1
பாகிஸ்தான் அரசாங்கம் நிர்வகிக்கும் அனைத்துலக விமான நிறுவனம், இங்கிலாந்துக்கு நேரடி விமான சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது.
5 ஆண்டுகளுக்கு முன்னர் குறித்த நிறுவனத்தின் சேவைக்கு இங்கிலாந்து தடை விதித்திருந்தது.
2020ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் அந்த நிறுவனத்தின் விமானம் ஒன்று, கராச்சி நகரில் விபத்துக்குள்ளானது. அதில் கிட்டத்தட்ட 100 பேர் உயிரிழந்தனர்.
விபத்து குறித்த விசாரணையின்போது, நிறுவனத்தின் விமானிகளில் பலர் போலி உரிமங்களை வைத்திருந்தனர் என்று தெரிய வந்தது.
அதைத் தொடர்ந்து இங்கிலாந்தும் ஐரோப்பிய ஒன்றியமும் நிறுவனத்தின் சேவைகளுக்குத் தடை விதித்தன.
கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் தடையை நீக்கியது.
பல சோதனைகளை நடத்திய பின்னர், நிறுவனத்தின் மீதான நம்பிக்கை மீண்டும் திரும்பியதால் நேற்று (25) இங்கிலாந்தும் தடையை நீக்கியது.
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்திலிருந்து இங்கிலாந்தின் மென்செஸ்ட்டர் (Manchester) நகருக்கு நேரடி விமானச் சேவை தொடங்கியது.
இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் 1.4 மில்லியனுக்கு மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் வசிக்கின்றனர்.
தாயகத்துக்குச் செல்ல நேரடி விமான சேவையை வழங்குவது தேசியப் பொறுப்பு என பாகிஸ்தானின் தற்காப்பு அமைச்சர் தெரிவித்தார்.