படக்குறிப்பு, இன்று டெல்லியில் மீண்டும் செய்தியாளர்களை சந்தித்தார் அமிர்கான் முத்தக்கி.கட்டுரை தகவல்
இந்தியா வந்துள்ள தாலிபன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முத்தக்கி கடந்த வெள்ளிக்கிழமை நடந்த செய்தியாளர் சந்திப்பில் வேண்டுமென்றே யாரையும் தவிர்க்கவில்லை என தெரிவித்துள்ளார்.
இன்று (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியில் மற்றொரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியுள்ளார். கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட சந்திப்பில் பெண் பத்திரிகையாளர்கள் யாரும் இல்லை.
பல பெண் பத்திரிகையாளர்கள் தங்களின் சமூக வலைதளத்தில் தங்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என பகிர்ந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.
அதே நேரம் இன்று நடந்த முத்தக்கியின் செய்தியாளர் சந்திப்பில் பல பெண் பத்திரிகையாளர்கள் பங்கேற்றனர். மேலும் முத்தக்கியிடம் பல கேள்விகளை எழுப்பியுள்ளனர்.
பெண் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பு இல்லையா?
பட மூலாதாரம், ani
படக்குறிப்பு, அமிர்கான் முத்தக்கியின் செய்தியாளர் சந்திப்பிற்கு 16 ஆண் பத்திரிகையாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை டெல்லியில் உள்ள ஆப்கானிஸ்தான் தூதரகத்தில் நடந்த தாலிபன் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முத்தக்கியின் செய்தியாளர் சந்திப்பிற்கு 16 ஆண் பத்திரிகையாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
பெண்கள் மற்றும் வெளிநாட்டு ஊடகங்கள் திருப்பி அனுப்பப்பட்டதாக பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். எனினும் தாலிபன் அரசின் பிரதிநிதி உறுப்பினர் சய் தக்கல்-ம், வெளியுறவுத்துறையின் செய்தித் தொடர்பாளரும் இந்த தகவலை மறுக்கின்றனர்.
“தூதரகம் வந்த அனைத்து பத்திரிகையாளர்களும் செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்” என அவர் கூறுகிறார்.
இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், கடந்த சந்திப்பில் பெண்கள் இடம்பெறாதது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “அந்த செய்தியாளர் சந்திப்பு குறுகிய நேரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. குறைவான மற்றும் குறிப்பிடத்தக்க பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டது. அது ஒரு தொழில்நுட்பக் கோளாறு. எங்கள் ஊழியர்கள் குறைவான பத்திரிகையாளர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்க முடிவு செய்தனர். இதில் வேறு எந்த குறிக்கோளும் இல்லை” என்றார்.
ஆப்கானிஸ்தானில் பெண் கல்வி பற்றி முத்தக்கி கூறியது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் பள்ளி மற்றும் கல்வி நிலையங்களில் 10 மில்லியன் மாணவர்கள் பயின்று வருகின்றனர் என்றார் முத்தக்கி.
இன்றைய செய்தியாளர் சந்திப்பில் முத்தக்கியிடம், “நீங்கள் இரான், சிரியா, சௌதி அரேபியா சென்றுள்ளீர்கள். அங்கெல்லாம் பெண்கள் பள்ளி, கல்லூரி செல்ல தடை விதிக்கப்படவில்லை. ஆனால் ஆப்கானிஸ்தானில் மட்டும் ஏன் இதை செய்கிறீர்கள்?” எனக் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு “ஆப்கானிஸ்தானின் உலமாக்கள், மதரஸாக்கள் மற்றும் தேவ்பந்துடனான உறவுகள் மற்றவர்களை விட அதிகமாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.” என முத்தக்கி பதில் அளித்தார்.
“கல்வியை பொறுத்தவரை தற்போது இங்கு பள்ளி மற்றும் கல்வி நிலையங்களில் 10 மில்லியன் மாணவர்கள் பயின்று வருகின்றனர். அதில் 2.8 மில்லியன் பேர் பெண்கள். இந்தக் கல்வி மதரஸாக்களில் பட்டப்படிப்பு வரை கிடைக்கிறது.” என்றார்.
மேலும் “குறிப்பிட்ட பகுதிகளில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. ஆனால் இது நாங்கள் கல்வியை மறுக்கிறோம் என்று அர்த்தமல்ல. நாங்கள் கல்வியை மத ரீதியாக ‘ஹராம்’ என்று அறிவிக்கவில்லை, ஆனால் மறு உத்தரவு வரும் வரை இது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.” என்றார்.
பாகிஸ்தான் உடனான உறவு குறித்து முத்தக்கி சொல்வது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பாகிஸ்தான் உடன் பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருப்பதாக முத்தக்கி தெரிவித்தார்.
பாகிஸ்தானின் உறவு குறித்து பேசுகையில், தாலிபன் அரசு பாகிஸ்தானுடன் நல்ல உறவையே விரும்புகிறது. பேச்சுவார்த்தைக்கான கதவு திறந்தே இருப்பதாக தெரிவித்தார்.
பாகிஸ்தான் எங்களுடன் நல்ல உறவை விரும்பவில்லை என்றால் எங்களுக்கு வேறு வழி உள்ளது எனவும் கூறினார்.
“பாகிஸ்தானில் உள்ள மக்கள் ஆப்கானிஸ்தான் உடன் நல்ல உறவையே விரும்புகின்றனர். பாகிஸ்தான் மக்களுடன் எந்த பிரச்னையும் இல்லை. பாகிஸ்தானில் சில குறிப்பிட்ட விஷயங்கள் நிலைமையை மோசமாக்க முயற்சிக்கின்றன. எனவே ஆப்கானிஸ்தான் அதன் எல்லைகளையும் மக்களையும் பாதுகாக்கும்.” என்றார்.
“நேற்று இரவு நடந்த தாக்குதலில் எங்களின் நோக்கம் நிறைவேறிவிட்டது. எங்களின் நண்பர்களான கத்தார், சௌதி அரேபியா மோதலை நிறுத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டன. எங்கள் பக்கத்தில் இருந்து மோதலை நிறுத்திவிட்டோம். நிலைமை கட்டுக்குள் உள்ளது” என முத்தக்கி கூறினார்.
மேலும் ஆப்கானிஸ்தான் சுதந்திரமாகிவிட்டதாகவும், அமைதிக்கான வேலையை செய்திவருவதாகவும் தெரிவித்தார்.