பட மூலாதாரம், @ ChiefAdviserGoB
இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் 2025-ஆம் ஆண்டை டாக்கா பயணத்துடன் முடித்தார்.
டிசம்பர் 31 அன்று, முன்னாள் வங்கதேச பிரதமர் காலிதா ஜியாவிற்கு மரியாதை செலுத்த ஜெய்சங்கர் டாக்காவுக்கு சென்றார்.
ஜெய்சங்கரைத் தவிர, தெற்கு ஆசியாவின் பிற நாடுகளின் பிரதிநிதிகளும் அங்கே வந்திருந்தனர்.
இந்தப் பயணத்தின்போது, இந்திய வெளியுறவு அமைச்சர் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தின் கீழவை சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக்குடன் கைகுலுக்கினார்.
ஜெய்சங்கர் டாக்காவுக்கு மேற்கொண்ட குறுகிய பயணத்தில், அந்த கைகுலுக்கும் புகைப்படமே அதிகமாக பேசப்பட்டிருந்தது.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பல்வேறு வகையில் எடுத்துக்கொள்ளப்படுகிறது. குறிப்பாக, இந்திய வெளியுறவு அமைச்சர் தான் கைகுலுக்கலை தொடங்கிவைத்தவர் என்பதும் ஒன்று. ஆனால், டாக்கா பயணத்தின்போது ஜெய்சங்கர் தனது சமூக ஊடக பதிவுகளில் அயாஸ் சாத்திக்குடன் கைகுலுக்கிய சம்பவத்தை குறிப்பிடவில்லை.
இதற்கிடையில், பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி, கூட்டத்திற்குப் பிறகு X சமூக வலைதளத்தில் பல புகைப்படங்களை வெளியிட்டது. ஜெய்சங்கரே அயாஸ் சாதிக்குடன் கைகுலுக்க முன்வந்தார் என்று இந்தப் புகைப்படங்களைக் கொண்ட பதிவுகள் கூறுகின்றன.
சந்திப்பு குறித்து அயாஸ் சாதிக் என்ன கூறினார்?
காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கிற்கு முன் வங்கதேச நாடாளுமன்றத்தின் காத்திருப்பு அறையில் ஜெய்சங்கரை அவர் எவ்வாறு சந்தித்தார், அங்கு என்ன நடந்தது என்பதைக் குறித்து அயாஸ் சாதிக் விளக்கமாக கூறியுள்ளார்.
மே மாதத்தில் நடந்த போருக்குப் பிறகு, பாகிஸ்தானுடன் உயர் மட்ட தொடர்புகளை ஏற்படுத்தும் முயற்சியை இந்திய தலைமையே எடுத்ததாக அவர் கூறினார்.
காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கு பிரார்த்தனையில் பாகிஸ்தான் பிரதிநிதிதியாக தான் அங்கு சென்றதாக, பாகிஸ்தானின் ஜியோ செய்திகளுக்கு அயாஸ் சாதிக் தெரிவித்தார்.
“பாகிஸ்தான், மாலத்தீவு, நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் ஏற்கனவே ஒரு காத்திருப்பு அறையில் இருந்தனர். ஜெய்சங்கர் தலைமையிலான இந்தியக் குழு அங்கு வந்தபோது வங்கதேச அதிகாரிகளும் அங்கே இருந்தனர்” என்று அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், “அறைக்குள் நுழைந்தவுடன், ஜெய்சங்கர் முதலில் மற்ற பிரதிநிதிகளுக்கு வணக்கம் தெரிவித்தார். அதன் பின்னர் என்னை நோக்கி திரும்பி, கைகுலுக்கி உரையாடலைத் தொடங்கினார். அவர் என்னிடம் வந்தபோது, நான் வங்கதேசத்தில் உள்ள பாகிஸ்தானின் உயர் ஆணையருடன் பேசிக் கொண்டிருந்தேன். அவர் எனக்கு வணக்கம் கூறிவிட்டு, தன்னை அறிமுகப்படுத்தினார். நான் என்னை அறிமுகப்படுத்த முயன்றபோது, அவர் ‘உங்களை நான் அறிவேன், நீங்கள் அறிமுகப்படுத்த தேவையில்லை’ என்று கூறினார். இந்திய அமைச்சருடன் கேமராக்களும் இருந்தன. அதனால், அந்த உரையாடல் பதிவு செய்யப்படுகின்றது என்றும், அது ஊடகங்களில் செய்தியாக வெளியாகும் என்றும் ஜெய்சங்கர் முழுமையாக அறிந்திருந்தார் என்பது தெளிவாகப் புரிகிறது” என்று கூறினார்.
“அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதையும், இதற்கு ஊடக வெளிச்சம் கிடைக்கும் என்பதையும் முழுமையாக அறிந்தே அவர்கள் செயல்பட்டார்கள். அறையில் இருந்த அனைவரின் கவனமும் ஒரே உரையாடலின் மீதே இருந்ததாக எனக்குத் தோன்றியது. ஜெய்சங்கர் ஒரு கூர்மையான அரசியல்வாதி. அந்த தருணத்தின் முக்கியத்துவத்தையும், அதன் வெளிப்பாட்டுத் (optics) தன்மையையும் அவர் நன்றாக புரிந்துகொண்டார்” என்றும் சாதிக் தெரிவித்தார்.
வங்கதேச பயணத்தின்போது தனக்கு மிகவும் உற்சாகமும் அன்பும் நிறைந்த வரவேற்பு கிடைத்ததாக ஜியோ செய்திகளுக்கு சாதிக் தெரிவித்தார். அங்கிருந்த மக்கள் ‘பாகிஸ்தான் ஜிந்தாபாத்’, ‘ஐ லவ் பாகிஸ்தான்’ என்று கோஷங்கள் எழுப்பியதாகவும் அவர் கூறினார்.
பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளியின் சபாநாயகர், இறுதிச் சடங்கு நடைபெற்ற இடத்தில் தனது பயணத்தின் போது மக்கள் காட்டிய எதிர்வினையையும் குறிப்பிட்டார். தான் பயணம் செய்த வாகனத்தில் பாகிஸ்தான் கொடி பொருத்தப்பட்டிருந்தது என்று சொன்ன அவர், அந்த கொடியைப் பார்த்தவுடன், சாலையின் இருபுறங்களிலும் இருந்த மக்கள் கைகளை அசைத்து வரவேற்றதாகக் குறிப்பிட்டார்.
பட மூலாதாரம், @NAofPakistan
‘இந்தியா–பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஆர்வம் இல்லை’
ஜியோ டிவி நிகழ்ச்சி ஒன்றில், இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் அயாஸ் சாதிக்குக்கும் இடையே நடந்த கைகுலுக்கல் நிகழ்வை நீங்கள் எவ்வாறு பார்க்கிறீர்கள் என்று அமெரிக்காவுக்கான பாகிஸ்தானின் முன்னாள் தூதர் மலீஹா லோதியிடம் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த மலீஹா லோதி, “இந்த கைகுலுக்கல் நிகழ்வு, இந்தியா–பாகிஸ்தான் இடையேயான முடங்கிய நிலையை (deadlock) உடைக்கும் ஒன்றாக நான் கருதவில்லை. இது இயல்பாக நடந்த ஒரு விஷயம் என்றே நான் நினைக்கிறேன். இது திட்டமிட்டதாக இல்லை. இதில் எந்த அரசியல் முக்கியத்துவமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து கைகுலுக்கியிருக்கிறார்கள். அதற்குப் பொருள்படும் அரசியல் அர்த்தம் எதுவும் இல்லை” என்று கூறினார்.
“அணு நிலையங்களின் பட்டியல்களைப் பரிமாறிக் கொள்வதென்பது கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்றுவரும் ஒரு நடைமுறை. இந்த முறையும் அது நடந்துள்ளது. இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. இரு நாடுகளும் தங்களை பொறுப்புள்ள அணு சக்திகளாக காட்ட விரும்புகின்றன. அது நல்ல விஷயமே. இரு நாடுகளுக்கிடையில் போரும் இல்லை, அமைதியும் இல்லை. எங்கும் பதற்றம் தளர்வதை நான் காணவில்லை” என்றும் அவர் கூறினார்.
கிரிக்கெட் அணிகள் கூட ஒருவருக்கொருவர் கைகுலுக்காத அளவுக்கு இந்தியா – பாகிஸ்தான் உறவுகளில் தொடர்ச்சியாக பதற்றம் நிலவும் சூழலில், ஜெய்சங்கர் இவ்வாறு அயாஸ் சாதிக்கிடம் கைகுலுக்கியதை இந்தியாவின் அணுகுமுறை மாற்றமாக எடுத்துக் கொள்ளலாமா? என்று அவரிடம் கேட்கப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அவர், “இந்தியாவின் நிலைப்பாடு மென்மையடையவில்லை. மாறாக, இந்தியாவின் பாதுகாப்புத் துறை அமைச்சர் உட்பட பல தலைவர்கள் சமீபத்தில் கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளனர். அது பாகிஸ்தானை அச்சுறுத்தும் முயற்சி. நரேந்திர மோதி பிரதமராக இருக்கும் வரை, பாகிஸ்தான் மற்றும் இந்தியா இடையேயான பதற்றம் குறிப்பிடத்தக்க அளவில் குறையும் என்று நான் நினைக்கவில்லை.”
பாகிஸ்தானின் ‘தி எக்ஸ்பிரஸ் டிரிப்யூன்’ நாளிதழ், இரு நாடுகளும் தங்களது அணு நிலையங்களின் பட்டியல்களையும் கைதிகளின் பட்டியல்களையும் பரிமாறிக் கொண்டதாக எழுதியுள்ளது.
பொதுவான நீர்வளங்களைப் பற்றிய இந்தியாவின் நடவடிக்கைகள் குறித்த கவலைகள் காரணமாக, இரு நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வரும் நேரத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகதாக அந்த நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
“இந்த வழக்கமான தூதரக பரிமாற்றங்களுடன் சேர்ந்து, புதன்கிழமை டாக்காவில், இரு நாடுகளின் மூத்த பிரதிநிதிகள் இடையே அரிதான ஒரு பொது சந்திப்பும் நடைபெற்றது” என்று அந்த செய்தி கூறுகிறது.
அரசு மரியாதையுடன் நடந்த வங்கதேச முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஜியாவின் இறுதிச் சடங்கின்போது, பாகிஸ்தான் நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் சர்தார் அயாஸ் சாதிக் மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கைகுலுக்கியதைக் காண முடிந்தது.
எனினும், அந்தச் சந்திப்புக்கு எந்த அரசியல் முக்கியத்துவமும் வழங்க மறுத்த வெளியுறவுத் துறை, நேஷனல் அசெம்ப்ளி சபாநாயகர் அளித்த பொது விளக்கத்திற்குப் புறம்பாக இதுகுறித்து கருத்து தெரிவிக்க மாட்டோம் என்று தெரிவித்தது. ஒரு வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் இதை கூறினார்.
ஜெய்சங்கர் என்ன கூறினார்?
பட மூலாதாரம், ANI
இதற்கிடையில், வங்கதேச பயணத்திலிருந்து திரும்பிய ஜெய்சங்கர், ஜனவரி 2 அன்று சென்னை ஐ.ஐ.டி.யில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, அண்டை நாடுகளோடு நல்ல உறவு முறை இருக்கும்போது இந்தியா உதவுகிறது என்றும், மோசமான அண்டை நாடுகள் விஷயத்தில் தன் மக்களைப் பாதுகாக்க இந்தியாவுக்கு முழு உரிமை இருக்கிறது என்ரும் கூறினார்.
இந்தியாவின் ‘Neighbourhood First’ கொள்கை குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த எஸ். ஜெய்சங்கர்,
“அண்டை நாடுகள் மோசமானவையாக இருக்கலாம். துரதிருஷ்டவசமாக, நமக்கு அப்படித்தான் உள்ளது. உங்கள் அண்டை நாடுகள் மோசமானவையாக இருக்கும் போது… மேற்குப் பகுதியை நோக்கிப் பார்த்தால், ஒரு நாடு திட்டமிட்ட முறையில், தொடர்ந்து, எந்த வருத்தமும் இன்றி தீவிரவாதத்தை முன்னெடுக்க முடிவு செய்தால், அந்த தீவிரவாதத்திலிருந்து நம் மக்களை பாதுகாக்க நமக்கு உரிமை உள்ளது. அந்த உரிமையை நாங்கள் பயன்படுத்துவோம்” என்று அவர் கூறினார்.
கைகுலுக்கல் சர்ச்சை
ஜனவரி 2 அன்று, பாகிஸ்தானின் முன்னணி ஆங்கில நாளிதழான ‘டான்’ (Dawn), ஜெய்சங்கர் மற்றும் அயாஸ் சாதிக் இடையேயான கைகுலுக்கல் குறித்து ஒரு தலையங்கத்தை வெளியிட்டது.
அதில், “அது பிராந்தியம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய ஒரு கைகுலுக்கல். மூன்று நாடுகளிலும் கவனத்தை ஈர்த்த, சந்தேகத்திற்கிடமற்ற முக்கியமான ஒரு தருணம் அது. ஆனால், இந்திய ஊடகங்கள், இத்தகைய நிகழ்வுகளில் நடைபெறும் வழக்கமான மரியாதைச் செயலாகவே இதை வர்ணித்து, அதன் முக்கியத்துவத்தை குறைத்து காட்டின” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கிடையில், பாகிஸ்தான் ஊடகங்கள் நேஷனல் அசெம்ப்ளி வெளியிட்ட அறிக்கையை முன்னிறுத்தின. அந்த அறிக்கையில், மே மாதத்தில் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு, இரு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட முதல் உயர் மட்ட தொடர்பு இதுவே என குறிப்பிடப்பட்டது. மேலும், அந்த கைகுலுக்கலும் மரியாதை பரிமாற்றங்களும், வாழ்த்துடன் சாதிக்கை அணுகிய ஜெய்சங்கரால் தான் தொடங்கப்பட்டன என்றும் அந்த அறிக்கை வலியுறுத்தியது.
“இந்த விவகாரம் அதிக கவனம் பெற்றதற்கான ஒரு காரணம், இந்த காலகட்டத்தில் செய்தி அறைகளில் செய்திகளின் ஓட்டம் சற்றே மந்தமாக இருப்பதாய் இருக்கலாம். இன்னொரு காரணம், பாகிஸ்தான் – இந்தியா இடையே அடுத்ததாக என்ன நடக்கும் என்ற ஆர்வமாகவும் இருக்கலாம். ஆனால் தற்போதைய சூழ்நிலையில், ஒரு சாதாரண கைகுலுக்கலுக்கு அளவுக்கு மீறிய அர்த்தம் தேடத் வேண்டியதில்லை” என்று டான் பத்திரிகை எழுதியிருக்கிறது.
மேலும், “கைகுலுக்கல் குறித்த தேசிய சட்டமன்ற செயலாளர் அலுவலகத்தின் அறிக்கையில், ‘உரையாடல், கட்டுப்பாடு மற்றும் ஒத்துழைப்பு நடவடிக்கைகள்’ என்பவற்றை பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதை, உரையாடலுக்கான கதவு இன்னும் திறந்தே உள்ளது என்பதற்கான ஒரு சைகையாக புரிந்துகொள்ள முடியுமா? துரதிருஷ்டவசமாக, அண்டை நாட்டிலிருந்து வரும் கடுமையான பேச்சுத் தொனியிலும் நிலைப்பாட்டிலும் எந்தத் தளர்வும் காணப்படவில்லை. சந்தேகமின்றி, சூழ்நிலையை அமைதிப்படுத்த வேண்டிய அவசரத் தேவை உள்ளது. ஆனால் வெறும் கைகுலுக்கல்களும் மரியாதை வாழ்த்துகளும் மட்டும் அதனை சாதிக்க முடியாது. எந்தவொரு சமரசம் அல்லது பதற்றக் குறைப்பு போன்றவற்றை எதிர்பார்ப்பதற்கு முன், குறிப்பாக புது டெல்லியிலிருந்து, மிக உயர்ந்த மட்டத்தில் தீவிரமான முயற்சிகளும் தூதரக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.” என அந்த தலையங்கம் கூறுகிறது.

நிலையற்ற தன்மை
இதற்கிடையில், இஸ்லாமாபாதில் இயங்கும் வெளிநாட்டு கொள்கை ஆய்வாளர் முஸ்தஃபா ஹைதர் சயீத், “புதிய ஆண்டின் தொடக்கத்தில் ஜெய்சங்கர் மற்றும் அயாஸ் சாதிக் இடையே நடந்த இந்த உரையாடல் ஒரு வரவேற்கத்தக்க முன்னேற்றம் என்று நான் நினைக்கிறேன்.” என்று கத்தார் நாட்டின் ஊடகமான அல் ஜஸீராவிடம் கூறினார்.
மேலும், “உறவுகளின் அடிப்படை அம்சம் என்பது அதிகாரிகளை மதிப்பதும், கைகுலுக்குவதும் தான். இது மிகவும் சாதாரணமான ஒன்று. ஆனால் இந்தியா – பாகிஸ்தான் இடையேயான போருக்குப் பிறகு, துரதிருஷ்டவசமாக இது காணாமல் போயுள்ளது” என்றும் அவர் கூறினார்.
பாகிஸ்தானுக்கான அமெரிக்காவின் முன்னாள் தூதர் சர்தார் மசூத் கான், இந்த கைகுலுக்கலை ஒரு இனிமையான தூதரக மரியாதைச் செயல் என்று வர்ணித்துள்ளார். அல் ஜஸீராவிடம் பேசிய கான், “இந்திய பிரதமர் மற்றும் பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைமையின் வெளிப்படையான அனுமதியின்றி, இந்திய வெளியுறவு அமைச்சர் தன்னிச்சையாக பாகிஸ்தான் தேசிய சட்டமன்ற சபாநாயகரை வாழ்த்தி கைகுலுக்கியிருப்பார் என்று கற்பனை செய்வதே கடினம்” என்று கூறினார்.
ஐக்கிய நாடுகள் சபை மற்றும் சீனாவுக்கான பாகிஸ்தானின் தூதராகவும் பணியாற்றியுள்ள கான், “எந்த காரணத்தினால் நடந்ததாக இருந்தாலும், இது பிராந்தியத்திற்கு நல்லதே.” என்று கூறினார்.
இந்திய நாளிதழான ஹிந்துஸ்தான் டைம்ஸ்-இன் வெளிநாட்டு விவகார ஆசிரியர் ரெஸால் ஹசன் லஸ்கர், இந்த உரையாடலின் முக்கியத்துவத்தை குறைத்தே பேசினார்.
“அவர்கள் இருவரும் ஒரே அறையில் இருந்தார்கள். இத்தகைய சூழலில் இரண்டு நாடுகளின் மூத்த தலைவர்கள் செய்வதைப் போலவே அவர்கள் நடந்துகொண்டார்கள். கைகுலுக்கி, மரியாதை நிமித்தமாக வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டார்கள்,” என்று லஸ்கர் அல் ஜஸீராவிடம் தெரிவித்தார்.
மேலும், அந்த சந்திப்பின் அனைத்து புகைப்படங்களும் இந்தியாவிலிருந்து அல்லாமல், வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்குகளிலிருந்தே வெளியானது குறிப்பிடத்தக்கது என்றும் அவர் கூறினார்.
ஜெய்சங்கர் மற்றும் அயாஸ் சாதிக் இடையேயான இந்த கைகுலுக்கல், கடந்த ஆண்டு செப்டம்பரில் நடந்த ஒரு சம்பவத்துடன் தெளிவான மாறுபாட்டைக் காட்டியது.
அப்போது, ஆசியக் கோப்பை போட்டியின் போது, இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் மற்றும் அவரது அணியினர், பாகிஸ்தான் அணியினருடன் கைகுலுக்கவில்லை.
அந்தத் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. பரபரப்பான இறுதிப்போட்டியில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா கோப்பையை வென்றது. இந்த சம்பவம், இரு அண்டை நாடுகளுக்கிடையேயான பதற்றமான உறவை வெளிப்படுத்துவதாக அமைந்தது.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு