1
சார்க் விசா விலக்கு திட்டம் (SVES) விசாக்களின் கீழ், பாகிஸ்தானியர்கள் இந்தியாவிற்கு பயணிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் என இந்தியா அறிவித்தள்ளது.
கடந்த காலத்தில் பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட எந்தவொரு SVES (பாகிஸ்தான் மக்கள் இந்தியாவுக்குச் செல்ல அனுமதிக்கும் சிறப்பு தெற்காசிய விசா) விசாக்களும் இரத்து செய்யப்பட்டதாகக் கருதப்படும் என்றும் இந்தியா தெரிவித்துள்ளது.
காஷ்மீரில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து பாகிஸ்தானுடன் இராஜதந்திர உறவை இடைநிறுத்த இந்தியா நடவடிக்கை எடுத்துள்ளதாக இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி தெரிவித்தார்.
பாகிஸ்தானியர்கள் இந்தியா வருவதற்கு இனி விசா வழங்கப்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணிநேரத்தில் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளனர். இந்தியாவில் உள்ள பாகிஸ்தானிய உயர் தூதரகத்தில் உள்ள தற்காப்பு ஆலோசகர்கள் நாட்டைவிட்டு வெளியேற ஒருவார அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பாகிஸ்தான் சென்றுள்ள இந்தியர்கள், மே 1ஆம் திகதிக்குள் நாடு திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
காஷ்மீர்த் தாக்குதலில் சுற்றுப்பயணிகள் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்குப் பின்னர் இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ளது.
இதேவேளை, இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய தண்ணீர் உடன்பாட்டை நிறுத்துவதாக இந்தியா அறிவித்துள்ளது. தண்ணீர் விநியோகம், நீர்ப்பாசனம் மற்றும் நீர் மின்சாரம் ஆகியவற்றுக்குப் பாகிஸ்தான் அந்த உடன்பாட்டை அதிகம் சார்ந்துள்ளது.
முக்கிய எல்லைப் பகுதி மூடப்படுவதாகவும் இந்தியா தெரிவித்துள்ளது.