படக்குறிப்பு, சௌதி அரேபியா உள்ளிட்ட நாடுகளுக்கு நம்பத்தகுந்த கூட்டாளியாக இருக்கவேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறதுகட்டுரை தகவல்
பாகிஸ்தானின் செமிகண்டக்டர் துறையை முன்னேற்ற நீண்ட கால திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அதன்படி முதல் கட்டமாக 7200 பேருக்கு பயிற்சியளிக்கப்பட்டது.
பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ஷாஜா ஃபாதிமா கவாஜா, உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சந்தைகளில் வேலை செய்யக்கூடிய, இன்டக்ரேடட் சர்க்கியூட் (IC) வடிவமைப்பும் ஆராய்ச்சியும் செய்யத் தெரிந்தவர்களை உருவாக்குவது இந்தத் திட்டத்தின் இலக்கு என்று பிபிசி-யிடம் தெரிவித்தார்.
மூன்று கட்டத் திட்டத்தின் மூலமாக, 2035க்குப் பிறகு மின்னணுவியல் துறையில் உலகளாவிய நிறுவனங்களோடு இணைந்து பணியாற்ற பாகிஸ்தான் நினைக்கிறது.
”இந்த திட்டம் பாகிஸ்தானுக்கு செமிகண்டக்டர் துறையில் திறமைசாலிகளை உருவாக்குவதோடு மட்டுமல்லாமல், தேசிய பாதுகாப்பிற்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும், உலகளாவிய விநியோகத்தில் ஏற்படும் தடைகளையும் நாடு சமாளிக்க முடியும்.” என்கிறார் ஷாஜா பாத்திமா.
இன்றைய நவீன டிஜிட்டல் வாழ்க்கையில் சிறிய ஸ்மார்ட்போன்கள் முதல், இணையத்தை கட்டுப்படுத்தும் பெரும் தரவு மையங்கள் வரை ஒவ்வொரு விஷயத்திலும் செமிகண்டக்டர்கள் இடம்பெற்றுள்ளன.
மின்சார வாகனங்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரை பல துறைகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்த நவீன செமிகண்டக்டர் தொழில்நுட்பம் மிக முக்கியமானதாகும்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, புதிய தொழில்நுட்பங்கள் குறித்து 7200 இளைஞர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டதாக பாகிஸ்தான் அரசு தெரிவிக்கிறது
சௌதி கூட்டணி முயற்சிகள்
பாகிஸ்தானில் செமிகண்டக்டர் தொடர்பான ‘இன்ஸ்பயர்’ (Inspire) திட்டம் தொடக்க நிகழ்வில் பேசிய பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப், தகவல் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, மற்றும் செமிகண்டக்டர் போன்ற துறைகளில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம் என்று கூறினார்.
இந்தத் திட்டத்திற்காக பொது துறை மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து 4.5 பில்லியன் ரூபாயும் அவர் ஒதுக்கியுள்ளார். “இது கடலில் ஒரு துளி மட்டும்தான். அரசு செமிகண்டக்டர் திட்டத்திற்காக மேலும் பல வளங்களை வழங்கும்” என்றும் தெரிவித்துள்ளார்.
அரசின் அறிக்கையின்படி, இந்த ஐந்து ஆண்டு திட்டத்தின் கீழ் 7,200 இளைஞர்கள் நவீன தொழில்நுட்பத்தில் பயிற்சி பெறுவார்கள். ஒன்பது பல்கலைக்கழகக் குழுக்கள் உருவாக்கப்படும், மேலும் ஆறு நவீன இன்டக்ரேடர் சர்க்கியூட் (IC) ஆய்வகங்கள் அமைக்கப்படும்.
இந்த நிகழ்வில் பேசிய பாகிஸ்தானின் செமிகண்டக்டர் பணிக்குழுவின் தலைவர் நவீத் ஷெர்வானி, எதிர்காலத்தில் தரவு பாதுகாப்பில் செமிகண்டக்டர் முக்கிய பங்காற்றும் என்று கூறினார்.
“இந்த விஷயத்தில் நாம் முதல் படியை எடுத்துள்ளோம் என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இணையப் பாதுகாப்பும் செமிகண்டக்டர்களும் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமில்லை. இந்தத் துறையில் பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளன. இந்த துறையில் நாம் தன்னிறைவு அடைய வேண்டும். வேறு வழியே இல்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இளைஞர்களை ஐடி, ஏஐ மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் பயிற்றுவிப்பது முக்கியம் என்று பாகிஸ்தான் பிரதமர் கூறுகிறார்
பாகிஸ்தானின் திட்டம்
இந்த திட்டத்திற்கு சிறப்பு முதலீட்டு வசதி கவுன்சில் பக்கபலமாக உள்ளது.
ஃபீல்ட் மார்ஷல் ஜெனரல் அசிம் முனிர் மற்றும் சிறப்பு முதலீட்டு வசதி கவுன்சில் குழு இதில் மிகவும் முக்கிய பங்கு வகித்துள்ளதாக விழாவின் போது அமைச்சர் ஷாஜா பாத்திமா கூறினார்.
சௌதி அரேபியா உள்பட வளைகுடா நாடுகளுக்கு நம்பகமான மனிதவள கூட்டாளியாக பாகிஸ்தான் மாற விரும்புவதாக ஷாஜா பாத்திமா பிபிசியிடம் தெரிவித்தார்.
‘விஷன் 2030’ திட்டத்தின் கீழ் சிப் வடிவமைப்பு மையங்களும் உற்பத்தித் திட்டங்களும் சௌதி அரேபியாவில் தொடங்கப்படும் என்று அவர் கூறினார்.
அத்தகைய பிராந்திய மையங்களுடன் இணைவது பாகிஸ்தானில் திறமையான பொறியாளர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும், முதலீட்டை ஈர்க்கும் என்றும் அவர் கூறினார்.
உள்ளூரில் பயிற்சி பெற்ற பொறியாளர்கள் இருப்பது வடிவமைப்பு மையங்கள் மற்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் உருவாக உதவும் என்றும் மேலும் பாதுகாப்பு, தொடர்பு மற்றும் தொழில் துறைகளில் ஆராய்ச்சியை எளிதாக்கும் என்றும் ஷாஜா பாத்திமா கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, செமிகண்டக்டர்களின் முக்கியத்துவத்தை இந்திய பிரதமர் மோதியும் பலமுறை வலியுறுத்தியிருக்கிறார்
“இந்த சிப்கள் எதிர்காலத்துக்கு பலம் சேர்க்கும்”
லாகூர் யுனிவர்சிட்டி ஆஃப் மேனேஜ்மென்ட் சயின்சஸில் (LUMS) எலக்ட்ரிக்கல் எஞ்சினியரிங் துறையில் உதவி பேராசியராக இருக்கும் அதீல் பாஷா, “இதை ஏற்கெனவே தாமதித்துவிட்டோம்” என்று கூறுகிறார். அவர் இன்டக்ரேடட் சர்க்கியூட் (IC) வடிவமைப்பில் கைதேர்ந்தவர்.
எல்.யு.எம்.எஸ் (LUMS) உள்ளிட்ட பல பாகிஸ்தான் பல்கலைக்கழகங்கள் ஐ.சி (IC) வடிவமைப்பு துறையில் நிபுணர்களை உருவாக்கியுள்ளன என்றும் சில நிறுவனங்கள் 2019 முதலே இந்தத் துறையில் செயல்பட்டுவருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால், தற்போதைய முன்னேற்றத்தின் மிகப்பெரிய காரணம் பிராந்திய அரசியல் நிலைமைதான் என்று அவர் கூறினார். டிரம்ப் சீனாவிற்கு வரி விதித்ததுடன், செமிகண்டக்டர் வர்த்தகத்தில் தடைகள் உருவானதும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது என்கிறார் அவர்.
மேலும், வரும் காலத்தில் இந்த சிப்கள் மூலமாக உலகில் ஆதிக்கம் செலுத்தமுடியும் என்று அவர் கூறினார்.
ஓட்டுநர் இல்லாத கார்கள் முதல் ராணுவ உபகரணங்கள் வரை உயர்தர செமிகண்டக்டர்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
“ஐ.சி (IC) வடிவமைப்பு மற்றும் செமிகண்டக்டர் துறை மென்பொருள் துறையிலிருந்து மிகவும் வித்தியாசமானது. ஏனெனில் இதனை தயாரிக்க தேவையான உபகரணங்களுக்கு உரிமம் பெறவே கோடிக்கணக்கான டாலர்கள் செலவாகும். மைக்ரோப்ராசஸர் சிப்கள் சிறியதாக சிறியதாக அவை அதிக விலைமதிப்பானவையாக மாறுகின்றன” என்று கூறினார்.
“இந்தியா 1980களில் தொடங்கியதை நாம் 2000-ஆம் ஆண்டுக்குப் பிறகுதான் தொடங்கினோம். இந்தத் திட்டங்களில் தொடர்ச்சி இல்லை” என்ற அவர், இந்தியாவை விட பாகிஸ்தான் பின்தங்கியிருப்பதாகக் கூறினார்.
சிப் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு நரேந்திர மோதியின் இந்திய அரசு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் சலுகை கொடுத்திருக்கிறது.
பாகிஸ்தானில் உள்ள ஐ.சி (IC) வடிவமைப்பு நிபுணர்கள், எதிர்காலத்தில் இந்தத் துறை தேசிய பாதுகாப்பையும் ஒருமைப்பாட்டையும் உறுதிசெய்யக் கூடியது என்கிறார்கள். உயர் தொழில்நுட்ப சிப்கள் பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்படுவதால், அவற்றின் உலகளாவிய வர்த்தகத்திலும் தற்போது கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் சொல்கிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
செமிகண்டக்டர் சிப்களை பாகிஸ்தானில் ஏன் தயாரிக்க முடியாது?
2019 முதல் நாட்டில் செமிகண்டக்டர் தொழில் வேகமாக வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது 22 முதல் 25 நிறுவனங்கள் வரை ஐ.சி (IC) வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளன என்று அதீல் பாஷா தெரிவித்துள்ளார்.
ஆனால், பாகிஸ்தானில் விரைவில் சிப்கள் தயாரிக்கப்படும் என அவர் எதிர்பார்க்கவில்லை. தற்போது பெரும்பாலான சிப்கள் தைவானில் தயாரிக்கப்படுகின்றன. மேலும் முன்னேறிய நாடுகளுக்குக் கூட தங்களுக்கான சிப்களை தயாரிப்பது கடினமாகவே உள்ளது என்று அவர் கூறினார்.
சிப்கள் தயாரிப்பதற்கு பெருமளவு நீர் பயன்படுத்தும் உற்பத்தி ஆலைகள் அவசியம் என்று அவர் கூறினார். இதில் ஆபத்தான ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்றும் மேலும் மாசற்ற ‘கிளீன் ரூம்கள்’ தேவைப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.
“இந்தத் தொழில் மிகவும் செலவானது. கூடிய விரைவில் நம் நாட்டில் சிப் உற்பத்தி சாத்தியமில்லை.” என்றும் அதீல் பாஷா கூறினார்.
அதற்குப் பதிலாக ‘ஃபேப்லெஸ்’ (fabless) தொழில்துறையை ஊக்குவிக்கலாம் என்று அதீல் பாஷா பரிந்துரைக்கிறார். இதில் நிறுவனங்கள் தங்களுக்கான சிப் வடிவமைப்புகளைத் தாங்களே உருவாக்குகின்றன என்றும், அவற்றுக்கு தேவை இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஒரு உயர் தொழில்நுட்ப சிப் கோடிக்கணக்கான டாலர்கள் மதிப்புடையது, எனவே அதை வடிவமைப்பதற்கு சிறப்பு நிபுணத்துவம் அவசியம் என்று அதீல் பாஷா கூறினார்.