பட மூலாதாரம், Sefa Karacan/Anadolu via Getty
ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் நடத்திய வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, தாலிபான் பாதுகாப்பு அமைச்சகம் தங்கள் ராணுவப் படைகள் ‘ சனிக்கிழமை இரவு பதிலடி தாக்குதலை’ நடத்தியதாகத் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மீண்டும் ஆப்கானிஸ்தான் வான் எல்லையில் அத்துமீறினால், “உறுதியுடன் பதிலடி” கொடுக்கப்படும் என்று தாலிபனின் பாதுகாப்பு அமைச்சகம் எச்சரித்துள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் ஆப்கானிஸ்தான் தாக்குதல் நடத்தியதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளதாக பிபிசி உருது குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை ஆப்கானிஸ்தான் எல்லையில் தாலிபன் நிலைகளுக்கு எதிராக “பெரிய பதிலடி தாக்குதலை” நடத்தியதாக பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
இரு நாடுகளின் பாதுகாப்பு அதிகாரிகளை மேற்கோள் காட்டி, சனிக்கிழமை இரவு எல்லையில் பல இடங்களில் மோதல்கள் நடந்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள ராணுவ வட்டாரங்களும் இந்த மோதல்களை பிபிசி உருதுவிடம் உறுதிப்படுத்தின.
ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் இடையிலான பதற்றத்தின் காரணமாகப் பிராந்தியத்தில் அமைதியின்மை மற்றும் ஸ்திரமின்மை ஏற்படும் என்று நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்தப் பதற்றம் ஒரு பெரிய மோதலாக மாறுவதற்கு முன்பாக, “செல்வாக்கு மிக்க நாடுகள் பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க” வேண்டிய அவசியம் உள்ளது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதற்கிடையில், செளதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்தும் விவாதம் எழுந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தின் கீழ், இந்த இரண்டு நாடுகளில் ஏதேனும் ஒன்று தாக்கப்பட்டால், அது இரு நாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றம் மற்றும் மோதல்கள் குறித்துத் தீவிர கவலை தெரிவித்து செளதி அரேபியாவின் வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இரு தரப்பினரும் நிதானத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று செளதி அரேபியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த விவகாரத்தைக் கவனித்து வருவதாகச் செளதிஅரேபியா கூறியுள்ளது.
தீவிரவாதம் குறித்த விவகாரத்தில் தாலிபானுக்கு அழுத்தம் கொடுக்கவே பாகிஸ்தான் காபூல் மீது வான்வழித் தாக்குதல் நடத்தியதாகச் சில நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், இந்தத் தாக்குதல் மூலம் தீவிரவாதத்தை தடுப்பதில் பாகிஸ்தான் வெற்றி பெறுமா என்பதே கேள்வி.
இந்த இரு நாடுகளுக்கு இடையேயான பதற்றம் அதிகரிக்க தூரந்த் எல்லைக் கோடு (Durand Line) குறித்த பிரச்சினையும் ஒரு காரணமாகும்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது வரையப்பட்ட ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டிஷ் இந்தியாவுக்கு இடையேயான இந்த எல்லைக் கோட்டை ஆப்கானிஸ்தான் ஏற்றுக்கொள்வதில்லை. தூரந்த் கோடு உருவானதில் இருந்து காபூலை ஆண்ட ஒவ்வொரு அரசாங்கமும் இந்த எல்லையை அங்கீகரிக்க மறுத்துவிட்டன.
‘காபூல் மீதான பாகிஸ்தானின் தாக்குதல் தவறு’
பட மூலாதாரம், Indian Ministry of External Affairs / Handout /Anadolu via Getty
பிபிசி செய்தியாளர் சினேகாவிடம் பேசிய இந்தியாவின் முன்னாள் ராஜதந்திரி வீணா சிக்ரி, இந்தத் தாக்குதலின் மூலம் தாலிபான் வெளியுறவு அமைச்சரின் இந்தியப் பயணம் குறித்து ஆப்கானிஸ்தான் மீதான தனது அதிருப்தியைப் பாகிஸ்தான் காட்டுகிறது என்றார்.
அத்துடன், பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை அவர் ‘தவறானது’ என்றும் கூறினார்.
“இஸ்ரேல் தோஹா மீது தாக்குதல் நடத்தியபோது மத்திய கிழக்கு நாடுகள் உட்பட சர்வதேச சமூகம் மிகவும் கோபமடைந்தது. எனவே, பாகிஸ்தான் காபூல் மீது தாக்குதல் நடத்தலாமா என்ற கேள்விக்கே இடமில்லை. பாகிஸ்தான் காபூல் மீது தாக்குதல் நடத்தியது தவறு. இது பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று வீணா சிக்ரி கூறுகிறார்.
“ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஏன் இந்தியாவுக்கு வந்தார் என்ற தங்கள் அதிருப்தியை ஒரு வகையில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தானுக்குத் தெரிவிக்கிறது.” என்றும் அவர் மேலும் கூறினார்.
செளதி அரேபியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே சமீபத்தில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்து செளதி அரேபியா இந்த பதற்றத்திற்கு எவ்வாறு பதிலளிக்கும் என்று வீணா சிக்ரியிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், “செளதி அரேபியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான பாதுகாப்பு உறவுகள் மிகவும் பழமையானவை. எனவே, இரு நாடுகளுக்கும் இடையே கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தத்தை வேறு வழியில் பார்க்கக்கூடாது. அதை ஒரு ‘பொருளாதார பரிவர்த்தனை’ ஒப்பந்தமாக மட்டுமே பார்க்க வேண்டும்” என கூறினார்.
“செளதி அரேபியா தனது தரப்பில் இருந்து எந்த நடவடிக்கையும் எடுக்கும் என்று நான் நினைக்கவில்லை. ஏனெனில் இந்தியா மற்றும் செளதி அரேபியாவிற்கு இடையே உறவுகள் உள்ளன. இதைத் தவிர, செளதி அரேபியாவிற்கு மற்ற நாடுகளுடனும் உறவுகள் உள்ளன. இந்தியாவுக்கும் செளதி அரேபியாவுக்கும் இடையிலான உறவுகள் பாதிக்கப்படாது என்று செளதி அரேபிய அரசாங்கம் கூறியுள்ளது,” என்றும் அவர் கூறினார்.
‘பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியம்’
ஆப்கானிஸ்தானுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் சல்மே கலீல்சாத், காபூலில் பாகிஸ்தானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்று ஆப்கானிஸ்தானில் கோரிக்கைகள் எழுந்துள்ளதாகவும், இதனால் ‘மோதல் மற்றும் ஸ்திரமின்மை’ அதிகரிக்கும் அபாயம் இருப்பதாகவும் கூறினார்.
“பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஐஎஸ்ஐ தலைவர் காபூலுக்குச் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இது ‘ஆப்கானிஸ்தான் அல்லது தெஹ்ரீக்-இ தாலிபான் பாகிஸ்தான் (டிடிபி) உடன் பேசும் விருப்பத்தின்’ அறிகுறியோ என்று நான் சந்தேகிக்கிறேன்,” என்று கலீல்சாத் தெரிவித்தார்.
இம்ரான் கான் அதிகாரத்தில் இருந்து நீக்கப்படாமல் இருந்திருந்தால், டிடிபி-யுடனான உடன்படிக்கை நிறைவேற்றப்பட்டு ஆயிரக்கணக்கான பாகிஸ்தானியர்களின் உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கலாம் என்றும் அவர் கூறினார்.
“இப்போதும் கூட, பாகிஸ்தான் ராஜதந்திரத்தைக் கடைப்பிடிக்க காலதாமதம் ஆகிவிடவில்லை. இருப்பினும், அதற்கான வாய்ப்பு குறைவாகவே தெரிகிறது,” என்று முன்னாள் அமெரிக்கத் தூதர் கூறினார்.
பெரிய மோதலைத் தடுக்க, செல்வாக்கு மிக்க நாடுகள் ‘பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்க’ வேண்டிய அவசியம் உள்ளது என்றும் கலீல்சாத் கூறுகிறார்.
தெற்காசிய விவகாரங்களுக்கான ஆய்வாளர் மைக்கேல் கூகல்மேன், பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் இடையேயான தற்போதைய சூழ்நிலையை ‘சிக்கலானது’ என்று விவரித்தார்.
“ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் தாக்குதல் மற்றும் தாலிபானின் பதிலடி நடவடிக்கை நிலைமையை மிகவும் சிக்கலாக்கியுள்ளது,” என்று அவர் கூறினார்.
“ஆப்கானிஸ்தான் இந்த எல்லைக்கோட்டை (தூரந்த்) ஏற்கவில்லை என்பதுடன், தற்போதைய நெருக்கடி குறித்துப் பரவி வரும் தவறான தகவல்களையும் சேர்த்தால், நிலைமை மிகவும் ஸ்திரமற்றதாகி விடுகிறது,” என்று கூகுல்மேன் கூறினார்.
ஆப்கனை தாக்கியது பாகிஸ்தானுக்கு லாபமா நஷ்டமா?
பட மூலாதாரம், Carolyn Van Houten/The Washington Post via Getty
சர்வதேச விவகாரங்களில் நிபுணரும் பிபிசி வேர்ல்ட் சர்வீஸின் மூத்த பத்திரிகையாளருமான தௌத் ஆஸ்மி, பிபிசி பஷ்டோவுக்கான ஒரு கட்டுரையில், இத்தகைய தாக்குதல்கள் மூலம் டிடிபி குறித்து ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கப் பாகிஸ்தான் விரும்புவதாக எழுதியுள்ளார்.
“பாகிஸ்தானின் கூற்றுப்படி, டிடிபி ஆப்கானிஸ்தானில் தீவிரமாக உள்ளது. மேலும், அங்கிருந்து இந்தியாவின் உதவியுடன் பாகிஸ்தானில் தாக்குதல்களை நடத்தி வருகிறது,” என்று தௌத் ஆஸ்மி கூறுகிறார்.
தாலிபன் அரசாங்கம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. மேலும், பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களை அதன் உள்நாட்டு விவகாரம் என்றும் கூறுகிறது. அத்துடன், பாகிஸ்தான் தானே இதற்குத் தீர்வு காண வேண்டும் என்றும் தாலிபான் அரசாங்கம் வலியுறுத்துகிறது.
“பாகிஸ்தானில் பாதுகாப்புப் படையினர் மீது அடிக்கடி தாக்குதல்கள் நடப்பதால், அந்நாட்டு அதிகாரிகள் அழுத்தத்தில் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் தாக்குதல் நடத்துவதன் மூலம் அவர்கள் பதிலடி கொடுப்பதாக தங்கள் மக்களுக்கு காட்ட விரும்புகிறார்கள். ஆனால், இத்தகைய தாக்குதல்களால் பாகிஸ்தானுக்குப் பல எதிர்மறையான விளைவுகளும் ஏற்படலாம்,” என்று ஆஸ்மி எழுதுகிறார்.
இதனால் ஆப்கானிஸ்தான் பொதுமக்களிடையே மட்டுமல்ல, தாலிபன் ராணுவப் படைகள் மத்தியிலும் ‘பாகிஸ்தான் மீதான வெறுப்பும் கோபமும்’ அதிகரித்து வருகிறது என்று அவர் கூறுகிறார்.
“பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைகள் ஆப்கானியர்கள் மத்தியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் போரிடும் உத்வேகத்தை அதிகரிக்கின்றன. இது பாகிஸ்தான் தாலிபனுக்கு ஆப்கன் தாலிபன் தன்னார்வலர்களின் ஆதரவையும் அதிகரிக்கலாம்,” என்று அவர் கூறுகிறார்.
“மறுபுறம், இது தாலிபன் அரசாங்கத்திற்கு எதிராகப் பாகிஸ்தானுடன் ஒத்துழைக்க விரும்பும் ஆப்கானிஸ்தான் மக்களுக்கும் பிரச்னைகளை உருவாக்கும்.”
“ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபன் அரசாங்கம் பாகிஸ்தான் தாலிபனுடன் ஒத்துழைப்பதாகக் கூறப்படுவதை மறுக்கிறது. ஆனால், பாகிஸ்தானின் இத்தகைய தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் தாலிபன்களை நெருக்கமாக்கலாம்,” என்று டாக்டர் ஆஸ்மி கூறுகிறார்.
ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் தாக்குதல்கள் இந்தியாவுக்குக் கிடைத்த ‘பரிசு’ என்றும் அவர் கூறுகிறார்.
“பாகிஸ்தான் – இந்தியா இடையே ஏற்கனவே பதற்றம் நிலவுகிறது. இப்போது ஆப்கானிஸ்தானுடன் அதிகரித்து வரும் பதற்றத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் ஒரே நேரத்தில் இரண்டு முனைகளில் அழுத்தம் மற்றும் ஸ்திரமின்மையை எதிர்கொள்கிறது. இது பாகிஸ்தானின் ராஜதந்திரம், பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திற்குப் பல சவால்களை ஏற்படுத்தும்,” என்று அவர் கூறினார்.
காபூல் மீதான தாக்குதலின் நேரம் குறித்து விவாதம்
பட மூலாதாரம், Andrew Harnik/Getty
தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கி இந்தியப் பயணத்தைத் தொடங்கிய நாளில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இது அவரது இந்தியப் பயணத்தின் முதல் நாள்.
முத்தக்கியின் டெல்லி பயணத்தின் போது நடந்திருக்கும் இந்த தாக்குதல்களின் நேரம் குறித்து ஆப்கான் ஆய்வாளர்கள் மத்தியில் கவலை எழுந்துள்ளது. ஆப்கானிஸ்தான் அணுசக்தி திறன் கொண்ட அண்டை நாடுகளான இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே ஒரு ‘பினாமி மோதலின்’ (Proxy Conflict) களமாக மாறக்கூடும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆப்கானிஸ்தானின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ரங்கீன் தத்ஃபர் ஸ்பாந்தா தனது எக்ஸ் பக்கத்தில் எழுதுகையில், “ஆப்கானிஸ்தான் குறித்த இந்தியா மற்றும் பாகிஸ்தானின் கொள்கை அமைதியை நோக்கியதாக இல்லை, மாறாகப் பினாமி சக்திகளை முன்னோக்கி நகர்த்துவதாக உள்ளது என்று முத்தக்கியின் டெல்லி பயணத்திற்கு முன்பே நான் கூறியிருந்தேன்.”
“பாகிஸ்தான் முன்னர் தாலிபனின் விசுவாசமான கூட்டாளியாக இருந்தது. இப்போது இந்திய அரசாங்கத்தின் ஆதரவாளர்களில் ஒரு பகுதியினர் தாலிபனை ஆதரிக்கின்றனர். இந்தச் சண்டையில் நமது மக்கள்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்,” என்று அவர் கூறினார்.
ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் பிலால் சர்வேரியும் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியுள்ள நேரம் குறித்துக் கவனத்தை ஈர்த்து, பாகிஸ்தான் நடத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதல்களை போலல்லாமல் இந்தத் தாக்குதல் “தலைநகரின் இதயப் பகுதியில்” நடந்துள்ளது என்று கூறினார்.
“தாக்குதல் நடத்த இந்த நேரத்தைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் பாகிஸ்தான் நேரடியாக ஒரு செய்தியை அனுப்ப விரும்புகிறது. ஆப்கானிஸ்தான் மீதான பாகிஸ்தானின் செல்வாக்கை காட்டுவதுடன், இந்தியாவுடன் ஆப்கானிஸ்தானுக்கு அதிகரித்து வரும் நெருக்கம் குறித்து அதன் கவலையையும் இந்த தாக்குதல் உணர்த்துகிறது,” என்று அவர் எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு