டியில் விண்வெளி மற்றும் உத்தி ஆய்வுகள் புலத்தின் தலைவர் ஆதில் சுல்தான், புதிய ஃபோர்ஸ் “ராணுவ கோட்பாட்டில் மாற்றத்தை கொண்டு வரக்கூடும்” என்று கூறினார்.
இந்தியாவுடனான சமீபத்திய மோதல்களில் ஏவுகணைகளும் ட்ரோன்களும் முக்கிய பங்கு வகித்தன என்பதால் ஊடகங்களும், நிபுணர்களும் இந்த அறிவிப்பு உத்தி ரீதியாக சரியானது என்று கூறுகின்றனர்.
பாகிஸ்தானின் ‘தி நேஷன்’ நாளிதழ் ஆகஸ்ட் 15 அன்று, “உத்தி மற்றும் தந்திரோபாய கண்ணோட்டத்தில் இது மிகவும் முக்கியமான நடவடிக்கையாகும். இது வரும் ஆண்டுகளில் நாட்டின் ராணுவ வலிமையை வடிவமைக்கும்,” என்று எழுதியது.
புதிய குழு “தெற்காசியாவின் உத்தி சமன்பாட்டில் அடிப்படை மாற்றத்தை குறிக்கிறது” என்று பாகிஸ்தானின் ஓய்வு பெற்ற பிரிகேடியர் ராஜா ஷோசப் மஜித், ஆகஸ்ட் 17 அன்று ‘பாகிஸ்தான் அப்சர்வர்’ இதழில் எழுதினார்.
இந்தியாவின் கவலைகள் என்ன?
பட மூலாதாரம், AFP via Getty Images
பாகிஸ்தான் தனது விமானப்படை மற்றும் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளை மேம்படுத்தி வருகிறது, இதில் அதன் கூட்டாளியான சீனாவின் முக்கிய பங்கு உள்ளது.
இது பாகிஸ்தான்-சீனா இடையேயான வளர்ந்து வரும் இராணுவ உறவுகள் குறித்த இந்தியாவின் கவலையை ஆழப்படுத்தியுள்ளது.
” ஏஆர்எஃப்சி-ஐ பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்கு இடையேயான ஆழமடையும் ராணுவ உறவுகளின் மற்றொரு அறிகுறியாக இந்திய ஆய்வாளர்கள் கருதுகின்றனர்,” என இந்தியா டுடே இணையதளம் ஆகஸ்ட் 16 அன்று எழுதியது.
ஆகஸ்ட் 19 அன்று இந்தி நாளிதழான ராஜஸ்தான் பத்ரிகாவின் கட்டுரையில், “இந்த புதிய ஃபோர்ஸின் பின்னால் ஒரு சக்தி உள்ளது, அதன் தாக்கம் தெளிவாகத் தெரிகிறது, அந்த சக்தி சீனா” என்று குறிப்பிடப்பட்டது.
சீனா, பாகிஸ்தானுக்கு ஐந்தாம் தலைமுறை J-35 ஸ்டெல்த் போர் விமானங்கள், HQ-19 ஏவுகணை பாதுகாப்பு அமைப்பு மற்றும் KJ-500 ஆரம்ப எச்சரிக்கை விமானங்களை வழங்கவுள்ளது என்ற செய்தி வந்தபோது இந்தியாவின் கவலைகள் மேலும் அதிகரித்தன.
மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு உளவுத் தகவல்களை வழங்கியதாக ‘ஆபரேசன் சிந்தூர்’ நடவடிக்கையின் போது, இந்தியா கூறியது.
பாகிஸ்தான் இந்தப் போரில் சீன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாகவும் இந்தியா தெரிவித்தது.
முன்மொழியப்பட்ட இந்த கமாண்ட், சீன மக்கள் விடுதலை ராணுவத்தின் ராக்கெட் ஃபோர்ஸால் உத்வேகம் பெற்றது என்று சில இந்திய ஊடக செய்திகளில் கூறப்பட்டது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு