படக்குறிப்பு, பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளில் ஆப்கானிஸ்தான் நேற்று தாக்குதல் நடத்தியது.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் எல்லையில் பயங்கர தாக்குதல் நடந்துள்ளது. நள்ளிரவில் நடந்த தாக்குதலுக்கு இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருகின்றனர்.
எந்தவொரு தூண்டுதலும் இல்லாமல் ஆப்கன் தாலிபன் ராணுவம் அதன் கூட்டாளிகளுடன் இணைந்து சனிக்கிழமை இரவு பல பாகிஸ்தான் எல்லைச் சாவடிகளை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. பீரங்கி மற்றும் வான்வழித் தாக்குதல்கள் மூலம் பதிலடி கொடுத்ததாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்தது.
பாகிஸ்தான் படைகள் 21 ஆப்கன் எல்லைகளைக் கைப்பற்றியதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட பயன்படுத்தப்பட்ட பயங்கரவாத பயிற்சி தளங்கள் என்று அவர்கள் குறிப்பிட்ட இடங்களை அழித்ததாகவும் இஸ்லாமாபாத்தில் உள்ள அதிகாரிகள் தெரிவித்தனர்.
பதில் தாக்குதலில் “200-க்கும் மேற்பட்ட தாலிபன் மற்றும் கூட்டாளி வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 23 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
இருப்பினும் 58 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டதாக தாலிபன் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். ஆப்கானிஸ்தானின் வான்வெளியை மீறி வியாழக்கிழமை காபூலுக்கு அருகே உள்ள சந்தைப் பகுதியில் பாகிஸ்தான் குண்டுவீசியதாக அவர் குற்றம் சாட்டினார்.
பாகிஸ்தான் ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி, வான்வழித் தாக்குதல்கள் குறித்த கேள்விகளுக்கு நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால் “பாகிஸ்தான் மக்களின் உயிரைப் பாதுகாக்க தேவையானவற்றை நாங்கள் செய்கிறோம். தொடர்ந்து செய்வோம்.” எனக் கூறினார். பாகிஸ்தானுக்கு எதிரான பயங்கரவாதத்திற்காக அவர்களின் எல்லை பயன்படுத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என ஆப்கானிஸ்தானிடம் அவர் வலியுறுத்தினார்.
தாலிபன் ஆட்சிக்கு பிறகான பயங்கர மோதல்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) உறுப்பினர்களுக்கு தாலிபன் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியது.
2021ஆம் ஆண்டு தாலிபன்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இரு அண்டை நாடுகளுக்கும் இடையே நடக்கும் மிகக் கடுமையான மோதல்களில் ஒன்று இந்த சமீபத்திய மோதல் ஆகும்.
பாகிஸ்தானுக்குள் தீவிர தாக்குதல்களை நடத்திய தெஹ்ரீக்-இ-தாலிபன் பாகிஸ்தான் (TTP) உறுப்பினர்களுக்கு, தாலிபன் அடைக்கலம் கொடுப்பதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டுவதால், இருநாட்டு உறவுகள் படிப்படியாக மோசமடைந்துள்ளன. இந்தக் குற்றச்சாட்டை தாலிபன் மறுக்கிறது.
பிபிசியிடம் பேசிய ஆய்வாளர் அமீர் ஜியா, இந்த மோதலை தேவையற்ற மோதல் எனவும் இரு தரப்பின் ராஜதந்திரத்தின் தோல்வி என்றும் குறிப்பிடுகிறார். பாகிஸ்தானின் நியாயமான பாதுகாப்பு கவலைகளை தாலிபன் அரசு கவனிக்கவில்லை என்றார். ஆனால் பாகிஸ்தான் நீண்ட காலமாக ஒற்றை புள்ளி கோரிக்கையுடனே இருந்ததாகவும் அவர் வாதிடுகிறார்.
“பல தசாப்தங்களாக, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் தாலிபன்களுக்கான ஆதரவை தேசிய நலன் சார்ந்த விஷயமாகக் கருதி வந்தது” என்று அவர் கூறினார்.
“கடந்த காலத்திலும் சரி, இப்போதும் சரி, நாம் எங்கே தவறு செய்தோம் என்று பார்க்க வேண்டும். அவர்களை நன்றியற்றவர்கள் என்று அழைப்பது போன்ற கடுமையான மொழியைப் பயன்படுத்துவது பிளவை ஆழப்படுத்தும்.” என்றார்.
ஆப்கானிஸ்தானும் பாகிஸ்தானும் டுராண்ட் கோடு எனப்படும் 2,600 கிலோமீட்டர் எல்லையைப் பகிர்ந்துள்ளன.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் பகிரும் டுராண்ட் கோடு.
பல மாதங்களாக இருந்த ராஜதந்திர நெருக்கடிக்குப் பிறகு, இரு அண்டை நாடுகளுக்கும் இடையிலான அமைதியற்ற உறவு மீண்டும் வெளிப்படையான மோதலின் விளிம்பில் வந்து நிற்கிறது என்பதை இந்த சமீபத்திய மோதல் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
ஆகஸ்ட் 2021-ல் தாலிபன்கள் காபூலைக் கைப்பற்றியதில் இருந்து பாகிஸ்தானுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையிலான பதற்றங்கள் அடிக்கடி வெடித்தன.
தங்களின் மேற்கு எல்லையை உறுதிப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும், TTPயின் தாக்குதல்களைக் கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையிலும் பாகிஸ்தான், தாலிபன்களின் வருகையை முதலில் வரவேற்றது.
TTP என்பது ஆப்கானிஸ்தான் தாலிபனுடன் சித்தாந்த ரீதியாக இணைந்த ஆனால் பாகிஸ்தான் அரசை வீழ்த்துவதில் கவனம் செலுத்தும் குழு ஆகும்.
மாறி மாறி குற்றச்சாட்டு
பட மூலாதாரம், Getty Images
மாறாக வன்முறை அதிகரித்துள்ளது. எல்லைக்கு அப்பால் இருந்து நடத்தப்பட்ட TTP தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான வீரர்கள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தான் கூறுகிறது. ஆப்கன் அதிகாரிகள், தங்களுடைய நிலப்பரப்பில் இருந்து வீரர்கள் செயல்பட அனுமதி அளித்ததாக கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளனர்.
இத்தகைய குற்றச்சாட்டுகள் அரசியல் நோக்கத்துடன் சொல்லப்படுபவை என கூறுகின்றனர்.
சமீபத்திய ஆண்டுகளில், டுராண்ட் கோட்டின் வேலி அமைப்பதில் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்படுகிறது. சாமன், குர்ரம் மற்றும் பஜௌர் போன்ற பகுதிகளில் எல்லை தாண்டிய தூப்பாக்கிச் சூடுகள் அடிக்கடி நிகழ்கின்றன. இதனால் அவ்வப்போது முக்கிய வர்த்தகங்கள் மூடப்படுகின்றன.
பரஸ்பர அவநம்பிக்கை, பொருளாதார நெருக்கடி மற்றும் உரிய பாதுகாப்பு நெறிமுறை இல்லாமை ஆகியவை ஒரு காலத்தில் செல்வாக்குக்கான ரகசியப் போராட்டமாக இருந்த ஒன்றை வெளிப்படையான விரோதமாக மாற்றியுள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆய்வாளர்கள் சொல்வது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தாலிபன்களை விட செல்வாக்கு மிக்க நாடுகளிடம் பாகிஸ்தான் உதவியை நாடலாம் என்கிறார் ஜியா
இஸ்லாமாபாத்தை சேர்ந்த பாதுகாப்பு ஆய்வாளரான இம்தியாஸ் குல், இந்த வன்முறை மாதக் கணக்கில் நடந்த பதற்றத்தின் தர்க்கரீதியான விளைவு என்கிறார்.
“பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல்களை முன்னெடுத்து வரும் TTP-க்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்க ஆப்கானிஸ்தான் ஆட்சி மறுப்பது, பாகிஸ்தானுக்கு குறைந்த வாய்ப்புகளையே அளிக்கிறது” என்று அவர் கூறினார்.
“தாலிபன்களை விட செல்வாக்கு மிக்க சீனா, சௌதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து பாகிஸ்தான் ராஜதந்திர உதவியை நாட வேண்டும்” என்று ஜியா யோசனை கூறினார்.
பாகிஸ்தானும் சௌதி அரேபியாவும் சமீபத்தில் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. அதில் இரு நாடுகளில் எந்த நாடு மீது தொடுக்கப்படும் தாக்குதலும், இருநாடுகள் மீதான தாக்குதலாக கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
“இந்த நெருக்கடி, பிரச்னைக்கு சரியான காரணத்தை உருவாக்கியுள்ளது” வாஷிங்டன் டிசியில் உள்ள தெற்காசிய ஆய்வாளர் மைக்கேல் குகல்மேன் கூறுகிறார். மேலும் “பாகிஸ்தான் ராணுவத்தை நேரடியாக எதிர்த்துப் போராடும் திறன் தாலிபன்களுக்கு இல்லை” என்றார்.
“இந்த பழிவாங்கும் நடவடிக்கைகள் பொதுமக்களின் கோபத்தைத் தணித்தவுடன் அவர்கள் பின்வாங்க வாய்ப்புள்ளது.” என்றும் அவர் தெரிவித்தார்.