பட மூலாதாரம், Kutch (East) Police
2024 ஏப்ரல் மாதம் பஹல்காமில் சுற்றுலாப் பயணிகள் மீது தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான உறவுகள் மோசமடைந்துள்ளன.
இரு அண்டை நாடுகளுக்குமான உறவு தற்போது கசப்பானதாக இருந்தாலும், கடந்த புதன்கிழமை நடந்த ஒரு சம்பவம், காதல் எல்லைகளுக்கு அப்பாற்பட்டது என்றும், தேவைப்பட்டால் எந்த எல்லையையும் கடந்துவிடும் என்பதையும் குறிக்கிறது.
புதன்கிழமை காலை, ரான் ஆஃப் கட்ச் (இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான எல்லையில் அமைந்துள்ள சதுப்பு நிலங்களின் பகுதி) பகுதியில் உள்ள காதிர் தீவின் ரத்தன்பார் கிராம மக்கள், ஒரு இளம்பெண் மற்றும் இளைஞர் ஜோடியாக வந்ததைக் கண்டார்கள்.
அவர்களிடம் பேசிய போது, தாங்கள் இருவரும் காதலர்கள் என்றும், ‘தங்கள் காதலுக்காக’ பாகிஸ்தானை விட்டு வெளியேறி, அடைக்கலம் தேடி இந்தியாவிற்கு வந்ததாக தெரியவந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
அவர்கள் இருவருக்கும் சுமார் 16 வயது தான் இருக்கும். அந்த பதின்பருவ ஜோடி, இந்தியா-பாகிஸ்தான் எல்லையைக் கடந்து மூன்று நாள் கடுமையான பயணத்தை மேற்கொண்டுள்ளது. தங்கள் ‘காதல் இங்கே நிராகரிக்கப்படாது’ என்ற நம்பிக்கையில் கட்ச் எல்லைக்கு வந்துவிட்டனர்.
பட மூலாதாரம், Kutch (East) Police
பாகிஸ்தானின் தார்பர்கர் பகுதியை சேர்ந்தவர்கள்
எல்லை தாண்டி வந்த இந்த இளம் ஜோடி மீது காவல்துறை வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை, அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர், ஆனால் எதிர்வரும் நாட்களில் உளவுத்துறை உட்பட இந்தியாவின் பல்வேறு அமைப்புகள், இருவரிடமும் விசாரணை நடத்தும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
பாகிஸ்தானிலிருந்து வந்த அந்த சிறுவன் மற்றும் சிறுமியின் அடையாளங்களை பிபிசி வெளியிட முடியாது.
இந்த விவகாரம் குறித்து கட்ச் (கிழக்கு) காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் பாக்மரிடம் பிபிசி பேசியது. பாகிஸ்தானில் இருந்து வந்த இருவரிடமும் எவ்வித ஆதாரமும் இல்லை, ஆனால் தங்களுக்கு பதினாறு வயது என்றே இருவரும் கூறுகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
“அவர்கள் இருவரும் பாகிஸ்தானின் தார்பர்கர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வசிப்பவர்கள் என்றும், பில் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறுகிறார்கள். இந்த கிராமம் இந்தியா-பாகிஸ்தான் சர்வதேச எல்லையிலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் பாகிஸ்தானுக்குள் அமைந்துள்ளது” என்று சாகர் பாக்மர் கூறினார்.
“முதற்கட்ட விசாரணையில், ஒருவரையொருவர் காதலிப்பதாக இருவருமே கூறினார்கள். பெண்ணின் குடும்பத்தினர் இந்தக் காதலை ஏற்கவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக பையனின் குடும்பத்தினருக்கும் பெண்ணின் குடும்பத்தினருக்கும் பலத்த சண்டையும் ஏற்பட்டிருக்கிறது. குடும்பத்தினர் தங்கள் உறவை ஏற்காததால், இந்தியாவுக்கு தப்பிச் செல்ல முடிவு செய்து, மூன்று அல்லது நான்கு நாட்களுக்கு முன்பு கிராமத்தை விட்டு இருவரும் வெளியேறியிருக்கின்றனர்.”
பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள், வழிதவறி எல்லைத் தாண்டி இந்தியாவின் கட்ச் பகுதிக்கு வருவது அவ்வப்போது நடைபெறும் விஷயம் என்றாலும், இந்த வழக்கு அப்படியானது இல்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் பாக்மர் கூறினார்.
“தங்கள் கிராமத்திலிருந்து தப்பி வந்த பிறகு, இந்திய எல்லையை நோக்கிச் சென்றதாகவே இந்த ஜோடி கூறுகிறது. அவர்கள் வழி தவறியதால் இந்தியாவிற்கு வரவில்லை என்றும், ஆனால் இந்தியாவுக்கு வர விரும்பியதால்தான் எல்லையைக் கடந்து கட்சை அடைந்ததாகவும் அவர்கள் கூறுகிறார்கள்” என்று எஸ்பி சாகர் பாக்மர் மேலும் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
பாலைவனத்தைக் கடந்தது எப்படி?
அந்த ஜோடி இந்தியா – பாகிஸ்தான் எல்லையைக் கடந்ததுடன், கடினமான பாலைவனத்தையும் கடந்து, எல்லையிலிருந்து நாற்பது கிலோமீட்டர் தொலைவில் உள்ள காதிர் தீவிற்கு வந்தது ஆச்சரியம் அளிப்பதாக பிபிசியிடம் பேசிய சாகர் பாக்மர் கூறினார்.
கடந்த மாதம் பெய்த கனமழை காரணமாக, ரான் ஆஃப் கட்ச் பாலைவனப் பகுதி தற்போது நீரில் மூழ்கியிருக்கும் நிலையில், பாலைவனத்தின் கிழக்குக் கரையில் உள்ள காதிர் தீவை இருவரும் எவ்வாறு அடைந்தார்கள் என்பதை விளக்குகிறார் காவல்துறை அதிகாரி.
“தங்களது கிராமத்தை விட்டு வெளியேறும்போது இருவரும் குடிநீர் மற்றும் உணவை தங்களுடன் எடுத்து வந்ததாக விசாரணையில் தெரியவந்தது. வெள்ள நீரில் பாலைவனம் மூழ்கியிருந்ததால் தண்ணீரில் சிறிது தூரம் நீந்த வேண்டியிருந்தது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.”
பட மூலாதாரம், Getty Images
“தடுத்து வைக்கப்பட்ட அவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளோம்.” என காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் பாக்மர் கூறுகிறார்.
புதன்கிழமை காலை 11 மணியளவில், காதிர் தீவை அடைந்த பிறகு, ரத்தன்பார் கிராமத்திற்குள் பாகிஸ்தானை சேர்ந்த இந்த இருவரும் நுழைந்தபோது, கிராமத்தை சேர்ந்த சிலர் இவர்களைப் பார்த்துள்ளனர்.
அந்த இளைஞனும் பெண்ணும் சிந்தி மொழி பேசிய விதம், அவர்கள் கட்ச் பகுதியைச் சேர்ந்தவர்கள் அல்ல என்பதை ரத்தன்பார் மக்கள் உணர்ந்ததாகவும் அவர் கூறினார்.
“வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் என்பதை அறிந்த உள்ளூர் மக்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பிறகு, காதிர் காவல் நிலைய அதிகாரிகள் அங்கு சென்றனர். முதற்கட்ட விசாரணையில், சிறுவனும் சிறுமியும் பாகிஸ்தானின் தார்பர்கர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்று தெரியவந்தது” என்று சாகர் பாக்மர் கூறினார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த இந்த இளம் ஜோடியின் நிலை என்ன?
விசா இல்லாமல் இந்தியாவிற்குள் நுழைவது 1946ஆம் ஆண்டு இந்திய வெளிநாட்டினர் சட்டத்தின் கீழ் குற்றமாகும், இந்தக் குற்றம் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டால், அந்தக் குற்றத்திற்கு ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது ஐந்து லட்ச ரூபாய் வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். ஆனால் கட்ச் (கிழக்கு) காவல்துறை இந்த இருவர் மீதும் இதுவரை வழக்கு ஏதும் பதிவு செய்யவில்லை என்று காவல்துறை கண்காணிப்பாளர் சாகர் பாக்மர், பிபிசியிடம் தெரிவித்தார்.
“முதற்கட்ட விசாரணைக்குப் பிறகு, இந்தியாவின் பல்வேறு அமைப்புகள் அவர்களை விசாரிக்கும் வகையில், அவர்களை பூஜ் நகரில் உள்ள கூட்டு விசாரணை மையத்தில் ஒப்படைப்போம்” என்று அவர் கூறினார்.
கட்ச் எல்லைக்குள் நுழையும் பாகிஸ்தானிய குடிமக்கள் அல்லது பாகிஸ்தானிய குடிமக்களாக கருதப்படுபவர்கள், குற்றம் சாட்டப்படுவதற்கு முன்பு, கட்ச் மாவட்டத் தலைமையகமான பூஜ் கூட்டு விசாரணை மையத்தில் தடுத்து வைக்கப்படுகிறார்கள்.
பட மூலாதாரம், Reuters
நீதிமன்றம் அவர்களுக்கு தண்டனை விதித்தால், அவர்கள் கட்ச் அல்லது ஜாம்நகரில் உள்ள சிறைகளில் அடைக்கப்படுவது வழக்கம். தண்டனைக் காலம் முடிந்ததும், மீண்டும் கூட்டு விசாரணை மையத்தில் அடைக்கப்படுவார்கள். அத்தகைய நபரின் குடியுரிமையை, பாகிஸ்தான் உறுதி செய்த பிறகு, அந்த நபர் பாகிஸ்தானுக்குத் திருப்பி அனுப்பப்படுவார்.
சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவைச் சேர்ந்த இரண்டு ஆண்கள் பாகிஸ்தானில் வசிக்கும் பெண்களைச் சந்திக்க சர்வதேச எல்லையைக் கடந்து செல்ல முயன்றபோது பிடிபட்டனர் என்பதும் கவனிக்கத்தக்கது.
2024-ஆம் ஆண்டில், ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஒருவர் பாகிஸ்தானின் முல்தானில் வசிக்கும் ஒரு பெண்ணைச் சந்திக்க கட்ச் எல்லையைக் கடக்க முயன்ற போது, கவ்டா என்ற கிராமத்தில் காவல்துறையினரிடம் பிடிபட்டார்.
இதேபோல், 2020-ஆம் ஆண்டில், மகாராஷ்டிரா மாநிலத்தின் உஸ்மானாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர், பாகிஸ்தானில் வசிக்கும் தனது காதலியைச் சந்திப்பதற்காக எல்லையைக் கடக்கும் நோக்கத்துடன் மகாராஷ்டிராவிலிருந்து ரான் ஆஃப் கட்ச் வரை மோட்டார் சைக்கிளில் சென்றார் . ஆனால் அவர் சர்வதேச எல்லையிலிருந்து சுமார் ஒன்றரை கிலோமீட்டர் தொலைவில் இருந்தபோது, இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்களால் பிடிக்கப்பட்டார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு