பட மூலாதாரம், Sidra Ikram
சோகம் நிரம்பிய இந்தக் கதை 17 ஆண்டுகளுக்கு முன்பு பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தின் செக்டார் ஜி10இல் உள்ள ஒரு சாலையில் தொடங்கியது.
மழை பெய்து கொண்டிருந்தபோது, 10 வயது சிறுமியான கிரண் ஐஸ்கிரீம் தேடி வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்தார். அப்போது கிரணுக்கு ஐஸ்கிரீம் கிடைத்துவிட்டது, ஆனால் அவரது பெற்றோரும், அவரது குழந்தைப் பருவமும், அவரிடமிருந்து வெகு தூரம் சென்றுவிட்டது.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம், கஸூர் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்தவர் கிரண். கராச்சியில் உள்ள எதீ மையத்தில், பெற்றோர், சகோதரர்கள், உறவினர்கள் ஆகியோரிடம் இருந்து பிரிந்து, தனது வாழ்வின் பல கட்டங்களை அவர் கழித்துள்ளார்.
கிரணின் பெற்றோரையும், உடன் பிறந்தவர்களையும் கண்டுபிடிக்கப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன, ஆனால் எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
கிரணின் பெற்றோரும் உடன்பிறந்தவர்களும்கூட, அவர் திரும்பி வருவார் என்ற நம்பிக்கையை இழந்துவிட்டார்களோ என ஒரு கட்டத்தில் தோன்றியுள்ளது.
ஆனால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு, பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்களுக்கு கிரண் பற்றிய தகவல் கிடைத்தபோது இந்த ஏமாற்றம் மகிழ்ச்சியாக மாறியது.
கிரண் தனது பெற்றோரை சந்தித்தது எப்படி?
கிரணின் தந்தை அப்துல் மஜீத் மற்றும் குடும்பத்தின் பிற உறுப்பினர்கள் இந்த விஷயத்தை பற்றிப் பேச விரும்பவில்லை. ஆனால், அவர்களின் குடும்பத்துடன் தொடர்புடைய மூத்த நபரான அசாத் முனீர் இது குறித்த பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். கிரணின் மாமாதான் அசாத் முனீர்.
கஸூர் மாவட்டத்தில் உள்ள பாக்ரி கிராமத்தில் வசிக்கும் அசாத் முனீர் அந்தச் சம்பவம் குறித்து விவரித்தார். 17 ஆண்டுகளுக்கு முன்பு, கிரணுக்கு 10 வயது இருக்கும்போது, ”அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள ஜி10 செக்டாரில் உள்ள என் சகோதரி, அதாவது அவருடைய அத்தை வீட்டில் தங்கியிருந்தார். ஜி-10 பகுதி எங்கள் வீட்டிற்கு முன்னால் உள்ளது, அங்குதான் அவர் ஐஸ்கிரீம் வாங்கச் சென்றார். இது 2008இல் நடந்தது. அப்போது பலத்த மழை பெய்து கொண்டிருந்தது” என்று நினைவு கூர்ந்தார் அவர்.
“நீண்ட நேரமாகியும் கிரண் வீடு திரும்பாததால், அவரைத் தேடினோம், ஆனால் அவர் கிடைக்கவில்லை” என்கிறார் அசாத் முனீர்.
“அப்போது, கிரணை எல்லா இடங்களிலும் தேடினோம், ஆனால் கிரண் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை.” தான் ஐஸ்கிரீம் வாங்க வீட்டைவிட்டு வெளியேறியதாகவும், கனமழையில் வழி தவறிவிட்டதாகவும் கிரண் தெரிவித்தார்.
தனது வீட்டைத் தேடி நீண்ட நேரம் தெருக்களில் அலைந்ததாகவும், ஆனால் “வீட்டைக் கண்டுபிடிக்க முடியாததால், யாரோ என்னை இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார்கள்” என்றும் அவர் கூறுகிறார்.
“முதலில் நான் இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்தில் தங்க வைக்கப்பட்டேன். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு பில்கீஸ் எதி என்னை கராச்சியில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார். நான் அங்கு 17 ஆண்டுகள் தங்கினேன்” என்று கிரண் பகிர்ந்து கொண்டார்.
கராச்சியில் உள்ள எதி மையத்தைச் சேர்ந்த ஷபானா பைசல், கிரண் 17 ஆண்டுகளுக்கு முன்பு இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்திற்கு வந்ததாகக் கூறினார். இதுகுறித்துப் பேசுகையில், “யாரோ ஒருவர் அவரை அங்கே விட்டுச் சென்றிருக்கலாம், ஒருவேளை அவர் வழி தவறியிருக்கலாம்” என்று தெரிவித்தார்.
“அவர் சிறிது காலம் இஸ்லாமாபாத்தில் உள்ள எதி மையத்தில் தங்கியிருந்தார். இந்த நேரத்தில், பில்கீஸ் எதி, இஸ்லாமாபாத் எதி மையத்திற்குச் சென்றார். அங்கு கிரண் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதைக் கவனித்தார். எனவே அவர் கிரணை கராச்சியில் உள்ள எதி மையத்திற்கு அழைத்துச் சென்றார்.”
சில காலத்திற்கு முன்பு, பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்துடன் தொடர்புடைய ‘மேரா பியாரா’ குழு கராச்சியில் உள்ள எதி மையத்திற்குச் சென்றதாகவும், அவர்கள் கிரணை நேர்காணல் செய்து அவரது உறவினர்களைத் தேடும் பணியை மேற்கொண்டதாகவும் ஷபானா பைசல் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், Sidra Ikram
குடும்பத்தைக் கண்டறிய உதவிய நேர்காணல்
லாகூரில் உள்ள “மேரா பியாரா” திட்டத்தின் மூத்த காவல்துறை தகவல் தொடர்பு அதிகாரியாக சித்ரா இக்ரம் உள்ளார்.
பஞ்சாப் காவல்துறையின் நகரப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்ட “மேரா பியாரா” திட்டம், “காணாமல் போன குழந்தைகளை அவர்களது உறவினர்களுடன் மீண்டும் இணைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது” என்று அவர் விளக்கினார். ஒரு வருடத்திற்கு முன்பு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை 51,000 குழந்தைகள் தங்கள் பெற்றோருடன் மீண்டும் இணைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
டிஜிட்டல் வழிமுறைகளுக்கு அப்பாற்பட்டு, காவல்துறை ஆதாரங்களும் இந்த நோக்கத்திற்காகப் பயன்படுத்தப்படுகின்றன என்றும், “கைவிடப்பட்ட குழந்தைகள் வைக்கப்பட்டுள்ள வெவ்வேறு மையங்களில், எங்கள் குழுக்கள் நேர்காணல் செய்கின்றன. பின்னர் அந்த நேர்காணல்களில் இருந்து பெறப்பட்ட தகவல்களின் உதவியுடன், குழந்தையின் குடும்பத்தினரைத் தேடுகிறோம்,” என்றும் சித்ரா இக்ராம் கூறினார்.
கிரண் விஷயத்திலும் இதேதான் நடந்ததாக அவர் குறிப்பிட்டார்.
“எங்கள் குழுக்களில் ஒன்று கராச்சியில் உள்ள எதி மையத்திற்குச் சென்று, கிரணையும், கைவிடப்பட்ட மற்ற பிறரையும் நேர்காணல் செய்து தகவல்களைச் சேகரித்தது.”
“கிரணுக்கு பெரிதாக நினைவில்லை. அவர் கசூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இஸ்லாமாபாத்தில் தன் உறவினர்களுடன் தங்கியிருந்தார்.”
கிரண் தனது தந்தையின் பெயர் அப்துல் மஜித் என்பதையும் அவரது கிராமத்தின் பெயரையும் நினைவில் வைத்திருந்ததாக சித்ரா இக்ரம் கூறினார்.
“நாங்கள் இந்தத் தகவலை எங்கள் கசூர் அலுவலகத்திற்கு அனுப்பி, கிரணின் உறவினர்களைக் கண்டுபிடிக்க உதவுமாறு கேட்டுக் கொண்டோம்.”
அதுகுறித்துப் பேசிய கசூரில் உள்ள காவல் துறை தகவல் தொடர்பு அதிகாரி முபாஷ்ஷீர் ஃபயாஸ், “கிரண் குறித்த தகவல் எங்களுக்குக் கிடைத்தபோது, அதில் கிராமத்தின் பெயரும் தந்தையின் பெயரும் இருந்தது. அது அவரது குடும்பத்தைத் தேடுவதற்கு பெரிய உதவியாக இருந்தது” என்றார்.
பட மூலாதாரம், Sidra Ikram
‘ஒரே நாளில் பெற்றோரை கண்டுபிடிக்க முடிந்தது’
முபாஷ்ஷீர் ஃபயாஸ் அதுகுறித்துக் கூறுகையில், முதலில், “நாங்கள் அந்தப் பகுதியின் கிராம நிர்வாகத் தலைவரையும், அந்தப் பகுதியைச் சேர்ந்த முதியோரையும் தொடர்பு கொண்டோம். நாங்கள் அப்துல் மஜித் பற்றி விசாரித்தபோது, அங்கு பல அப்துல் மஜித்கள் இருப்பது தெரிய வந்தது. கிரணின் குழந்தைப் பருவ புகைப்படங்களை சிலருக்குக் காட்டினோம். ஆனால் அவர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை,” என்றார்.
“அப்துல் மஜித் என்ற பெயரில் உள்ள பலரையும் தொடர்பு கொள்வது சாத்தியம் இல்லை. சில நேரங்களில், காவல் நிலையங்களைச் சேர்ந்த பழைய காவல் அதிகாரிகள், காவலர்கள் மற்றும் காவல் நிலையங்களில் இருந்து கிடைக்கும் உதவிகளும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்த விஷயத்திலும், நாங்கள் அந்தப் பகுதி காவல் நிலையத்தைச் சேர்ந்த பழைய அதிகாரிகளைத் தொடர்பு கொண்டது பேருதவியாக இருந்தது. அப்போது அவர்களில் ஒருவர், சில ஆண்டுகளுக்கு முன்பு கிரண் என்ற பெண் காணாமல் போனதாகவும், அவரைப் பலர் தேடியதாகவும் எங்களிடம் கூறினார்” என்று அவர் கூறினார்.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாக அந்த அதிகாரி தங்களிடம் கூறியதாகவும் முபாஷ்ஷீர் ஃபயாஸ் தெரிவித்தார்.
“அதைத் தொடர்ந்து, அந்த அதிகாரி கிரண் இருக்கும் பகுதியை அடைய எங்களுக்கு உதவினார். அங்கு நாங்கள் மசூதிகளில் அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடு செய்தோம். அங்குள்ள முதியவர்களைச் சந்தித்தோம். அங்கிருந்து, அப்துல் மஜித் என்ற ஒருவரின் மகள் 17 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போனதை அறிந்தோம்” என்று குறிப்பிட்டார்.
மேலும், “எங்களது கடின உழைப்புக்குப் பலன் கிடைக்கத் தொடங்கியது. நாங்கள் அப்துல் மஜித்தை நெருங்கினோம், நாங்கள் அவரது பகுதியை அடைந்ததும், அங்கிருந்த பலருக்கும் கிரண் காணாமல் போனது நினைவுக்கு வந்தது. எங்களை அப்துல் மஜித்தின் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்” என்று நடந்ததை விவரித்தார்.
பட மூலாதாரம், Sidra Ikram
ஆனந்த கண்ணீர்
அப்துல் மஜீத்திடம் அவரது மகளின் குழந்தைப் பருவ புகைப்படங்கள் உள்படப் பல்வேறு புகைப்படங்களைக் காட்டியதாக முபாஷ்ஷீர் ஃபயாஸ் கூறுகிறார்.
“அவர்கள் எங்களுக்கு குடும்பத்தினர் இணைந்து எடுத்த புகைப்படத்தையும், கிரணின் அத்தியாவசிய தகவல்களைக் கொண்ட படிவம் பி-ஐயும் காட்டினர்.”
படிவம் பி என்பது பாகிஸ்தானில் குழந்தை பதிவுச் சான்றிதழ் என்றும் அழைக்கப்படுகிறது.
அப்துல் மஜீத்தான் கிரணின் தந்தை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை என்று அவர்கள் கூறினர். அதைத் தொடர்ந்து ஒரு வீடியோ கால் வந்தது, அதில் தந்தை, மகள் மற்றும் பிற உறவினர்கள் கிரணுடன் பேசிவிட்டு கராச்சிக்கு கிளம்பிச் சென்றனர்.
அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்த பிறகு, கிரண் அவரது தந்தையிடம் ஒப்படைக்கப்பட்டார். இறுதியில், நவம்பர் 25 அன்று அவர் வீடு திரும்பினார்.

கிரணின் மாமா அசாத் முனீர், தனது மருமகள் காணாமல் போனது குறித்துப் பேசுகையில், “கிரண் அப்துல் மஜித்தின் மூத்த மகள். இப்போது அவருக்கு கிரண் உள்பட ஐந்து குழந்தைகள் உள்ளனர். ஆனால் அவர் காணாமல் போனதில் இருந்து, அப்துல் மஜித்தின் கண்களில் எப்போதும் கண்ணீரை கண்டிருக்கிறேன்” என்று கூறுகிறார்.
மேலும், “அவர் தனது மகளைப் பற்றிக் குறிப்பிடும்போதெல்லாம், அவள் உயிருடன் இருக்கிறாளா இல்லையா என்று மட்டும்தான் கேட்பார். அவர் எப்போதும் தனது மகளின் நிலையைப் பற்றி கவலை கொண்டிருந்தார்” என்கிறார்.
“அவரது மகள் காணாமல் போன துக்கம் அவரை முன்கூட்டியே முதுமை அடையச் செய்துவிட்டதாகக் கூறிய அவர், அப்துல் மஜித் தனது மகளை அடையாளம் கண்டபோது, அதை முதலில் என்னிடம் பகிர்ந்து கொண்டார். முன்பு அவரது கண்களில் சோகக் கண்ணீரை பார்த்திருக்கிறேன். ஆனால் இப்போது ஆனந்த கண்ணீரைக் காண்கிறேன்” என்றும் அவர் தெரிவித்தார்.
உள்ளூர் ஊடகங்களிடம் பேசிய கிரண், தனது தந்தை மற்றும் உடன்பிறந்தவர்களுடன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி அடைவதாகக் கூறினார். சமையல், தையல் கலை மற்றும் கல்வி கற்றுக்கொண்ட பிறகு எதி மையத்தில் இருந்து வீடு திரும்பியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
“கடினமான காலங்களில் அவர்கள் என்னை முன்னேற ஊக்குவித்து, என் மன உறுதியை உயர்த்தினர். அது மிகப்பெரிய விஷயம்” என்கிறார் கிரண்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு