பாகிஸ்தானை எதிர்க்கும் விஷயத்தில் திமுக உட்பட அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளது பாராட்டுக்குரியது என்று பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை கூறினார். தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது:
பாகிஸ்தான் செய்யக் கூடிய தவறுகளுக்கு, இந்தியா அறத்தின் அடிப்படையில் பதிலடி கொடுத்து வருகிறது. தீவிரவாத மையங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. பாகிஸ்தான் ராணுவத்தின் மீதோ, மற்ற இடங்களிலோ தாக்குதல் நடத்தப்படவில்லை.
ஆனால், இந்திய எல்லையோரம் உள்ள அப்பாவி மக்கள் மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. காஷ்மீரில் துணை ஆட்சியர் நிலையில் உள்ள ஒரு அதிகாரி மற்றும் 20-க்கும் மேற்பட்ட பொதுமக்களைக் கொன்றுள்ளனர். கடந்த 3 நாட்களாக 400-க்கும் மேற்பட்ட ட்ரோன்களை அனுப்பி, தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்தியா 4 டிரில்லியன் பொருளாதாரத்தில் இருக்கிறது. பாகிஸ்தானின் பொருளாதாரம் 360 பில்லியன் டாலர்தான். எந்த நாட்டின் எல்லையையும் பிடிக்க நாம் போரிடவில்லை. இந்தியாவின் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலை வேறோடு அறுக்க வேண்டும் என்ற நோக்குடன் போர் நடந்து வருகிறது. தீவிரவாதிகளுக்கு எதிரான இந்தப் போர் இன்றுடன் முடியப்போவதில்லை. இந்தியாவில் ராணுவம் அரசின் கீழ் உள்ளது. பாகிஸ்தானில் அரசின் கட்டுப்பாட்டில் ராணுவம் இல்லை.
மாற்றுக் கருத்துகள் இருந்தாலும், பாகிஸ்தானை எதிர்க்கும் விஷயத்தில் திமுக உட்பட அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளது பாராட்டுக்குரியது. இந்த நேரத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். எல்லையில் பணியாற்றும் ராணுவ வீரர்களுக்கு ஆறுதல் வார்த்தைகள் கூற வேண்டும். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.