பட மூலாதாரம், @MofaQatar_EN
பாகிஸ்தான் மற்றும் ஆப்கன் தாலிபன்களுக்கும் இடையே சில நாட்கள் நீடித்த சண்டையைத் தொடர்ந்து சனிக்கிழமை இரவு இரு தரப்பும் சண்டை நிறுத்தத்துக்கு ஒப்புக் கொண்டன.
கத்தார் தலைநகர் தோஹாவில் கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்தின் பேரில் அமைதி பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.
பிபிசி பஷ்தோ சேவையின் தகவல்களின்படி, தோஹா பேச்சுவார்த்தையில் ‘நிலைமையை இயல்பாக்குவதற்கும், இரு தரப்பு மக்களிடையே பரஸ்பர தொடர்பு மற்றும் வர்த்தகத்தை இயல்பாக்குவதற்கும் முயற்சி’ மேற்கொள்ளப்படுவதாக ஆப்கானிஸ்தான் தாலிபன் பாதுகாப்பு அமைச்சர் முல்லா முகமது யாகூப் முஜாஹித் கூறினார்.
ஞாயிறு அன்று ஊடகங்களிடம் பேசிய அவர், கத்தார் வெளியுறவு அமைச்சரின் அறிக்கையில் இடம்பெற்றுள்ள “எல்லை” (Border) எனும் வார்த்தை தங்களிடம் விவாதிக்கப்படவில்லை என்றும் அது குறித்து ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றும் யாகூப் கூறினார்.
அவர் மேலும் பேசிய போது, துராந்த் கோடு பிரச்னை என்பது, அரசுகளிடையிலானது அல்ல, மாறாக தேசங்களிடையிலானது என்றார்.
இந்த ஒப்பந்தத்தின் கீழ் இரு தரப்பும் எதிர்காலத்தில் பேச்சுவார்த்தைகளைத் தொடர உறுதி பூண்டுள்ளன.
தொடங்கிய தாக்குதல்கள்
முன்னதாக அக்டோபர் 11 மற்றும் 12ம் தேதிகளின் இரவுகளில், பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் மோதல்கள் ஏற்பட்டன.
அக்டோபர் 12ம் தேதி ஞாயிற்றுக்கிழமை பேசிய ஆப்கானிஸ்தானின் ஆளும் தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஸபிஹூல்லா முஜாஹித் இதனை, பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி தாக்குதல் என கூறினார். இந்த தாக்குதலில் 58 பாகிஸ்தான் ராணுவத்தினர் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் அவர் கூறினார்.
இதே நாளில் பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத்துறை வெளியிட்ட அறிக்கையில், 200 க்கும் மேற்பட்ட தாலிபன்கள் கொல்லப்பட்டதாகவும், இந்த மோதலில் 23 பாகிஸ்தானிய வீரர்கள் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அக்டோபர் 15 அன்று ஆப்கானிஸ்தானின் கந்தஹாரில் உள்ள ஸ்பின் போல்டக் மாவட்டத்தில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில் 12 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
பட மூலாதாரம், Getty Images
திருத்தப்பட்ட அறிக்கை
இதன் பின்னர் இரு தரப்பிற்கும் இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தை, கத்தார் மற்றும் துருக்கியின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்றது.
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தரப்பு அதிகாரிகள் அளித்த தகவலின்படி, இரு தரப்புமே தங்களின் நிலப்பரப்பு மற்றொரு நாட்டுக்கு எதிரான பயங்கரவாதத்திற்காக பயன்படுத்தப்பட அனுமதிக்க மாட்டோம் எனவும் ஒப்புக் கொண்டனர்.
அக்டோபர் 19ம் தேதி கத்தார் வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றின்படி, நீடித்த அமைதி மற்றும் நிலைத்தன்மைக்காக செயல் திட்டம் ஒன்றைத் தயாரிக்க இரு தரப்புமே ஒப்புக் கொண்டனர்.
எனினும் பின்னாளில், கத்தாரின் அறிக்கை திருத்தப்பட்டது, இரு தரப்பிடையிலான எல்லை பிரச்னையின் தீவிரத்தை உணர்த்தியது.
கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் இணையதளத்தில் பதிவிடப்பட்டிருந்த அறிக்கையில், ‘எல்லை’ எனும் வார்த்தை நீக்கப்பட்டது.
பட மூலாதாரம், @MofaQatar_EN
முன்பு வெளியான அறிக்கையில் “இந்த முக்கியமான நடவடிக்கை இரு நட்பு நாடுகளுக்கும் இடையிலான எல்லை பதற்றங்களை முடிவுக்குக் கொண்டுவரவும், பிராந்தியத்தில் நீடித்த அமைதிக்கு வலுவான அடித்தளத்தை அமைக்கவும் உதவும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
கத்தார் வெளியுறவு அமைச்சகத்தின் இணைய தளத்தில் இருந்த மேற்கண்ட அறிக்கை திருத்தப்பட்டு அதிலிருந்து, ‘எல்லை’ என்ற வார்த்தை நீக்கப்பட்டது.
பட மூலாதாரம், mofa.gov.qa
இந்த இரு அண்டை நாடுகளும் 2,000 கிலோ மீட்டர் தூரத்திற்கு துராந்த் கோடு என்று அறியப்படும் எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. காலனித்துவ காலத்து இந்த எல்லையை ஆப்கானிஸ்தான் என்றுமே அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது இல்லை.
சமீப ஆண்டுகளில் துராந்த் கோடு பகுதியில் வேலி அமைப்பது தொடர்பாகவும் இரு தரப்புக்கிடையே மோதல் இருந்தது.
தெற்காசிய புவிசார் அரசியல் நிபுணரும் தெற்காசிய பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியருமான தனஞ்சய் திரிபாதி, பிபிசி செய்தியாளர் சந்தன் குமார் ஜஜ்வாரேவிடம் பேசுகையில், “எந்தவொரு போர் நிறுத்த ஒப்பந்தத்தைப் பற்றியும் நீங்கள் முழுமையான உறுதியுடன் எதுவும் கூற முடியாது. இந்த ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தான் தாலிபனுக்கும் இடையிலான மோதலை தற்போதைக்கு நிறுத்தியுள்ளது. இப்போது இரு தரப்பினரும் நம்பிக்கையை வளர்க்க சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று கூறினார்.
“தாலிபன்கள் ஒருபோதும் துராந்த் கோட்டை ஏற்றுக்கொண்டதில்லை. ஆப்கானிஸ்தானில் யார் ஆட்சிக்கு வந்தாலும், அவர்கள் துராந்த் கோட்டை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள், ஏனெனில் அவர்களுக்கு அதனுடன் உணர்ச்சிபூர்வமான மற்றும் வரலாற்று தொடர்பு உள்ளது.” எனவும் தனஞ்சய் கூறினார்.
மேலும்,”இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது எளிதல்ல. இது ஒரு திறந்த எல்லை, இரு தரப்பினரும் அதை அப்படியே வைத்திருக்க ஒப்புக்கொண்டால் அதை நிர்வகிக்க முடியும். இது ஆப்கானிஸ்தானுக்கு ஒரு உணர்ச்சிபூர்வமான பிரச்னை.” எனவும் அவர் தெரிவித்தார்.
பட மூலாதாரம், Getty Images
“துராந்த் கோடு” குறித்து என்ன பிரச்னை?
பிரிட்டிஷ் ஆட்சியின் போது ஆப்கானிஸ்தானுக்கும் பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் இடையில் வரையப்பட்ட துராந்த் கோட்டை ஆப்கானிஸ்தான் ஏற்கவில்லை. ஆப்கானிஸ்தானை ஆண்ட ஒவ்வொரு அரசாங்கமும் இந்தக் கோட்டை ஏற்க மறுத்துவிட்டன.
மறுபுறம், பாகிஸ்தான் இதை துராந்த் கோடு அல்ல, சர்வதேச எல்லை என்று அழைக்கிறது. இந்த எல்லை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்று அவர்கள் கூறுகின்றனர்.
பிரிவினைக்கு முந்தைய இந்தியாவின் வடமேற்குப் பகுதிகள் மீதான தனது கட்டுப்பாட்டை வலுப்படுத்த 1893 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசாங்கம் ஆப்கானிஸ்தானுடன் 2640 கி.மீ நீள எல்லையை வரைந்தது.
இந்த ஒப்பந்தம் காபூலில் அப்போதைய பிரிட்டிஷ் இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராக இருந்த சர் மோர்டிமர் துராந்துக்கும் அமீர் அப்துர் ரஹ்மான் கானுக்கும் இடையே கையெழுத்தானது.
ஆனால் யார் ஆப்கானிஸ்தானை ஆட்சி செய்தாலும், துராந்த் கோட்டை ஒரு சர்வதேச எல்லையாகக் கருதுவதில்லை.
1923 ஆம் ஆண்டு மன்னர் அமானுல்லா முதல் தற்போதைய அரசாங்கம் வரை துராந்த் கோட்டைப் பற்றிய கருத்து இதுதான்.
1947 இல் பாகிஸ்தான் பிறந்த பிறகு, சில ஆப்கானிஸ்தான் ஆட்சியாளர்கள் துராந்த் ஒப்பந்தத்தின் செல்லுபடியை கேள்விக்குள்ளாக்கினர்.
பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தானின் எச்சரிக்கை
‘தெரிக் இ தாலிபன் பாகிஸ்தான்'(டிடிபி) அமைப்பின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆப்கானிஸ்தானை ஆளும் தாலிபன் அரசை பாகிஸ்தான் பல ஆண்டுகளாக கேட்டுக் கொண்டு வருகிறது. இந்த கோரிக்கை சமீப நாட்களில் ஆழமடைந்துள்ளது.
பாகிஸ்தான் வீரர்கள் மற்றும் பொதுமக்கள் மீது டிடிபி அமைப்பினர் தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது. பாகிஸ்தானில் பல தீவிரவாத தாக்குதல்களில் ஆப்கானிஸ்தான் நாட்டினர் ஈடுபட்டுள்ளதாகவும் அது குற்றம் சாட்டியுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் அரசாங்கத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளை தலிபன்கள் நிராகரித்ததோடு, ‘இது பாகிஸ்தானின் உள் விவகாரம்’ என்று கூறியுள்ளனர்.
பேராசிரியர் தனஞ்சய் திரிபாதி கூறுகையில், “தெஹ்ரீக்-இ-தலிபன்களுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தான் விரும்புகிறது, இது தாலிபன்களுக்கு எளிதாக இருக்காது என்று நான் நினைக்கிறேன். இருவருக்கும் இடையே ஒரு சித்தாந்த தொடர்பு உள்ளது, மேலும் டிடிபி தாலிபன்களுக்கு நிறைய உதவியுள்ளது, குறிப்பாக அவர்கள் அமெரிக்காவுடன் சண்டையிட்டபோது.”
இதற்கிடையில், சமீப காலமாக பாகிஸ்தான் தனது எல்லை மற்றும் வான்வெளியை மீறியதாக ஆப்கானிஸ்தான் குற்றம் சாட்டி வருகிறது.
இதில் சிலவற்றை பாகிஸ்தான் ஒப்புக்கொண்ட நிலையில், அதே வேளையில் மற்றவற்றை மறுத்துள்ளது.
அக்டோபர் 8 ஆம் தேதி, பாகிஸ்தான் ராணுவத்தின் மக்கள் தொடர்புத் துறை வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘அக்டோபர் 7 மற்றும் 8ம் தேதிகளில் உளவுத்துறை தகவல்கள் அடிப்படையிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு ஒராக்ஸா பகுதியில் 19 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக’ தெரிவித்தது.
அக்டோபர் 8 ஆம் தேதியே, பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிஃப் நாடாளுமன்றத்தில், அரசாங்கத்திற்கும் ராணுவத்திற்கும் பொறுமை தீர்ந்துவிட்டதாகவும், தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தவர்கள் இப்போது விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் கூறியிருந்தார்.
பாகிஸ்தானுக்கும் தாலிபனுக்கும் இடையிலான பரஸ்பர புரிதலும் நம்பிக்கையும் முற்றிலுமாக முடிவுக்கு வந்துவிட்டதாக பேராசிரியர் தனஞ்சய் திரிபாதி நம்புகிறார்.
“இரு தரப்பினருக்கும் இடையே நடந்து வரும் பதற்றத்தில் பாகிஸ்தான் நிதானத்தைக் காட்ட வேண்டும், ஏனெனில் அதுதான் முதலில் தாக்கியது. மேலும், தாலிபன் சண்டையிடுவதன் மூலம் மட்டுமே உருவாக்கப்பட்டது. சண்டையிடாமல் அதற்கு இருப்பு இல்லை.” என்கிறார்.
எல்லையில் சமீபத்திய சூழல் என்ன?
பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள சாமன் நகரில், இரு நாடுகளுக்கும் இடையிலான ‘நட்பு வாயில்’ (Friendship Gate) தற்போது மூடப்பட்டுள்ளதாகவும், அதன் அருகில் யாரும் செல்ல அனுமதிக்கப்படவில்லை என்றும் பிபிசி உருது செய்தியாளர் ரியாஸ் சோஹைல் நேரில் பார்த்திருக்கிறார்.
நட்பு வாயிலை பாகிஸ்தான் அழித்ததாக ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் குற்றம் சாட்டுகின்றனர். இருப்பினும், பாகிஸ்தானின் அரசு தொலைக்காட்சி சேனலான பிடிவி (PTV) இதை மறுத்துள்ளது.
‘ஆப்கானிஸ்தான் தாலிபன்கள் வெடிபொருட்களால் வாயிலை அழித்ததாக’ அந்த தொலைக்காட்சி கூறியுள்ளது.
இங்கே, எல்லைப் பகுதியில் உள்ள வேலியைச் சுற்றி பாகிஸ்தான் டாங்கிகள் காணப்படுகின்றன.
அருகிலுள்ள காளி ஜனான் கிராமத்தில் இளைஞர்கள் மட்டுமே காணப்படுவதாக ரியாஸ் சோஹைல் கூறியுள்ளார்.
பாகிஸ்தானின் எல்லை நகரமான சமனின் ஒரு மில்லியன் மக்கள் தொகை, எல்லை தாண்டிய வர்த்தகத்தையே சாந்துள்ளது.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெங்காயம், தக்காளி, திராட்சை, நிலக்கரி மற்றும் ஆப்பிள் போன்ற பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன.
அதேசமயம், அரிசி, காய்கறிகள், மருந்துகள், சிமென்ட், மோட்டார் சைக்கிள்கள், டிராக்டர்கள் மற்றும் பல பொருட்கள் பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
தற்போது பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான இந்த வர்த்தகம் முடக்கப்பட்டுள்ளது.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு